தலையை பிடிச்சு இருக்கலாமே.. 5 அர்ச்சகர்களும் அடுத்தடுத்து சிக்க காரணமே இதுதான்! ப்ச் அந்த ஒரு தப்பு
சென்னை: நங்கநல்லூரில் இருக்கும் தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயிலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்து இருக்கிறது.
அப்போது தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில் குளத்திற்குள் அர்ச்சகர்கள் இறங்கி சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

என்ன நடந்தது?
ஆழமான நீர் பகுதியில் அவர்கள் பூஜை செய்து கொண்டு இருந்தனர். கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது திடீரென சேற்றில் மூழ்கி சூர்யா (வயது-22) பலியானார். அவரை காப்பாற்ற சென்ற பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22) யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இவர்கள் 5 பேரும் ஒரே குளத்தில் எப்படி பலியானார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. முதலில் ஒரு அர்ச்சகர்தான் தண்ணீரில் மூழ்கி இருக்கிறார்.

தண்ணீரில் மூழ்கினார்
அவர் அடியில் இருந்த சேற்றில் மாட்டி இருக்கிறார். சேற்றில் சிக்கி அவரால் வெளியே வர முடியாமல் துடித்து இருக்கிறார். அவரின் காலில் சேற்றில் சிக்கி அப்படியே உள்ளே புதை மணல் போல இழுக்கப்பட்டு உள்ளது. அவர் துடிக்க துடிக்க அவரை காப்பாற்ற மேலும் சில அர்ச்சர்கள் தாவி உள்ளனர். ஆனால் அவர்களும் உள்ளே இழுக்கப்பட்டு உள்ளனர். ஒரு அர்ச்சகர் கையை இன்னொரு அர்ச்சகர் பிடிக்க அப்படியே ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உள்ளனர். கையை பிடித்து இழுக்க முயல.. அதை மூழ்கிய நிலையில் இருந்த அர்ச்சகர் பிடித்து இழுக்க.. காப்பாற்ற போனவர்களும் தண்ணீருக்குள் மூழ்கி உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில்தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு. தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, திரு. சூர்யா (வயது-22), திரு. பானேஷ் (வயது-22), திரு.ராகவன் (வயது-22) திரு. யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் திரு. ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இரங்கல்
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், என்று குறிப்பிட்டு உள்ளார். இது போன்ற விஷயங்களை தவிர்க்க நீரில் மூழ்கும் நபர்களின் கையை பிடித்து இழுக்க கூடாது. அப்படி இழுத்தால் உள்ளே புதையும் நபரின் இழு விசை காரணமாக காப்பாற்ற போகும் நபர்களும் நீருக்குள் மூழ்கும் நிலை ஏற்படும். இதை தடுக்க கிராமங்களில் ஒரு வகையான மீட்பு முறை பயன்படுத்தப்படும்.

தலை முடி
அதன்படி உள்ளே விழும் நபர்களின் தலை முடியை பிடித்து இழுக்க வேண்டும். அதாவது தலை முடியை பிடித்தால் இவர்களை காப்பாற்றலாம். அப்படி இல்லை என்றால் உடலில் இருக்கும் அரைநாண் கயிறை பிடித்து இழுக்கலாம். அதுவும் பயன் தரும். ஆனால் கையை மட்டும் பிடிக்கவே கூடாது. இங்கே அர்ச்சர்கர்களின் உடலில் இருக்கும் அங்கவஸ்திர துணி போன்றவற்றை பிடித்து இழுத்து இருக்கலாம். ஆனால் இவர்கள் கையை பிடித்து இழுக்க முயன்றதால் மேலும் 4 அர்ச்சகர்கள் பலியாகி உள்ளனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாததும் பெரிய காரணமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications