வீட்டுக்கு போய் கோபத்தை வெளிப்படுத்துவதா? பெருந்தன்மையுடன் செயல்படுங்க விஜய்! எஸ்டிபிஐ கண்டனம்
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மான விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த பலத்த விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் நிதானத்துடனும், முதிர்ச்சியுடனும் பதிலளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், சட்டமன்ற விவாதங்களுக்கு அங்கேயே பதிலளித்து பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவராமல், வீடு திரும்பிய பின் அறிக்கையின் வாயிலாக தனது கோபத்தை வெளிப்படுத்துவது முதிர்ச்சியற்ற அரசியல் செயல் என எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் முகம்மது முபாரக் விமர்சித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் கனிவான போக்கைப் பின்பற்றுவதாகக் கூறும் முதல்வர், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து இன்னும் பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆட்சி
தமிழக சட்டசபையில் நேற்று விஜய் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் விஜய்க்கு 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். பாமக 4 மற்றும் பாஜக 1 நடுநிலை வகித்தனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு வெற்றி பெற்றது.
முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேச, பேச சட்டசபையில் இருந்த முதல்வர் விஜய் அப்படியே கேட்டுக்கொண்டு இருந்தார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆட்சி தான் நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே உங்க ஆட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களே,
பெரும்பான்மையும் இல்லாத, அரசியலில் அடிப்படை நேர்மையும் அல்லாத இந்த அரசு நல்லாட்சி தரும், தமிழ் நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும் என்று மக்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களே, தற்போது நடப்பதை எல்லாம் பார்த்து விட்டு ஒரு பெரிய தவறை செய்து விட்டோமே என்று வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
மக்களின் அந்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் (தி.மு.க.) நாங்கள் வெளிநடப்பு செய்யப்போகிறோம். அதனால் பேரவையின் எண்ணிக்கை அளவு குறைந்து, நீங்கள் நிச்சயம் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறத்தான் போகிறீர்கள். அப்படி வெற்றி பெற்ற பிறகாவது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுகின்ற வகையில் உங்களின் பணிகள் இருக்க வேண்டும்" என்று பேசிவிட்டு சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
விஜய்யை விமர்சித்த எஸ்டிபிஐ முபாரக்
இதனையடுத்து விஜய் இதற்கு பெரிதாக சட்டசபையில் விளக்கம் அளிக்கவில்லை. குதிரை பேரம் இல்லை குதிரை வேகத்தில் ஆட்சி நடைபெறுகிறது என்றும் சிறுபான்மை மக்களுக்காக ஆட்சி நடக்கிறது எனவும் தெரிவித்தார். எனினும், உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக வலைதளங்களிலும் தீவிரமடைந்தது. இதையடுத்து முதல்வர் விஜய் வீட்டுக்கு சென்ற பின் நீண்ட ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் திமுகவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது முதல் 15 அமைச்சர்கள் தோற்றது என திமுகவை கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில் இதனையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்.டி.பி. ஐ கட்சியின் முகம்மது முபாரக் விஜய்யை விமர்சனம் செய்துள்ளார். முதிர்ச்சியற்ற அரசியலை விஜய் செய்ததாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
முதிர்ச்சியற்ற அரசியல் செயல்
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மான விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த பலத்த விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் நிதானத்துடனும், முதிர்ச்சியுடனும் பதிலளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், சட்டமன்ற விவாதங்களுக்கு அங்கேயே பதிலளித்து பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவராமல், வீடு திரும்பிய பின் அறிக்கையின் வாயிலாக தனது கோபத்தை வெளிப்படுத்துவது முதிர்ச்சியற்ற அரசியல் செயல்..
பேரறிஞர் அண்ணாவின் கனிவான போக்கைப் பின்பற்றுவதாகக் கூறும் முதல்வர் விஜய், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து இன்னும் பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.














Click it and Unblock the Notifications