ஈரோடு கிழக்கு இடை தேர்தல்! களத்தில் குதிக்கும் திமுக! இந்த 3 பேரில் ஒருவரை டிக் அடிக்க ஸ்டாலின் ரெடி
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக தான் போட்டியிடவுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். ஏற்கனவே ஈரோட்டைச் சேர்ந்த 3 பேரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ள நிலையில், வேட்பாளர் யார் என்பது குறித்து சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையால் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சந்திரகுமார், செந்தில் குமார், குறிஞ்சி சிவக்குமார் ஆகிய மூவரும் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் ஒருவரே திமுகவின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். எனவே இந்த தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடிக்க அவரது ரசிகர்கள் வரிந்து கட்டி நிற்கப்போகிறார்கள். புது எதிரியால், வாக்கு வங்கி பதம் பார்க்கப்பட வாய்ப்புள்ளதாக திமுக நினைக்கிறது. போதாத குறைக்கு அண்ணா பல்கலைக்கழக பலாத்கார சம்பவம் உட்பட தமிழகத்தில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை எதிரொலிக்கும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறை மீது நம்பிக்கையில்லை என பல வழக்குகளில் நீதிமன்றம் அடுத்தடுத்து கருத்து கூறியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவே களமிறங்கும் என கூட்டணி கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது. கூட்டணியிலுள்ள காங்கிரசுக்கு கொடுத்தால் ஒருவேளை தோற்றுவிட்டால், திமுக மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக அது எதிர்க்கட்சிகளால் பிரச்சாரம் செய்யப்படும். எனவே திமுகவே களமிறங்கி ஜெயித்துவிட்டால், மக்களுக்கு எங்கள் ஆட்சி மீது அதிருப்தியில்லை என திமுக பிரச்சாரம் செய்துகொள்ள வசதியாக இருக்கும். அதனால் தான் திமுகவே போட்டியிடவுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த, மறைந்த, ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிட முன்வரவில்லை. சென்டிமென்டாக இந்த தொகுதியில் போட்டியிடுவதை அவர்கள் குடும்பவம் விரும்பவில்லை. ஒருவேளை அவர்கள் குடும்பத்திலிருந்து ஒருவர் முன்வந்திருந்தால் காங்கிரசுக்கு இந்த தொகுதி போயிருக்கும். ஆனால் முன்வரவில்லை என்பதால், காங்கிரசுக்கு சீட்டை ஒதுக்க ஸ்டாலின் ரெடியாக இல்லை. அதனால் தான் திமுகவே களமிறங்குகிறது.












Click it and Unblock the Notifications