தேமுதிக ஆபிசிலிருந்து.. தீவு திடலுக்கு விஜயகாந்த் உடல் மாற்றப்பட்டது ஏன்? ஸ்டாலின் எடுத்த முடிவு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நேற்று தேமுதிக அலுவலகத்தில் கோயம்பேட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவரின் உடல் வைக்கப்பட்ட இடம் தீவு திடலுக்கு மாற்றப்பட்டது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. இட நெருக்கடி காரணமாக தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத்திடலுக்கு விஜயகாந்தின் உடல் மாற்றப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தீவுத்திடலில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிற்பகல் 1 மணிக்கு விஜயகாந்தின் ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து புறப்படுகிறது. இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. விஜயகாந்தின் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறார் விஜயகாந்த். தீவுத்திடலில் வைக்கப்பட்ட உடல் பிற்பகல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
நள்ளிரவு முழுக்க தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். கேப்டன் கேப்டன் என கதறியவாறும் தலையில் அடித்துக் கொண்டும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். விடிய விடிய தொண்டர்களுக்கு விஜயகாந்த் குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனர்.
காரணம் என்ன?: நேற்று விஜயகாந்த் உடலை தேமுதிக அலுவலகத்தில் வைக்க காரணம்.. அது விஜயகாந்த் ஆசை என்று கூறப்படுகிறது. அங்கேதான் உடலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.
ஆனால் அதன்பின் அங்கே மக்கள் வர வர கூட்டம் அதிகம் ஆகி உள்ளது. கோயம்பேடு பாலம் வரை வாகனங்கள் வரிசை கட்டி நின்றுள்ளன. இதனால் பூந்தமல்லி, அண்ணா நகர் செல்லும் மக்கள் அங்கே சிக்கி உள்ளனர். அதேபோல் மக்கள் அஞ்சலி செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ராஜாஜி ஹாலில் விஜயகாந்த் உடலை வைக்க அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அங்கே புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. அப்படி இருக்கையில் அங்கே உடலை வைக்க முடியாது.
இதையடுத்து விஜயகாந்த் குடும்பத்திடம் நேரு ஸ்டேடியம் அருகே உடலை வைப்பது அல்லது தீவு திடல் கொண்டு செல்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. கடைசியில் தீவு திடலில் உடலை வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இரவோடு இரவாக விஜயகாந்த் குடும்பம் எடுத்த முடிவு.. ஸ்டாலின் தந்த அனுமதி ஆகியவை காரணமாக மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. இட நெருக்கடி காரணமாக தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத்திடலுக்கு விஜயகாந்தின் உடல் மாற்றப்பட்டு உள்ளது.
இரங்கல் அறிவிப்பு: விஜயகாந்த் மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கலில்,
▪️ அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.
▪️ நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.
▪️ தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர்.
▪️ தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.
▪️ தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது.
▪️ அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.
▪️ கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும், என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications