சண்முகத்தை பார்த்ததும்.. கட்டியணைத்து அப்படியே நெகிழ்ச்சி.. சிங்கப்பூரில் ஸ்டாலின் அடித்த 6 சிக்ஸர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து, ஜப்பான் புறப்படுகிறார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 Why did Tamil Nadu CM Stalin meet Minister Shanmugan at Singapore today?

ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்துவார்.

அங்கே அரசியல் தலைவர்கள், பல்வேறு நிறுவன சிஇஓக்கள், அங்கே வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார்.

நேற்று சிங்கப்பூரில், அந் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். அவரை சந்தித்து, இருநாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

சந்திப்பு:

இந்த நிலையில் இன்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். சண்முகத்தை கண்டவுடன் முதல்வர் ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து அன்பாக பேசினார். இவரை தமிழ்நாட்டில் நடக்கும் முதலீட்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்,

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து, ஜப்பான் புறப்படுகிறார்.

டெமாசெக்:

நேற்று அதிகாலை டெமாசெக் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். அந்த நிறுவனம் சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஆகும். இது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான கூட்டு நிறுவனமாகும். டிசம்பர் 2022 நிலவரப்படி அந்த நிறுவனத்தின் கீழ் மொத்தம் US$496.59 பில்லியன் சொத்துக்கள் உள்ளன

டெமாசெக் நிறுவனத்தின் சிஇஓ, சிஓஓ அதிகாரிகள் உடன் ஸ்டாலின் இந்த சந்திப்பை நடத்தினார்.

கோட் சூட் அணிந்தபடி முதலீடுகள் குறித்து அவர் ஆலோசனை செய்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்பின் நடந்த மாநாட்டில் 6 முக்கியமான ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார்.

6 சிக்ஸர்கள்:

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership office - SIPO) மற்றும் தமிழ்நாட்டின் Fame TN மற்றும் TANSIM நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership office - SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே ரூ. 312 கோடி முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அறிக்கை:

இந்த சந்திப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021. தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு விண்வெளி & பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022. தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023

மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் வரும் ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கிறார்கள் 23.5.2023 அன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்று, அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஈஸ்வரன் அவர்களையும், மாண்புமிகு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.கே.சண்முகம் அவர்களையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) அதிபர்கள் / முதன்மைச் செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்கள்.

அன்று மாலை நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டிஎன் (FameTN), டான்சிம் (TANSIM) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTD (Singapore University of Technology & Design), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு-SIPO (Singapore India Partnership Office) மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு-SICCI (Singapore Indian Chamber of Commerce and Industries) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.

அண்மையில் உலக அளவில் முன்னணி குளிர்சாதன இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம் 1891 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய நிசான் நிறுவனம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் 3300 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்தது மட்டுமல்லாமல் தனது தொழில் நடவடிக்கைகளை நம் மாநிலத்தில் மேலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில்தான், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்கிறார்கள். அங்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுக்க இருக்கிறார்கள். ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன.

இதுவரை ஜப்பான் சென்றுள்ள அரசுக் குழுக்கள் டோக்கியோ மட்டுமே சென்று வந்துள்ளனர். ஒசாகாவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர் இங்கு முன்னணி தொழில் பல நிறுவனங்களும் அமைந்துள்ளன. எனவே, ஒசாகா நகருக்கும் வருகை தரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முதல்முறையாக ஒசாகா நகருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இந்தக் குழு செல்ல உள்ளது.

ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ (JETRO) நிறுவனத்துடன் இணைந்து அங்கு நடைபெற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு உள்ள முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும் முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்க உள்ளார்கள்.

அதனைத் தொடரந்து ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

டோக்கியோ நகரில் அந்நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. நிஷூமுரா யசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சந்திக்க உள்ளார்கள்.

மேலும், 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்கள். கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட உள்ளன. மேலும் அங்குள்ள மேம்பட்ட தொழில் மையத்தை பார்வையிட உள்ளார்கள்.
தமிழ்நாட்டிற்கும், ஜப்பானுக்கும் இடையே நீண்ட நெடிய வரலாற்று உறவு இருந்து வருகிறது. இந்த உறவு மேலும் வலுவடையும் வகையில், இந்த அரசு முறைப் பயணம் அமைந்திடும்., என்று தமிழ்நாடு அரசு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+