போயஸ் கார்டனில் நடந்த திடீர் மீட்டிங்.. ரஜினிகாந்த் உடன் துரை வைகோ சந்திப்பு.. நடந்தது என்ன?
சென்னை: மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, நடிகர் ரஜினிகாந்த்தை, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று மாலை சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

ரஜிகாந்த்துடன் துரை வைகோ சந்திப்பு: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில், 'வேட்டையன் ' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ. ரஜினிகாந்த், தமிழக மற்றும் இந்திய அரசியலை தொடர்ச்சியாக ஆழ்ந்து கவனித்து வருபவர். பல்வேறு தருணங்களில் அரசியல் கருத்துகளையும் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினி அரசியல்: நீண்டகாலமாக, தான் அரசியலுக்கு வருவதாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசி வந்தார் ரஜினிகாந்த். 1996 தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 'வாய்ஸ்' கொடுத்தார் ரஜினிகாந்த். "ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று கூறியிருந்தார் ரஜினி. ஆனால், 2001ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு, அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
பின்னர், பாபா திரைப்பட பிரச்சனையின்போது, 2004ல் பாமக போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமெனக் கூறினார் ரஜினி. ஆனால், திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, அந்த 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பின்னர் வெகுகாலம், போக்கு காட்டி கந்த ரஜினிகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியலில் வெற்றிடம் ஏற்பட்ட சூழலில் அரசியலுக்கு வர ஆயத்தமானார்.

பின்வாங்கிய ரஜினி: 2017ஆம் டிசம்பரில் தான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அறிவித்தார். ஆனால், அதற்குப் பிறகு கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் எதையும் அவர் துவங்கவில்லை. 2020 ஆண்டு டிசம்பர் மாதத்தில், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை. தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்." எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பாக, ரசிகர்களின் ரஜினி மீதான அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். தனது உடல்நிலையை மனதில்கொண்டு, இனிமேல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதற்குப் பிறகு அவருடைய ரஜினி மக்கள் மன்றமும் கலைக்கப்பட்டது.
சந்திப்பு - முக்கியத்துவம்: அதன் பிறகு, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் ரஜினிகாந்த் சந்திப்பதும், அவ்வப்போது விவாதங்கள் கிளம்புவதும் வாடிக்கையாக உள்ளது. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என பலரையும் சந்தித்துள்ளார் ரஜினி. இந்தச் சூழலில் தான், நேற்று துரை வைகோவை சந்தித்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்தச் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ரஜினி - துரை வைகோ சந்திப்பு பல்வேறு விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. எனினும், இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது தான் என துரை வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள விளக்க செய்திக்குறிப்பில், "நடிகர் ரஜினிகாந்த்தை 10.01.2024 மாலை சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ரஜினிகாந்த் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications