"வாயே திறக்கல".. சைலண்ட்டாக பாஜகவை ஆட வைத்த எடப்பாடி! எல்லாம் நல்லதுக்குத்தான்.. குஷியில் அறிவாலயம்!
சென்னை; அதிமுக தலைவர்கள் பலர் வரிசையாக பாஜக பற்றி கருத்து தெரிவித்து வந்தாலும்.. எடப்பாடி பழனிசாமி இதில் எதுவும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். பாஜக தரப்பை எடப்பாடியின் இந்த மௌனம் ஆட வைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன் பற்ற வைத்த தீ தற்போது காட்டுத்தீயாக அதிமுக - பாஜக இடையே பரவிக்கொண்டு இருக்கிறது. அதிமுகவின் ஐடி விங் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடந்தது.
இதிலும்., அதன்பின் பல்வேறு பேட்டிகளிலும் பொன்னையன் பேசியதுதான் அதிமுக பாஜக இடையிலான மோதலுக்கு தொடக்கமாக அமைந்தது.

பொன்னையன் என்ன சொன்னார்?
அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பாஜக பற்றி பேசுகையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் தமிழ்நாடு இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது. பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்ட நினைக்கிறது. அதற்கான பிம்பத்தை பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும் என்று பொன்னையன் தெரிவித்தார். இதுதான் முதலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Recommended Video

ஜெயக்குமார் என்ன சொன்னார்?
ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இது பொன்னையனின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார். கட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றார். ஆனால் மறுநாளே ஜெயக்குமார் பாஜக குறித்து அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை மக்கள் ஏற்க வாய்ப்பே இல்லை. அவரவர் நாங்கள் இத்தனை இடங்களை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது. அதற்காக முயற்சி செய்வது ஆகியவற்றில் தவறு இல்லை. ஆனால் மக்கள் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டார்கள் என்று கூறினார்.

செல்லூர் ராஜு என்ன சொன்னார்?
இதற்கு ஓபிஎஸ் எதுவும் பதில் சொல்லாத நிலையில் இன்னொரு பக்கம் செல்லூர் ராஜுவும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். பொன்னையன் கட்சி வளர்ச்சிக்காக அப்படி பேசி இருக்கிறார். கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. அதெல்லாம் எளிதாக செய்ய முடியும். பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம், என்று கடுமையாக தாக்கி பேசினார். இந்த மூவரின் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் கரு நாகராஜன், வி பி துரைசாமி போன்றவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.

அண்ணாமலை கேள்வி
இந்த விவகாரத்தில் அதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த அண்ணாமலையும் அதன்பின் கருத்து தெரிவித்தார். அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டிய தேவை இல்லை. அதிமுக தலைவர்கள் விமர்சனங்களுக்கு பாஜக தலைவர்கள் பதில் தர மாட்டார்கள். பாஜக மீதான அதிமுகவின் பொன்னையன், செல்லூர் ராஜூ கருத்துகள் தனிப்பட்டவை. அதிமுகவின் நிலைப்பாட்டை ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார், என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஆனால் பேசவில்லை
எடப்பாடி பழனிசாமி இதில் ஏதாவது கருத்து தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில், அண்ணாமலை இப்படி குறிப்பிட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நொடி வரை.. இது கட்சி கருத்தா அல்லது தனிப்பட்ட கருத்தா என்று எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவர் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார். அதிலும், ஜெயக்குமார் போன்ற எடப்பாடிக்கு நெருக்கமான தலைவர்களே பாஜகவை விமர்சனம் செய்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. . பாஜக தரப்பை எடப்பாடியின் இந்த மௌனம் ஆட வைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

திமுக கொண்டாட்டம்
இந்த தொடர் மோதல்களால் அதிமுக - பாஜக லோக்சபா தேர்தலில் ஒன்றாக கூட்டணி வைத்து போட்டியிட வாய்ப்பு குறைவு என்று செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதாவது இவர்களின் கூட்டணி முறியலாம், பாஜக தனியாக மூன்றாவது கூட்டணி அமைக்கலாம். பாஜக, பாமக போன்ற கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று செய்திகள் வர தொடங்கி உள்ளன. அப்படி நடந்தால் அது நமக்குத்தான் சாதகம் என்று இப்போதே திமுக கொண்டாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மூன்றாவது கூட்டணி
ஏனென்றால் மூன்றாவது கூட்டணி அமைந்தால் அது கண்டிப்பாக ஆளும் கட்சிக்கே சாதகமாக செல்லும் என்பது வரலாறு. ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் ஒரே கூட்டணிக்கு செல்லாமல் பிரிந்து செல்லும். இது பெரும்பாலும் ஆளும் ஆட்சிக்கு சாதகமாக அமையும். 2016ல் அதிமுக ஜெயிக்க இது முக்கியமான காரணமாக இருந்தது. அதே போல பாஜக - அதிமுக கூட்டணி உடைந்தால் அது தங்களுக்கும் சாதகமாக அமையும் என்று திமுக புதிய உற்சாகத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications