Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? - 50 ஆண்டுகால போராட்டம் சொல்லும் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஒரு பெரிய போராட்டத்தினை மறுபடியும் சந்திக்கப் போகிறது. நவம்பர் 4 ஆம் தேதி அன்று திமுக, ஒன்றிய அரசின் இந்தி ஆதிக்க திணிப்பைக் கண்டித்து பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

Recommended Video

    முதல்வர் ஸ்டாலின் நினைப்பவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் - ஆ.ராசா

    'இனி வரும் காலங்களில் உயர்கல்வியில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான இந்திய அலுவல் மொழி ஆய்வுக்குழுவின் பரிந்துரையை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

     வங்காளத்தில் பரவிய இந்தி எதிர்ப்பு

    வங்காளத்தில் பரவிய இந்தி எதிர்ப்பு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதனைக் கண்டித்து கடந்த 18 ஆம் தேதி தனித் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது, அத்தீர்மானம் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை மக்களிடம் விளக்கிக் கூற பெரம்பலூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேச இருக்கிறார்.

    இந்தி ஆதிக்கம், மீண்டும் பல மாநிலங்களின் உரிமையை மறைமுகமாகப் பறிக்கப் பார்க்கிறது. கட்சி சார்பற்று பல மாநில மக்கள் அதை எதிர்க்க முன்வந்துள்ளனர்.

    "1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தன. சில நாட்களுக்கு முன்னால் வங்காளத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் அண்ணாவின் படத்தையும் கலைஞர் கருணாநிதியின் படத்தையும் கையில் ஏந்தி அம்மாநில மக்கள் ஊர்வலம் சென்றனர்.

    'இந்தி எதிர்ப்பில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு உள்ளது' என்பதற்கு இந்தக் காட்சியே சரியான சான்று"என்கிறார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான சுப.வீரபாண்டியன்.

    அன்று நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோது அதை திமுக எதிர்த்தது. தமிழ்நாட்டில் காமராஜர்கூட இந்தியை ஆதரித்தார். காரணம், தேசிய நீரோட்டத்தில் கரைந்திருந்த காங்கிரஸ்காரர்களுக்கு இந்தி என்பது இந்தியாவின் முகமாகத் தெரிந்தது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலையைக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியே வெளிப்படுத்துகிறார்.

    இந்தியை எதிர்க்கும் ப.சிதம்பரம்

    இந்தியை எதிர்க்கும் ப.சிதம்பரம்

    அதேபோல், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும், இந்தித் திணிப்பை எதிர்க்கிறார். இதுதொடர்பாகப் பேசிய சிதம்பரம், "இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. அரசியல் சாசனத்தில் 18 மொழிகளுக்கு இடம் தந்திருக்கிறார்கள். அதில் ஆங்கிலம் இருக்கிறது. தமிழும் இருக்கிறது.

    இந்தியையும் சேர்த்துப் பல மொழிகள் இருக்கின்றன. எனவே அனைத்து மொழிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். பாவிக்கப்படும் என்றும் நம்புகிறோம். பல நாடுகளில் 4 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கின்றன. பெல்ஜியத்தில் 2 மொழிகள் ஆட்சி மொழிகள். இலங்கையில் மூன்று மொழிகள் ஆட்சி மொழி. சிங்கப்பூரில் 4 மொழிகள் ஆட்சி மொழி. கனடாவில் இரண்டு மொழி ஆட்சி மொழிகள்.

    ஆக, இந்தியாவில் ஒரு மொழிதான் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதை உணர்ந்துதான் ஜவஹர்லால் நேரு உறுதிமொழி தந்தார். 'இந்தியாவில் இந்தி பேசாத மக்கள் ஏற்கும் வரை ஆங்கில ஆட்சி மொழியாக இருக்கும்' என்றார்.

    திமுக தலைமை ஏற்று நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப்போல் அதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டில் அதைப் போன்றதொரு போராட்டம் நடந்தது இல்லை. அதை மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது இந்திரா காந்தி சொன்னார். 'என் தந்தை தந்த வாக்குறுதியை நானும் தருகிறேன். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும்' என்றார்.

    ஆனால், மத்திய அரசுக்கு உள்பட்ட மொழி நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாம். என்ன பரிந்துரை? 'நாட்டிலுள்ள அனைத்து ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களில் இந்திதான் பயிற்சி மொழியாக இருக்க வேண்டும்' என்று.

    உடனே கேள்வி எழுகிறது. மும்பையில், கான்பூரில், டெல்லி பல்கலைக்கழகத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மற்ற மத்திய பல்கலைக்கழகங்களில் இந்திதான் இனி பயிற்சி மொழி என்றால், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் இனிமேல் சேர முடியாதா? நான் இதைக் கேட்டேன். இதுவரை பதில் கிடையாது" என்கிறார் ப.சிதம்பரம்.

    ''அமித்ஷாவின் இந்தித் திணிப்பை உடனடியாக எதிர்த்த முதல் முதலமைச்சர் ஸ்டாலின்தான்' என்கிறார் ஆ.ராசா. 'இந்தி திணிப்புக்காக தேசிய அளவில் திமுக முன்னெடுத்த பல்வேறு முக்கியமான தருணங்கள் என்ன.. அதன்மூலம் நாடு எவ்வாறு காப்பாற்றப்பட்டது?' என்ற விவரங்களைச் சுட்டிக்காட்டி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

     ஆ.ராசா தரும் புதிய தகவல்கள்

    ஆ.ராசா தரும் புதிய தகவல்கள்

    ஆ.ராசா பேசுகையில், 'திமுக தேசியக் கட்சி அல்ல; அது மாநிலக் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள்தொட்டு, அது தன்னை தேசியக் கட்சி என்று அறிவிக்காவிட்டாலும்கூட ஒரு மாநிலக் கட்சி என்று சுருங்கிக் கொள்ளாமல், இந்தியாவின் பலதரப்பட்ட பிரச்னைகளில் முதல் குரலாக அது ஒலித்தே வந்திருக்கிறது.

    திராவிட முன்னேற்றக் கழகம் ஒருகாலத்தில் தனிநாடு கேட்ட இயக்கம். திராவிட நாடு கேட்ட இயக்கம். 'எனக்கு நாட்டுப்பற்று கிடையாது. மதப்பற்று கிடையாது. சாதிப் பற்றுக் கிடையாது' என்று தந்தை பெரியார் சொன்னார்.

    1962 ஆம் ஆண்டில் இந்தியா மீது சீனா படையெடுத்து வந்தபோது, 'இங்குள்ள சூத்திரர்கள் கோயில் உள்ளே போக முடியவில்லை. ஆகவே அவர்களுக்காகக் கோயில் நுழைவு போராட்டத்தை அறிவிக்கப் போகிறேன்' என்று பெரியார் சொன்னார்.

    அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் போய் கேட்டார்கள். 'சீனா படையெடுத்து வந்துவிட்டது. நாடு என்ன ஆகுமோ தெரியவில்லை. நீங்கள் கர்ப்பகிரகத்துக்குள் செல்வதற்குப் போராட்டம் நடத்தப் போகிறேன் என்று சொல்கிறீர்களே, இது நியாயம்தானா?' என்றனர்.

    அப்போது பெரியார், 'ஒருவேளை சீனாக்காரன் படையெடுத்து வருவதன் மூலம் என் சூத்திரன் பட்டம், பஞ்சப் பட்டம் போகுமானால் அவர்களை நான் வரவேற்பேன்' என்று சொன்னார். ஆனால் அதை அண்ணா ஏற்றுக் கொள்ளவில்லை.

    அப்போது அண்ணா, 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். திராவிட நாடு கோரிக்கையை நான் கைவிடுகிறேன். இந்தியத் தேசியத்தை நான் ஆதரிக்கிறேன். இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து வந்தால் திமுக ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது' என்று முழங்கினார்.

    இந்திய அரசியல் சாசனத்தைத் திறந்தால் முதல் வரி என்ன இருக்கிறது தெரியுமா? 'இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இறையாண்மை உள்ள ஒரு நாடு. மதச்சார்பற்ற நாடு. ஒரு சமதர்ம நாடு' என்றுதான் உள்ளது. இந்த அடிப்படைப் பண்புகளுக்கு எப்போது எல்லாம் ஆபத்து வந்ததோ அப்போது எல்லாம் முதல் ஆளாகக் குரல் கொடுத்து இந்தத் தேசத்தைக் காப்பாற்றிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

    எப்படி?

    எப்படி?

    1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சீனா மூலமாக ஆபத்து வந்தது. அப்போது அண்ணா சொன்னார்: 'நாங்கள் இந்தியாவின் பக்கம் இருக்கிறோம்' என்று. அதேபோல் 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் படையெடுத்து வந்தது. அன்றைக்குக் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். 5 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்து, 'இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்றுவோம்' என்று சொன்னார் கலைஞர். எனவே இந்தியாவின் இறையாண்மையை திமுக காப்பாற்றி இருக்கிறது.

    மு.கருணாநிதி காட்டிய எதிர்ப்பு

    மு.கருணாநிதி காட்டிய எதிர்ப்பு

    இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்தது. இந்தியாவிலுள்ள எந்த மாநிலக் கட்சியும் செய்யாத வகையில் சட்டசபையைக் கூட்டி, 'நாங்கள் மிசாவை எதிர்க்கிறோம். அவசரச் சட்டத்தை எதிர்க்கிறோம்' என்று திமுக கூறியது.

    அப்போது இந்திரா காந்தி, 'நீங்கள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் கொண்டுவந்துள்ள மிசாவை எதிர்க்காதீர்கள்' என்று தூது அனுப்பினார். ஆனால் கலைஞர் சம்மதிக்கவில்லை. அவர் அன்று அந்த வாய்ப்பை ஏற்றிருந்தால் அரசியலில் எங்களுக்கு எதிரிகளே இருந்திருக்கமாட்டார்கள்.

    'அரசியல் முக்கியமல்ல; அதையும் தாண்டி இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பங்கு எனக்கு இருக்கிறது, என் இயக்கத்துக்கு இருக்கிறது' என்று ஓங்கி முழங்கியவர், அதற்காக ஆட்சிப் பொறுப்பை இழந்தவர் திமுக தலைவர் மு.கருணாநிதி.

    இதே இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். அவர் தனியார் கைகளிலிருந்த இந்திய வங்கிகளை எல்லாம் தேசியமயமாக்க ஒரு சட்டம் கொண்டுவந்தார். இந்திரா காந்தி ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கலைஞர், 'நீங்கள் கவலைப்படாதீர்கள், எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரிப்பார்கள்' என்று தந்தி கொடுத்தார்" என்கிறார் ராசா.

     முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய முதல் எதிர்க்குரல்

    முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய முதல் எதிர்க்குரல்

    இவர் சொல்வதைப் போலச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அவர் பேசும்போது, 'அன்னை தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர்ந்திட, ஏன்? அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட, தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.

    மேலும், 'அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுத் தலைவர் அமித்ஷாவால் 09.09.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராக உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது' என்றார்.

    இந்தி எதிர்ப்பில் திமுக செய்தது என்ன?

    இந்தி எதிர்ப்பில் திமுக செய்தது என்ன?

    பெரியார், அண்ணா, மு.கருணாநிதி என இந்தி எதிர்ப்புக்கு என்று தமிழ்நாட்டில் ஒரு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. அப்படி சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

    அவர் பேசும்போது, '1963 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புக் குழுவுக்குத் தலைவராக கலைஞர் கருணாநிதி அறிவிக்கப்பட்டார். செப்டம்பர் 22 அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் கண்மலர்ந்த பேட்டை மாநகரில் தென்மண்டல இந்தி எதிர்ப்பு மாநாடு. அந்த மாநாட்டுத் தலைவர் ஏ.கோவிந்தசாமி. மாநாட்டுத் திறப்பாளர் ப.உ.சண்முகம். வரவேற்பாளர் கலைஞர்.

    மறுநாள் கலைஞருக்கு வெள்ளியிலே வீரவாள், கேடயம் கொடுக்கும் நிகழ்ச்சி. அதற்குத் தலைமைத் தாங்கியவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். வெள்ளி வாளையும் கேடயத்தையும் அண்ணா வழங்குவதாக ஏற்பாடு. அப்போது ஏற்புரையில் கலைஞர், 'இன்றைக்கு என் கையில் வீர வெள்ளி வாளும் கேடயமும் வழங்கப்பட்டிருப்பதை நான் செய்த காரியத்துக்காக தருவதாகக் கருதவில்லை.

    நான் செய்ய வேண்டிய காரியத்துக்கு அச்சாரமாகத் தருகிறீர்கள் என்றே நினைக்கிறேன். காரியம் சாதிக்கும் முன்பே வெள்ளி வாள் கேட்கிறான். காரியம் சாதித்துவிட்டு வந்தால் தங்க வாள் அல்லவா கேட்பான் என்று கருதி விடாதீர்கள். இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நான் களச் சாவு அடைவேனானால் என் சடலத்தின் மீது விழப்போகின்ற அண்ணாவின் கண்ணீரைவிட வேறு ஒரு பரிசு இருக்க முடியாது' என்றார்.

    அடுத்து மூன்று ஆண்டுகள் கடந்தன. 1965 ஆம் ஆண்டில் நடந்த மொழிப்போரில் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடந்த கலைஞரைச் சந்திக்கப் போன அண்ணா, 'தன்னை வெல்வான், தரணியை வெல்வான் என்பதற்கு இலக்கணம் இந்தத் தலைவன்' என்று சொன்னார்.

    ஆங்கிலம், அந்நிய மொழி அல்ல

    ஆங்கிலம், அந்நிய மொழி அல்ல

    அதன்பின்னர், 1966 ஆம் ஆண்டு, ஜூன் 19 அன்று இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாணவர் மாநாடு தஞ்சையில் நடந்தது. அந்த மாநாட்டில் அண்ணா உரை நிகழ்த்தினார். விழாவுக்குக் காலதாமதமாகக் கலைஞர் வருகிறார். 'இனி அண்ணாவுக்குப் பின்னால் யாரும் பேச முடியாது' என நினைத்த வேளையில், அண்ணா சொன்னார், 'நான் உரையை முடிக்கவில்லை. தம்பி உரையைத் தொடர்வான்' என்று. அப்படி வளர்ந்த இயக்கம் திமுக'' என்கிறார் வைகோ.

    மேலும், அவர் 'இந்தி இந்தியா வேண்டுமா.. அல்லது ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? என்று நாடாளுமன்றத்தில் அன்றைக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி கேட்டார். இதையே நானும் நாடாளுமன்றத்தில் கேட்டிருக்கிறேன். வடகிழக்கு மாகாணங்களில் ஆங்கிலம் ஆட்சி மொழி. ஆங்கிலோ இந்தியர்கள் அம்மாநிலத்தின் குடிமக்கள். அவர்களின் தாய்மொழி ஆங்கிலம்.

    ஆங்கிலம் ஒன்றும் அந்நிய மொழி அல்ல; உனக்கு ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் எனக்கு இந்தி அந்நிய மொழி. இரண்டு பேரும் சமமாகத் தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஆங்கிலம்தான் சரியாக இருக்கும். இது அண்ணாவின் கொள்கை. இது அமித் ஷாவுக்குத் தெரியாது' என்றார் வைகோ.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+