அவசரப்படாதீங்க அண்ணே.. எடப்பாடிக்கு போன "அட்வைஸ்".. புதிய கூட்டணியை கைவிட்டது ஏன்? என்ன நடந்தது?
நேற்று மாலை மீண்டும் இந்த கூட்டணி பெயர் மாற்றப்பட்டது. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் நீக்கப்பட்டு புதிதாக அதிமுக தலைமையிலான கூட்டணி பணிமனை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: மழை காலத்தில்.. விளக்கிற்கு அருகே பறக்கும் ஈசலுக்கு ஆயுள் என்னவோ 2-3 நிமிடம்தான். அந்த ஈசலை போலவே உருவான உடனே மடிந்து இருக்கிறது அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு உருவாக்கிய தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி. கூட்டணி உருவான சில மணி நேரங்களில் அந்த கூட்டணியின் பெயரை துறந்து உள்ளனர் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள். அப்படி என்னதான் நடந்தது?
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக அதிமுக அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவோம் என்ற எடப்பாடியின் உறுதித்தன்மையை இது காட்டுகிறது. பாஜக மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்னும் வேட்பாளரை அறிவிப்பதை பற்றி முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி தரப்பு வேட்பாளரை அறிவித்து, தேர்தல் பணிகளை செய்வதற்காக குழுவை அமைத்து பணிகளை தொடங்கி உள்ளது.

புதிய கூட்டணி
இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் எடப்பாடி பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார். பாஜகவுடன் மோதினால், பாஜகவை விட்டு விலகி சென்றால் டெல்லி மூலம் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை உருவாக்கி உள்ளார் எடப்பாடி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பதிலாக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி புகைப்படத்தில் இதில் பாஜகவை குறிப்பிடும் வகையில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படம் இடம்பெறவில்லை. அதேபோல் பாஜகவை ஆதரிக்கும் ஜான்பாண்டியன் ஏசி சண்முகம் ஆகியோரது படங்களும் இடம்பெறவில்லை.

முற்போக்கு
இப்போது வைக்கப்பட்டு இருக்கும் கூட்டணிக்கு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைத்துள்ளார். அதோடு கூட்டணியில் முற்போக்கு என்ற வார்த்தையை சேர்த்து எடப்பாடி அவர்களை சீண்டி உள்ளார். அதாவது காங்கிரசின் யூ.பி.ஏவில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள முற்போக்கை எடப்பாடி தனது கையில் எடுத்து உள்ளார். எடப்பாடியின் இந்த நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க இப்படி பெயர் வைத்து இருக்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. முதலில் தேசிய ஜனநாயக கூட்டணி பணிமனை என்று இருந்த பெயரைத்தான் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று எடப்பாடி மாற்றினார்.

எடப்பாடி மாற்றம்
இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் இந்த கூட்டணி பெயர் மாற்றப்பட்டது. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் நீக்கப்பட்டு புதிதாக அதிமுக தலைமையிலான கூட்டணி பணிமனை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எடப்பாடியின் இந்த முடிவிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி எடப்பாடியிடம் சில மூத்த நிர்வாகிகள் இதை பற்றி ஆலோசனை வழங்கி உள்ளனர். அதில், பாஜகவை இப்போது நாமாக கழற்றிவிட்டு அவர்களுடன் மோத வேண்டாம். நாம் அவசரப்பட வேண்டாம் அண்ணே. இரட்டை இலை சின்னத்தில் தீர்ப்பு வரட்டும். அதன்பின் பார்த்துக்கொள்ளலாம்.

சின்னம்
சின்னம் போனாலும் பரவாயில்லை. பொதுக்குழு வழக்கில் ஆதரவாக தீர்ப்பு வர வேண்டும். அதுவரை காத்திருப்போம். இப்போது பாஜகவை பகைக்க கூடாது. நாம் வேட்பாளரை அறிவித்துவிட்டோம். இப்போது பாஜகவிற்குத்தான் பிரஷர். நாம்தான் வலுவாக இருக்கிறோம் என்பதால் நம்மை ஆதரிக்க வேண்டிய பிரஷர். அவர்கள் நம்மை ஆதரிக்காமல் வேறு வேட்பாளரை அறிவித்தால் கூட்டணி உடைந்துவிட்டது என்று அர்த்தம். அப்போது புதிய கூட்டணி பெயரை வெளியிடலாம். அதுவரை நாமாக பெயரை மாற்றி பாஜகவை சீண்ட வேண்டாம் என்று அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்களாம். இதனால்தான் காலையில் மாற்றப்பட்ட பெயர் மாலை மீண்டும் நீக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மாலையிலும்கூட அதிமுக தலைமையிலான கூட்டணி என்றுதான் இருந்ததே தவிர தேசிய ஜனநாயக கூட்டணி என்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications