தவெகவை நாம் தமிழர் 2.0-வாக நினைத்த திமுக? தமிழக சட்டசபை தேர்தலில் தோல்விக்கு காரணம் என்ன?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை பார்க்கலாம். அக்கட்சி செய்த தவறுகள் என்ன, இந்த தவறில் இருந்து பாடம் கற்பார்களா என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களிலும் திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றுள்ளது. திமுகவை சேர்ந்த 15 அமைச்சர்களும் ஒரு சபநாயகரும் தோல்வி அடைந்துள்ளனர்.

அதிலும் முதல்வரான ஸ்டாலின் தோல்வி அடைந்ததுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக இருக்கிறது. சென்னை திமுகவின் கோட்டை என கருதப்பட்ட நிலையில் சென்னையில் 14 தொகுதிகளில் தவெகவும், 2 தொகுதிகளில் திமுகவும் வென்றுள்ளனர்.
கருத்துக் கணிப்புகள், அரசியல் பார்வையாளர்கள் எல்லாம் திமுக கூட்டணியே வென்று ஆட்சியை தக்கவைக்கும் என்றும் அதிமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தனர். ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் தவெக 98 முதல் 120 இடங்களில் வெல்லும் என கணித்திருந்தனர். இது பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில் அவர்கள் கணித்தது போல் தவெக 108 இடங்களில் வென்றுள்ளது. திமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து பத்திரிகையாளர் மணி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "திமுக செய்த தவறு, விஜய்யை விமர்சிக்கலாம். ஆனால் விஜய்யை ஆதரிப்பவர்களை தற்குறி, அணில் குஞ்சுகள், விசிலடித்தான் குஞ்சுகள் என்றும் எப்போது திமுக இழிவுபடுத்தத் தொடங்கியதோ, அன்றே அவர்களின் தோல்வி எழுதப்பட்டுவிட்டது.
மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்ததே ஆளுங்கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். வாரிசு அரசியல் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவம் ஆகியவை ஸ்டாலினின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.
ஸ்டாலின் கூட கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை பெற்று படிப்படியாக துணை முதல்வரானார். ஆனால் உதயநிதிக்கு அப்படியில்லை, 2016 இல் எம்எல்ஏ, பின்னர் அமைச்சர், துணை முதல்வர் என பதவிகள் அசால்ட்டாக கொடுக்கப்பட்டதை திமுகவினரே ஏற்கவில்லை. இதை முதல்வரிடமும் சொல்ல முடியாத நிலை. இவ்வாறு மணி தெரிவித்திருந்தார்.
மேலும் தவெகவால் வாக்குகள் பிரியும் என திமுகவும் அதிமுகவும் அசால்ட்டாக டீல் செய்துவிட்டனர். தவெகவை நாம் தமிழர் கட்சி போல் குறைத்து மதிப்பீடு செய்துவிட்டனர். இதுவே அவர்களது தோல்விக்கு காரணமாகிவிட்டது.
1.தவெக-வின் எழுச்சி மற்றும் வாக்குச் சரிவு
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இத்தேர்தலில் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்து, திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. குறிப்பாக, சென்னை போன்ற திமுகவின் கோட்டை எனக் கருதப்பட்ட பகுதிகளில் தவெக மிக வலுவான வாக்குகளைப் பெற்றுள்ளது. தவெக வென்ற இடங்கள் பெரும்பாலும் திமுக இழந்த இடங்களாகவே உள்ளன.
2. ஆட்சிக்கு எதிரான மனநிலை (Anti-Incumbency)திமுக அரசு மீது இருந்த ஊழல் புகார்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்த அதிருப்தி வாக்காளர்களிடையே பரவலாக இருந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் கள்ளச்சாராய மரணங்கள் போன்ற விவகாரங்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
3. இளைஞர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்களின் மாற்றம்
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய முகத்தை எதிர்பார்த்த இளைஞர்கள், பெருமளவில் தவெக மற்றும் பிற கட்சிகளின் பக்கம் சாய்ந்தனர். வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளால் அதிருப்தியடைந்த நகர்ப்புற வாக்காளர்கள் திமுகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
4. அமைச்சர்களின் அதிர்ச்சி தோல்விமக்களின் நேரடி அதிருப்தி அமைச்சர்கள் மீது திரும்பியதால், மு.க. ஸ்டாலின் உட்பட 15 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் என முக்கியத் தலைவர்கள் பலரும் தங்களது தொகுதிகளிலேயே தோல்வியைத் தழுவினர்.அமைச்சர்கள் மீதான தனிப்பட்ட அதிருப்தி மற்றும் தொகுதிகளில் நிலவிய அதிருப்தி அலை அவர்களை வீழ்த்தியுள்ளது.
5. கூட்டணி மற்றும் இதர காரணங்கள் பாஜக-அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் பிரித்த வாக்குகளும் திமுகவின் வெற்றி வாய்ப்பைப் பல தொகுதிகளில் தட்டிப்பறித்தன. பெண்கள் பாதுகாப்பில் நிலவிய அதிருப்தி மற்றும் குடும்பத் தலைவிகள் மத்தியில் நிலவிய சில கசப்பான உணர்வுகளும் திமுகவிற்குப் பின்னடைவாக அமைந்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications