"ராஜதந்திரி".. செங்கோட்டையனின் "வெட்டுக்கிளிகள்".. எடப்பாடியின் அந்த "கறை".. கே.சி. பழனிசாமி அதிரடி
செங்கோட்டையன் பேட்டி குறித்து கேசி பழனிசாமி நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்
சென்னை: அதிமுக தனித்து போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் பேசியிருந்தது குறித்து, மூத்த தலைவர் கேசி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று பேசியிருந்தார்.
இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று கூறியிருந்தார்.

வெட்டுக்கிளிகள்
'அதிமுக கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். அதிமுகவால் தனித்து நிற்க முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகள் அதிமுகவை விட்டுச் சென்றாலும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது" என்று கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரான கேசி பழனிசாமி, நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் செங்கோட்டையனின் கருத்து குறித்தும், எடப்பாடியின் மெகா கூட்டணி குறித்தும் கேள்விகளை முன்வைத்தோம்.. கேசி பழனிசாமி நம்மிடம் சொன்னதாவது:

செங்கோட்டையன்
"எடப்பாடி & ஓபிஎஸ் இருவரையும், பாஜக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.. 2 பேருமே பாஜகவுக்கு கடன்பட்டவர்களாகவும், அடிமைப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்... ஆனால் தொண்டர்களுடன் இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, பாஜகவுடன் கூட்டணி என்பதை அவ்வளவாக ஏற்கவில்லை.. ஆனால், தங்களைதான் ஏற்க வேண்டும் என்று பாஜகவில் நெருக்குகிறார்கள்.. இதை எதிர்க்க அதிமுகவில் எந்த முன்னாள் அமைச்சர்களும் இல்லை, செங்கோட்டையன் உட்பட.. இன்னைக்கு செங்கோட்டையன் பேசலாம், ஆனால், செங்கோட்டையன் அளவுக்குகூட யாரும் பேசவில்லை என்பதே உண்மை..

கறை கரம்
எடப்பாடி பழனிசாமியாலும் பேச முடியாது.. செங்கோட்டையனாலும் இந்த அளவை தாண்டி, பாஜகவை எதிர்ப்போம் என்று என்னை போல பேச முடியாது.. இதுதான் ஒருவருக்கொருவர் இருக்கக்கூடிய வித்தியாசம்.. அதற்கு காரணம் என்னவென்றால், இவர்கள் எல்லாருமே கறைபடிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.. இவர்கள் மீதான வழக்குகள், விசாரணைகள், சிபிஐ, இப்போதுகூட 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் ஊழல் என்று எடப்பாடி மீது வழக்கு வந்துள்ளது.. அதனால் சூழ்நிலைக் கைதியாக இந்த இயக்கத்தில் அந்த முன்னாள் அமைச்சர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.. அதை கருத்தில் கொண்டு, எங்களால் தனித்து நிற்க முடியும் என்று செங்கோட்டையன் கருத்து சொல்லி உள்ளார்.

லேடி? மோடி?
பல வழக்குகள் இருந்தாலும்கூட மோடியா? லேடியா? என்று அம்மா துணிந்து நின்றார்.. அதை அம்மா நேரடியாகவே கேட்டார்.. வேற யாரையுமே வைத்து இப்படி அவர் பேசவைக்கவில்லை.. அந்த அளவுக்கு ஆளுமையும், அந்த தைரியமும், அந்த நேர்மையும், இன்னைக்கு இவர்கள்கிட்ட இல்லை.. அம்மா மேலயும் பல கேஸ்கள் இருந்தன.. ஆனால் கட்சி நலனா? தன் நலனா? என்று வந்தபோது, கட்சி நான் என்று முடிவெடுத்தார்கள்.. இவர்களை பொறுத்தவரை அதே கேள்விக்கு சொந்த நலன் என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்கள். அந்த ஆளுமை இன்று இவர்களுக்கு வந்திருந்தால், கட்சியில் இவ்வளவு குழப்பம் வந்திருக்காது..

அப்பாயிண்மென்ட்
ஓபிஎஸ்ஸை பார்த்து எடப்பாடி பயப்பட, எடப்பாடியை பார்த்து ஓபிஎஸ் பயப்பட, இவரை கவிழ்க்க அவரும், அவரை கவிழ்க்க இவரும் என மாறி மாறி பிரச்சனையை கிளப்பி, கடைசியில் கட்சியை கவிழ்த்துவிட்டார்கள். அமித்ஷாவை எடப்பாடி சந்திக்க போகவில்லை என்பதைவிட, எடப்பாடியை சந்திக்க அமித்ஷா விரும்பவில்லை என்றுகூட இதை எடுத்துக் கொள்ளலாம்.. பிரதமர் என்பவர் பொதுவாக இருந்துவிட்டு போய்விடுவார்.. அமித்ஷாதான் அனைத்து முடிவுகளை எடுப்பவர்.. அப்பாயிண்ட்மென்ட் ஏன் தரவில்லை என்று தெரியாது..

முனுசாமி
கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கும் பாஜகதான் காரணம் என்று ஒருமுறை சிவி சண்முகம் மேடையில் பேசினார்.. அன்னைக்கே ஓபிஎஸ் - எடப்பாடி இருவருமே கையெழுத்து போட்டு, அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள்.. ஆனால், அதே சிவி சண்முகத்தை அழைத்துக் கொண்டு, அமித்ஷாவை பார்க்க டெல்லிக்கு போனார் எடப்பாடி பழனிசாமி .. அதிமுக தோற்கவே பாஜகதான் காரணம், அதனால் டெல்லிக்கு வந்து அமித்ஷாவை சந்திக்க மாட்டேன், நான் ஒரு கொள்கைவாதி என்று சிவி சண்முகம் எடப்பாடியிடம் சொல்லலையே?

ராஜதந்திரம்
முனுசாமியை பொறுத்தவரை யாருமே நம்ப மாட்டார்கள்.. எந்த இடத்திலும் நம்பகத்தன்மை இல்லாதவர்.. தேவையில்லாமல் சில பிரச்சனைகளை இழுத்து கொண்டு வந்துவிடுவார்... எடப்பாடியின் குரலாக, வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், இவர்கள் யாராவது பேசுகிறார்களா? அவங்க பேசினால்தான், அது எடப்பாடியின் குரலாக எடுத்துக் கொள்ள முடியும்.. கேபி முனுசாமியை வைத்து பாஜகவை எடப்பாடி ஆழம் பார்க்கவில்லை.. அப்படி இருந்திருந்தால், அமித்ஷாவை சந்திக்க போகும்போது, முனுசாமியையும் அழைத்து சென்றிருப்பார்கள்..

ஆழம் பாக்குதா
ஆபத்தானவர்களை பக்கத்திலேயே வைத்திருப்பதுதான் ராஜதந்திரம்.. யாரால் பிரச்சனை வருமோ? யாரை நம்ப முடியாதோ, அவர்களைதான் பக்கத்திலேயே கண்காணிப்பிலேயே வைத்து கொள்வார்கள்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியே அடிப்படையில் நம்பகத்தன்மை அற்றவர்.. சசிகலா பாஜகவை எதிர்க்க மாட்டார்.. ஓபிஎஸ் பாஜகவிலேயே கிட்டத்தட்ட ஐக்கியமாகிவிட்டார்... எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பாஜகவிடம் மண்டியிட்டு இருக்கிறார்.. ஆனால் அதிமுக தொண்டர்கள்.. பாஜகவை எதிர்த்து களம் காண வேண்டும்.. அப்போதுதான், எம்ஜிஆர், அம்மா, இரட்டை இலையுடன்கூடய இந்த அதிமுகவை நாம் பாதுகாக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications