“பழைய தி.மு.க-வ பார்க்கணும்னா இப்படி பண்ணுங்க..” - ஸ்டாலினிடம் இருந்து பறந்த அதிரடி ஆர்டர்!
சென்னை: மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர், ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பெரும் வளர்ச்சியடைந்து, நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் தமது கிளைகளைப் பரப்பியுள்ளது.
ஏபிவிபி-யை எதிர்க்க பலமான மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மாணவர் அமைப்புச் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க மாணவரணியை பலப்படுத்தி, புதிதாக மாணவர்களை ஈர்க்க திட்டங்களைத் தீட்டுமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஏபிவிபி வளர்ச்சி
டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நிகழும் வன்முறைகளிலும் ஏபிவிபி மாணவர் அமைப்பு குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
கல்வி நிறுவனங்களில் DYFI, SFI போன்ற இளைஞர் அமைப்புகளில் இளைஞர்கள் சேருவதும், இணைந்து செயல்படுவதும் குறைந்துவிட்டதன் வெளிப்பாடே ஏபிவிபி அமைப்பின் வளர்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஸ்டாலின் சொன்ன யோசனை
இந்த விஷயம் தி.மு.க தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்துதான் ஏபிவிபி வளர்ச்சி எதிர்காலத்திற்கு ஆபத்து என்றும், மாணவரணியை பலப்படுத்துமாறும் மு.க.ஸ்டாலினிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இந்த மெசேஜை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வசதியாக வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு அழைப்பாளர்களை வரச் சொல்லுங்கள் என்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மாணவரணி மாநாடு
இதையடுத்துத்தான், தி.மு.க மாணவரணி சார்பில், கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் தொடர்பான தேசிய மாநாடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், பொன்முடி ஆகிய அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

வெளி மாநில அழைப்பாளர்கள்
மு.க.ஸ்டாலின் யோசனையைத் தொடர்ந்து, மாணவர்களை ஈர்த்து வரும் வெளிமாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு மேற்கு வங்கத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, கார்க சாட்டர்ஜி, திலீப் மண்டல், கேரள சட்டத்துறை அமைச்சர் ராஜீவ், காங்கிரஸை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன், செயற்பாட்டாளர் கன்னையா குமார் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்தியா முழுக்க
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தி.மு.க மாணவர் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டபோது, தி.மு.க எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஜே.என்.யூ சென்று மாணவர்களைச் சந்தித்தனர்.
டெல்லியைப் போல தொடர்ந்து மற்ற மாநிலங்களின் பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழக மாணவர்களைத் தொடர்பு கொண்டு பேசி, கூட்டங்களை நடத்துமாறும் தி.மு.க மாணவரணியை கல்லூரிகளில் பலப்படுத்துமாறும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பழைய தி.மு.கவை பார்க்கணும்
அறிஞர் அண்ணாவால் தி.மு.க தொடங்கப்பட்டபோது அது பெருவாரியான இளைஞர்களின் கட்சியாக இருந்தது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் தி.மு.க தொண்டர்களாக இருந்தனர். அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பல தலைவர்கள் கல்லூரி மாணவர் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள்தான்.
1985க்குப் பிறகு தி.மு.க மாணவரணி பலமின்றிப் போனது. அதை மீண்டும் பலமாகக் கட்டமைத்தால் பா.ஜ.கவின் ஏபிவிபியை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கும் பயன்படும் என தி.மு.க தலைமை கணக்குப் போடுகிறது. கூடிய விரைவில் தி.மு.க மாணவரணி முன்னிலைப் படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications