விட்றாதீங்க.. நிறைய இருக்கு.. அமைச்சர் பிடிஆருக்கு ஸ்டாலின் கொடுத்த மிகப்பெரிய டாஸ்க்.. அட அதிருதே
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஐடி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிடிஆருக்கு முக்கியமான ஒரு டாஸ்க்கை முதல்வர் ஸ்டாலின் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டும் சில அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம் அப்போது நடக்கவில்லை. முதல் மாற்றமாக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டார். ஆவடி நாசர் மீது பல்வேறு புகார்கள் சர்ச்சைகள் இருந்தன.

இன்னொரு பக்கம் அமைச்சர் பதவியில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா சேர்க்கப்பட்டு உள்ளார் தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
டாஸ்க்: ஐடி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிடிஆருக்கு முக்கியமான ஒரு டாஸ்க்கை முதல்வர் ஸ்டாலின் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஐடி புரட்சியை ஏற்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னோடி. சென்னையில் முதல் ஐடி பூங்காவை கொண்டு வந்து இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்தது. ஆனால் அதன்பின் ஐடி பூங்காங்கள் பெரிய அளவில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவில்லை.
கோவை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில சில நிறுவனங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டாலும் முழுமையாக சென்னையை போல பெரிதாக எங்கும் பல ஐடி நிறுவனங்கள் வரவில்லை. இந்த நிலையில்தான் இன்று பட்ஜெட் உரையில் புதிய டைடல் பூங்காக்கள் குறித்த அறிவிப்பை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
இந்த நிலையில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பட்ஜெட் உரையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கல பூங்கா, பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் ரூ4,500 கோடியில் சர்வதேச அறைக்கலன் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும். விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்
பின்தங்கிய 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். சிறு, குறு தொழில் சிக்கல்களை ஆராய குழு அமைக்கப்படும், என்று தெரிவித்தார்.
அதேபோல் மதுரையில் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும்.

பிடிஆர் செய்ய போவது என்ன?: இந்த நிலையில் அமைச்சர் பிடிஆருக்கு ஐடி துறை வழங்கப்பட்டு உள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள ஐடி பார்குகளை உருவாக்குவது, தமிழ்நாட்டில் மீண்டும் ஐடி புரட்சியை ஏற்படுத்துவது ஆகிய திட்டங்களின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் பிடிஆருக்கு இந்த டாஸ்க்கை கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஐடி துறை கொஞ்சம் சரிந்து உள்ளது. பெங்களூர், ஹைதராபாத் ஆகியவை ஐடி துறையில் தமிழ்நாட்டை வீழ்த்தி உள்ளது.
ஐடி துறையில் தமிழ்நாடு அரசு மீண்டு வர வேண்டும் என்றால்.. அதற்கு பெரிய அளவில் அனுபவம், ஆலோசனை செய்ய, மார்க்கெட்டிங் செய்யும் திறன் கொண்டவர் வேண்டும். அதோடு பின் டெக் துறையிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த உள்ளது. சமீபத்தில் பிடிஆரை சந்தித்த முதல்வரும் ஐடி துறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். ஐடி துறையை தமிழ்நாடு கைவிட கூடாது. நிறைய மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறாராம்.
பின் டெக் முதலீடுகளை தமிழ்நாடு அரசு ஈர்க்க உள்ளது. இதற்கெல்லாம் ஏற்ற நபர் பிடிஆர்தான். அதனால்தான் மனோ தங்கராஜை அந்த பதவியில் இருந்து மாற்றிவிட்டு, அதற்கு அமைச்சர் பிடிஆரை உள்ளே கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மனோ தங்கராஜ் சரியாக பணி செய்யவில்லை என்ற குறை முதல்வருக்கு இருந்துள்ளதாம். மேலும் ஐடி துறையை மொத்தமாக புதுப்பிக்கவும் திட்டமிடல் உள்ளதாம்.












Click it and Unblock the Notifications