Nirmala Sitharaman: தமிழை காட்டுமிராண்டி மொழி என தந்தை பெரியார் சொன்னது ஏன்? கொளத்தூர் மணி விளக்கம்
சென்னை: தமிழை காட்டுமிராண்டி மொழி என விமர்சித்தவர் தந்தை பெரியார்; அவரது படத்துக்கு மாலை போட்டு வைத்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். தந்தை பெரியார், தமிழை காட்டுமிராண்டி மொழி என ஏன் சொன்னார் என தமது முந்தைய நேர்காணல் ஒன்றை பகிர்ந்து விளக்கம் தந்துள்ளார் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு எம்பிக்கள் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளை வாபஸ் பெற வைத்துவிட்டீர்கள்; ஆனால் தமிழை காட்டு மிராண்டி மொழி என விமர்சித்த பெரியார் படத்துக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறீர்களே.என கூறியிருந்தார்.
கொளத்தூர் மணி விளக்கம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் தரும் வகையில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தமது எக்ஸ் பக்கத்தில் தாம் டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பல பேர் பெயரை மட்டும் படித்து செய்தியைப் படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணம். மெக்காலே பற்றிய அவர்களின் புரிதலே தவறானது என்பது தான் எங்கள் கருத்து. அவர் 'மினிட் ஆன் இண்டியன் எஜுகேசன்' என்பதில் எழுதியிருக்கிறார். அவர் சொல்வது என்பது... அறிவியல் மனப்பான்மை அற்றவர்களாக இந்தியர்கள் இருக்கின்றார்கள். எடுத்துக்காட்டு ஒன்று சொல்கின்றார்... 'ஐரோப்பாவில் இருக்கும் தொடக்கப்பள்ளி மாணவனின் புத்தகத்தில் இருக்கும் அறிவியலை, ஒட்டு மொத்த பெர்சிய மொழி (அப்போது பாரசீக மொழியுமிருந்தது) சமஸ்கிருத மொழி நூல்கள் அத்தனையையும் சேர்த்தாலும் கொடுக்காது என்ற அளவுக்கு தான் அறிவியல் இல்லாத மொழியாக இந்திய மொழிகள் இருக்கின்றன என்று பார்த்து தான், அறிவியலைக் கற்றுக் கொள்வதற்கு ஆங்கிலத்தைக் கொண்டு வரவேண்டும்' என்று அவர் குறிப்பிடுகிறார்.
அறிவியல் மொழியாக்க வேண்டும்
அடுத்து அவர் சொல்லுகின்றார்... 'இதன் வழியாக அறிவியலை நாம் கொடுத்து, அறிவியல் மட்டுமல்லாமல் உலகப் பார்வை பெறவேண்டும், எல்லா தத்துவங்களையும் அறிந்துக் கொள்ள வேண்டும், தோற்றத்தில் இந்தியர்களாக இருந்தாலும், சிந்தனையில் ஐரோப்பியர்கள் அளவுக்கு வளரவேண்டும்' என்று. இது ஒரு பக்கம், இதை விட்டு விடுவோம். அடுத்து பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்கிறார்கள்.
தமிழுக்கு ஏற்பட்ட மாற்றங்கள்தான் எத்தனை?
தமிழுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்பது, எளிதாக கற்றுக்கொள்ள எளிய எழுத்து முறை வேண்டும் என்று சிந்தித்தவர் இலக்கண அறிவோ, இலக்கிய அறிவோ இல்லாத பெரியார்தான். மக்கள் மீது இருந்த அக்கறை - குழந்தைகள் மீது இருந்த அக்கறை. இதுவரை எந்த தமிழ்ப் புலவரும் இயக்கமும் எடுக்காத முயற்சி; மகாபாரதத்தைத் தமிழில் எழுதினார்கள், இராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பரை புகழ்ந்து கொண்டிருந்தார்களே தவிர, குறள் என்ற உயர்ந்த தமிழ் இலக்கியத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை யாருக்கு இருந்தது? பெரியாருக்குத்தான் இருந்தது. பெரியார்தான் திருக்குறள் மாநாடு கூட்டி, விளக்கி, மக்களிடம் எடுத்துச் சென்றது மட்டுமல்ல தங்கள் இயக்கத்தின் சார்பாக குறளை அச்சிட்டுக் குறைந்த விலையில் விற்று தமிழ்நாடு முழுக்க திருக்குறளைப் பரப்பினார். இது தமிழுக்கு சார்பான பார்வையா அல்லது எதிரான பார்வையா எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
கோபத்தால் பெரியார் சொன்னது
ஒரு பெற்றோர் அல்லது ஒரு தந்தை தன் மகனையோ, மகளையோ பார்த்து, தறுதலை என்று பேசுவது அவன் தறுதலையாகப் போகவேண்டும் என்ற விருப்பத்தில் அல்ல; உன்னை மாற்றிக் கொள் என்பதற்காக. பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகூட, தமிழ் அறிவியல் இல்லாத வெறும் மதமும் காதலும் மட்டுமே கொண்ட மொழியாக இருக்கிறது, அறிவியல் இல்லை என்ற கோபத்தால் வந்ததாக புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் பெரியார் கூட சொன்னார்... 'யாராவது அறிவியல் சார்ந்த, மக்கள் முன்னேற்றம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வந்தால் என் செலவில் அச்சிட்டு உங்களுக்கு சன்மானமும் கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று அறிவித்தவர் பெரியார்.
மொழிப்பற்று என்பது என்ன?
இறுதியில் 1972 ஆம் ஆண்டில் ஒன்றை சொன்னார்... 'மொழிப் பற்று என்பது ஒருவனுக்கு வேண்டும் நாட்டுப் பற்று வேண்டுமென்றால் மொழிப் பற்றும் வேண்டும்; ஒற்றுமைக்கு ஒரு மொழி தேவைப்படுகின்றது; சமஸ்கிருதம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டுதான் இந்தியா முழுவதும் இருக்கின்ற பார்ப்பனர்களிடையே ஒற்றுமை நிலவுகிறது. அது தமிழைக் கொண்டு நமக்கு ஏன் வரக்கூடாது' என்று 1972 ஆம் ஆண்டு பேசியிருக் கிறார். இளம் வயதில் ஆடை அணியாதவரை இறுதி வரை ஆடை அணியாதவர் என்று பேசுவதைப் போல, ஒரு காலத்தில் சொன்ன ஒரு சொல்லை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் மொழிக்கான கருத்து
தமிழை மக்களுக்கானதாக ஆக்கவேண்டும் என்று அவர் பார்த்தார்; ஆக்குவதற்கான சில முயற்சிகளாக எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தார்; தமிழை அழிக்க வந்த இந்தியை எதிர்த்துப் போராடினார்; குறளை முன் வைத்தார். ஆனால் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று புரியவில்லை. ஒற்றைச் சொல்லை எடுத்துக் கொண்டு, அதற்கு பின்னால் இருக்கும் எதையும் பார்க்காமல் பேசுபவர்களாகத் தான் இவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications