சொத்து வாங்கும் பலர்.. ஏன் பணம் சம்பாதிக்க தெரியாமல் தோற்று போகிறார்கள்.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்
சென்னை: இந்தியாவில் வீடு வாங்குவது என்பது பலரும் சொத்து சேர்க்கிறது என்று நினைக்கிறார்கள்..ஆனால் அவர்கள் உண்மையில் சொத்துக்களை சேர்க்கவில்லை. மாறாக பொறுப்புகளையும் இஎம்ஐக்களையும் சேர்ப்பதாக குருகிராமைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர் கூறினார். இந்தியர்கள் சொத்து முதலீடுகளில் ஏன் பணம் சம்பாதிக்க தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் பெரிய நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் என்பது கொடிகட்டி பறக்கிறது. நாட்டின் 60 நகரங்களில் வீட்டு விற்பனை ஆண்டுக்கு 20% அதிகரித்து 681,138 யூனிட்டுகளாக உயர்ந்திருப்பதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. ரியல் எஸ்டேட் மதிப்பை பொறுத்தவரை சந்தை விற்பனையில் ரூ.7.5 டிரில்லியனை எட்டியிருக்கிறது. அதாவது தற்போது ரியல் எஸ்டேட் துறை 43% அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரை ஆடம்பர மற்றும் அதி-ஆடம்பர வீடுகளுக்கு பெரிய நகரங்களில் தேவை அதிகமாக உள்ளது. அவற்றை வாங்க விரும்பும் பணக்காரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.

செல்வந்தர்கள் ஆர்வம்
முன்பு தனி வீடுகளில் இருந்த பலர், இன்று பலவசதிகள் கொண்ட சொகுசு அடுக்குமாடிகளை விரும்புகிறார்கள். உயர் பாதுகாப்பு வசதி, செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கேட்டட் கம்யூனிட்டி, செக்யூரிட்டி வசதி, நீச்சல் குளம், ஜிம், விளையாட்டு கூடங்கள் என பல்வேறு உயர் அடுக்கு வசதிகள் என எல்லாமே சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் கிடைக்கிறது. வீட்டின் உரிமையாளராக வாழ்ந்தால் மட்டும் போதும். எந்த பொறுப்புகளையும் சுமக்க தேவையில்லை.
ஆடம்பர வீடுகளுக்கு கிராக்கி
பணம் சம்பாதிக்கவும், சொகுசாகவும் வாழ்ந்தால் மட்டும் போதும். பொறுப்புகள் அனைத்தையும் அடுக்குமாடி கட்டித்தரும் நிறுவனங்களே ஏற்பது என்பது பெரும் பணக்காரர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்கு கட்டணமும் பெரிதாக இல்லை என்பதும் ஒரு காரணம். தனி வீடு என்றால் காவலாளி, பாதுகாப்பு பிரச்சனைகள், நீச்சல் குள பராமரிப்பு, கேஸ் பராமரிப்பு, வீடு பராமரிப்பு, தோட்ட பராமரிப்பு என எல்லாவற்றையும் அவர்களே பார்க்க வேண்டியதிருக்கும். ஆனால் சொகுசு அடுக்குமாடிகளில் அந்த நிறுவனங்களே பார்க்கின்றன. இதுதான் சொகுசு அடுக்குமாடிகளை பணக்காரர்கள் அதிகம் விரும்பக்காரணமாக உள்ளது. இதன் காரணமாகவே ஆடம்பர வீடுகள் விற்பனையில் பிரீமியம் வீடுகள் தான் மொத்த மதிப்பில் 71% ஆக உள்ளன.
சொகுசு வீடுகள்
ரூ.1-2 கோடிக்கு இடைப்பட்ட விலை கொண்ட சொத்துக்களின் விற்பனை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை 132,532 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்பட்டுள்ளன. ரூ.2 கோடிக்கு மேல் உள்ள அதி-ஆடம்பர வீடுகள் விற்பனை என்பது 73% அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுதான் அப்போது சொன்னபடி, டெவலப்பர்கள் அதிகப்படியான சொகுசு வசதிகள் மற்றும் சேவைகள் தரும் நம்பிக்கையினை பிரதிபலிக்கிறது. தற்போதைய நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் துறை ரூ.22.5 டிரில்லியன் மதிப்புடையதாக மாறி உள்ளது. ரியல் எஸ்டேட் துறை என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு 7.2% பங்களிப்பு தருகிறது, மெட்ரோ நகரங்கள் தொடர்ந்து பிரீமியம் வீட்டு விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களும் விற்பனையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இஎம்ஐயில் விழுகிறார்கள்
அதேநேரம் வீடு வாங்குவது என்பது 90 சதவீதம் இந்தியர்களுக்கு கனவாக இருப்பதாகவும், பலர் வீடு வாங்கும் விஷயத்தில் தவறான முடிவுகளை எடுப்பதாகவும், லிங்கிடு இன் பதிவில், குருகிராமைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர் கூறியுள்ளார். பெரும்பாலான வீடு வாங்குபவர்கள், அவர்கள் வாங்குவது சொத்துக்களை அல்ல என்றும் பொறுப்புகளை வாங்குகிறார்கள் என்றும் கூறினார். இஎம்ஐக்களை தான் வாங்குகிறார்கள் என்றும் மோசமான திட்டமிடல், உணர்ச்சிபூர்வமான முடிவெடுப்பது மற்றும் சரியான உத்தி இல்லாதது போன்றவை தான், பல இந்தியர்களை கடனில் விழ வைக்கிறது என்றும் கூறினார்.
90 சதவீதம் பேர் தோல்வி
90% வாங்குபவர்கள் இந்திய ரியல் எஸ்டேட் தோல்வியடைவதற்கு காரணம் இதுதான் என்றும் கூறினார். நான்கு இடத்திற்கு சென்று சதுர அடி என்ன என்று விசாரிக்கும் மக்கள், அவற்றின் மறுவிற்பனை மதிப்பு, வாடகை எவ்வளவு கிடைக்கும், ஆண்டு வட்டி எவ்வளவு, அதனை விற்றுவிட்டு வெளியேறினால் எவ்வளவு லாபம் திரும்ப கிடைக்கும் என்பது பற்றி யோசிப்பது இல்லை. வீடு என்பது எமோஷன் ஆக இருக்கிறது. இதில் அதிக தள்ளுபடி தருவது யார் என்பதை தான் பார்க்கிறார்கள். இதில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுப்பதால் இஎம்ஐயில் விழுகிறார்கள்.
ஒரு சதவீதம் பேர்
அதேநேரம் வெறும் ஒரு சதவீதம் பேர் ரியல் எஸ்டேட் துறையில் சரியான திட்டமிடுதல் சம்பாதிக்கிறார்கள் என்று கூறிய ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர், அவர்களின் வியூகங்களையும் விளக்கினார். தயாரிப்பு + நேரம் + மண்டலம் + பிராண்ட் + வெளியேறும் பாதை இவற்றை அறிந்திருப்பார்கள் என்றார். அந்த இடம் எவ்வளவு, எவ்வளவு காலத்தில் வளர்ச்சி அடையும் என்பதை பார்க்க வேண்டும். உங்கள் சொத்து உங்களுக்கு பணம் தர வேண்டும்.. மாறாக பதற்றத்தை தரக்கூடாது. 3-5 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பில் இருந்து 2.5- 4 எக்ஸ் லாபத்துடன் வெளியேற வேண்டும் " என்றும் ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர் கூறினார்.












Click it and Unblock the Notifications