பாஜகவில் இருந்து கொண்டு உதயநிதியோடு நட்பா?.. குஷ்பு எடுத்த முடிவு.. என்னதான் நடக்குது?
சென்னை: பாஜக உறுப்பினர் குஷ்புவிற்கு சொந்தமான நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள அரண்மனை 3 படத்தின் வெளியீட்டு உரிமை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு இந்த படத்தின் வெளியீட்டு உரிமை வழங்கப்பட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
நடிகை குஷ்பு தற்போது பாஜகவில் உறுப்பினராக இருக்கிறார். பெரியார் மீது இருந்த பற்று காரணமாக திமுகவில் அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு அங்கிருந்து அப்படியே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திமுக கட்சியோடு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் என்ற அளவில் பொறுப்புகள் தரப்பட்டாலும், தேசிய தலைமையோடு கொஞ்சம் நெருக்கமாக இருந்தாலும் மாநில அளவில் நிலவிய கோஷ்டி மோதலால் காங்கிரஸ் கட்சியில் வெளியேறி பாஜகவில் இணைந்தார்.
.

குஷ்பு பாஜக
பாஜகவில் இணைந்த உடனே அவருக்கு கட்சியில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் தனக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணிகளை இவர் மேற்கொண்டு வந்தார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் நிற்பார் என்று தகவல்கள் முன்பே வந்த நிலையில், குஷ்பு அவரை எதிர்த்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குஷ்பு திமுக
குஷ்பு இதற்காக தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவர் கடைசியில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்கப்படவில்லை. மாறாக இவர் திமுக வேட்பாளராக இருந்த டாக்டர் எழிலனுக்கு எதிராக ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலில் எழிலன் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வானார். இந்த நிலையில்தான் சமீபத்தில் குஷ்பு கட்சி மாற இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் எல்லாம்வெளியானது. அவர் திமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளியானது.

அரண்மனை 3
ஆனால் அந்த செய்திகள் அனைத்தையும் குஷ்பு மொத்தமாக மறுத்தார். இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கடுமையாக பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது புதிய திருப்பமாக குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்புவிற்கு சொந்தமான அவ்னி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ள அரண்மனை 3 படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் உலகம் முழுக்க இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ்
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு குஷ்பு வெளியீட்டு உரிமையை கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. 7ம் அறிவு, ஆதவன் உள்ளிட்ட படங்களை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி வந்த பின் பெரிய அளவில் படங்களை வெளியிடவில்லை. உதயநிதி நடித்த மனிதன், நண்பேன்டா உள்ளிட்ட படங்களை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டது. உதயநிதி மனைவி இயக்குனர் கிருத்திகா இயக்கிய வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களை வெளியிட்டது.
|
திமுக ஆட்சி
ஆனால் மற்ற படங்களின் வெளியீட்டு உரிமை கிடைக்கவில்லை. இப்போது ஆட்சி மாறிய பின் மீண்டும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கம்பேக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதல் படமே பெரிய படமாக அரண்மனை 3 படத்தை ஆர்யா நடிப்பில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. குஷ்பு திமுகவிற்கு எதிரான பாஜகவில் இருந்து கொண்டு இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுத்தது ஏன்.. என்ன நடந்தது என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான ட்வீட்டில் உதயநிதியை குஷ்பு டேக் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குஷ்பு ட்வீட்
பாஜகவில் இருந்து கொண்டு உதயநிதிக்கு ஆதரவா என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். உதயநிதிக்கு எதிராக தேர்தலில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குஷ்பு அவரின் தயாரிப்பு நிறுவன படத்தின் வெளியீட்டு உரிமையை அதே உதயநிதிக்கு கொடுத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஆனால் சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு.. குஷ்பு செய்ததில் எந்த தவறும் கிடையாது. படங்களை விற்பனை செய்வது என்பது தனிப்பட்ட விஷயம் என்றும் சினிமா துறையினர் பலர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications