"ஜாக்ரதை" திமுக தம்பிகளே.. அறிவாலயம் + கமலாலயம்.. "அவர்" லேசுபட்டவர் இல்ல.. வார்னிங் தந்த "தலை"
திமுகவுக்கு பாஜக குறித்து பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: திமுக - காங்கிரஸ் உறவு சமீபகாலமாகவே, எப்படி இருக்கிறது? இதே கூட்டணி தொடருமா? என்பன போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்து வரும் நிலையில், பீட்டர் அல்போன்ஸ் பேசிய பேச்சு, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 3 மாத காலத்தை மட்டும் எடுத்து கொண்டால், திமுக மீது தமிழக காங்கிரசுக்கு லேசான வருத்தமும், கோபமும், அதிருப்தியும், தர்மசங்கடமும், நெருக்கடியும், இருக்கத்தான் செய்கிறது.
பிரதமர் மோடி சென்னை விழாவுக்கு வந்தபோது கூட, மாநில தலைவர் அழகிரி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்..

துரதிர்ஷ்டவசமானது
அதாவது, "பிரதமர் விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டிருக்க கூடாது... பிரதமரின் சுற்றுப்பயணத்தை தெலுங்கானா முதல்வர் புறக்கணித்தார்... பிரதமர் வந்தால் வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாமல் அரசு மேடைகளில் அரசியல் செய்கிறார் என்பதால், தெலுங்கானாவில் புறக்கணிக்கின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் விழாவில் கலந்து கொண்டது துர்திஷ்டவசமானது" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

ஆர்எஸ்எஸ்
ஏற்கனவே பேரறிவாளனை கட்டிப்பிடித்த விஷயத்தில் காங்கிரஸ் தரப்பு நொந்து போயுள்ள நிலையில், தீவிர ஆர்எஸ்எஸ்காரரான வெங்கையாடு நாயுடுவை வரவழைத்து, தீவிர ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளரான கருணாநிதிதியின் சிலையை திறக்க வைத்தது முதல், பட்டினப்பிரவேச விவகாரத்தில் பின்வாங்கியது வரை நேரடியாகவே பார்த்து நொந்து போய் உள்ளதாக தெரிகிறது..

மாய தோற்றம்
இப்படிப்பட்ட சூழலில்தான் 2 நாளைக்கு முன்பு, அழகிரி ஒரு பேட்டி தந்திருந்தார்.. "தமிழகத்தில் எங்கள் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியில் இருக்கிறது... ஆட்சிக்கு எதிராக, அதிமுக - பாஜக பேசுகிற காரணத்தால், அவை தான் எதிர்க்கட்சி பணியை செய்வதாக, ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.. அது உண்மையல்ல... நாங்களும் ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம். ஆட்சி எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கி சொல்கிற நல்ல நண்பர்களாக இருப்போம்... ஆட்சியால் ஏற்படும் சங்கடங்களையும் சொல்வோம்" என்று கூறியிருந்தார்.

பீட்டர் அல்போன்ஸ்
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே என்றாலும், இத்தனை வருட கூட்டணி காலத்தில், இதற்கு முன்பு ஒருபோதும் இப்படி சொன்னதில்லை என்பதால், இது திமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்தது. இப்போது ஒருபடிமேலே போய், அக்கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுகவை மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் எச்சரித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நல ஆணையர் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதாவது:

மாவு எங்கே?
"பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லுகிற புகார்கள் குறித்து, திராவிட முன்னேற்றக்கழக தம்பிகள் கவனமாக இருக்க வேண்டும்.. நம்மை ஊழல் என்று சொல்லிவிட்டு, அந்த ஊழல் என்ற பிரச்சாரத்திலே பின்பக்கமாக கதவை திறந்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள்.. அண்ணாமலை என்ன சொல்கிறார்? ஒரு சத்துணவு மாவே தயாரிக்காத ஆவின் நிறுவனத்தில் இருந்து ஏன் வாங்கவில்லை.. அது ஊழல் என்று சொல்லி, அதை பத்திரிகைகளிலே பிரமாதமாக படமாக போட்டு காண்பித்து, இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு நஷ்டஈடு என்று சொல்லி, பேனை பெருமாளாக்குவது என்று சொல்வார்களே, அதுபோல, ஒரு பெரிய ஊழல் பூதத்தை நம்மீது திணிக்கிறார்.. எனவே அண்ணாமலையின் புகார்களில், திமுக கவனமாக இருக்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.

ஓவர்டோஸ்
அதாவது, சொந்த கூட்டணிக்குள் ஆயிரம் சங்கடங்கள் இருந்தாலும், ஆயிரம் குமுறல்கள் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், திமுகவின் நலனில், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காட்டும் அதீத அக்கறை பாராட்டுக்குரியது.. என்றாலும், தமிழக நலன்கருதி, மத்திய அரசுடன் திமுக மேற்கொண்டு வரும் இணக்கமான போக்கும், "ஓவர்டோஸ்" ஆகிவிடக்கூடாதே என்ற கலக்கமும் திராவிட தலைவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது..!












Click it and Unblock the Notifications