’மக்களைத் தேடி மருத்துவம்’ இந்தியாவிலேயே ஏன் சிறந்த திட்டம்? - அமலோற்பவநாதன் தரும் கள நிலவரம்
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறது. அதற்கான விழா ஏற்பாட்டில் ஆளும் கட்சியினர் மிக உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிப் பொறுப்பு வந்த திமுக, வழக்கம் போல், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களில் மட்டுமே கவனத்தைச் செலுத்தாமல், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளில் இந்த முறை அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களிலேயே சிறந்தது 'மக்களைத் தேடி மருத்துவம்' என்கிறார் பொது சுகாதார வல்லுநர் மருத்துவர் அமலோற்பவநாதன். இது இந்தியாவிலேயே மிகச் சிறந்த திட்டம் என்றும் அவர் சொல்கிறார்.

பொது மக்கள் அரசு மருத்துவனை வாசல்களில் கால்கடுக்கக் காத்திருக்காமல், வீட்டிலிருந்தபடி சிகிச்சை எடுக்க இத்திட்டம் வழி ஏற்படுத்தித் தந்துள்ளது என்கிறார் அவர்.
குறிப்பாக மலைக் கிராம மக்கள், பொது போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத ஊர் மக்கள் எனப் பல பகுதியினர் இதனால் மறு உயிர் பெற்றுள்ளனர் என்கிறார் அமல்.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் எந்தவகையில் சிறந்தது? பொது சுகாதார வல்லுநர் மருத்துவர் அமலோற்பவநாதனிடம் பேசினோம். அவர் பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"இது ஏன் சிறப்பான திட்டம் என்று சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் இன்றும்கூட மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவம் பெற முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.
உடல்நிலை ஒத்துழைக்காததால் பலர் நேரடியாக மருத்துவமனைக்கு வர முடிவதில்லை. பக்கவாதம் போன்ற நோய்க்கூறுகளால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்த படுகையாக உள்ளவர்கள் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாகப் பயணம் செய்ய முடியாது.

அதேபோல் வயதானவர்கள் கூட இயல்பாகப் பயணம் செய்ய முடிவதில்லை. இவர்களைப் போலவே நகரங்களுடன் சரியான போக்குவரத்து வசதி தொடர்பு கிடைக்காதவர்கள் எனப் பலர் நேரடியாக மருத்துவமனைகளுக்கு வருவதில் தடைகள் இருக்கின்றன.
எனவே இவர்களைப் போன்றவர்களுக்கு எல்லாம் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதற்காகத்தான் தமிழ்நாட்டில் ஒரு புரட்சிகரமான திட்டமாக இந்த 'மக்களைத் தேடி மருத்துவ'த் திட்டம் உள்ளது" என்கிறார் அமல்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அமலோற்பவநாதன் , "குறிப்பிட்டுச் சொன்னால், இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மேலும் வீடு தேடிச் சென்று மருத்துவர்கள் சேவை செய்வதால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு அடைந்தவர்கள் எனப் பலரும் இத்திட்டத்தால் அதிக நன்மையை அடைந்துள்ளனர்.
நோயாளிகளின் வீடு தேடி மருத்துவர்கள் மட்டும் செல்லவில்லை. மருந்துப் பொருட்களும் வீடுவரை சென்று வழங்கப்படுகின்றன. இதனால் நோயாளிகள் அதிக அலைச்சல் இல்லாமல் தங்கள் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துப் பொருட்களுடன் வீட்டிலேயே ஃபிசியோதெரபி சிகிச்சையும் கொடுக்கப்படுகின்றன. சிறுநீரகம் பழுதானவர்களுக்கு வீட்டிலேயே டயாலிசிஸ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன" என்கிறார்.
இத்திட்டம் தொடங்கப்பட்ட போது எப்படி இருந்தது, இந்த ஆண்டு பட்ஜெட்டில் இது எந்த அளவுக்கு மேலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என பல கேள்விகளை அமலோற்பவநாதனிடம் முன்வைத்தோம்.
அதற்கு அவர், "இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, வயதுமுதிர்ந்தோர், படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகள் மட்டும் பயன்பெற்றால் போதாது, தொழிலாளிகள்கூட இதன்மூலமாக பயன்பெற வேண்டும் என சில சிறப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தொழிலாளிகள் காலை வேலைக்குச் சென்றால் மாலைதான் வீடு திரும்புகிறார்கள். அவர்கள் தங்களின் மருத்துவத் தேவைக்குச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடிவதில்லை.

இதனால் ஒரு தொழிலாளி தனது நோய்க்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் முற்றிய பிறகே சிகிச்சைக்கு வருகிறார். இதை மனதில் கொண்டு தொழிலாளிகள் மருத்துவமனைக்கு வரமுடியாமல் போனாலும் அவர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும்படி 'மக்களைத் தேடி மருத்துவ'த் திட்டத்தை விரிவாக்கம் செய்து கொடுத்துள்ளார் முதலமைச்சர்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 711 தொழிற்சாலைகளில் வேலை செய்துவரும் 8 லட்சத்து 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் இந்த நிதியாண்டில் போய்ச் சேர இருக்கிறது" என்கிறார்
அமலோற்பவநாதன் சொன்ன மற்றொரு தகவல் நம் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. அதாவது அவர், "இதனால் தொழிலாளிகள் மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை. மருத்துவர்களே அவர்களைத் தேடிச் சென்று சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள்.
இதனால் நம் மாநிலத் தொழிலாளிகள் மட்டுமே நன்மை அடையப் போகிறார்கள் எனச் சுருக்கி பார்க்க வேண்டாம். இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பலன்பெறப் போகிறார்கள் என்பதில்தான் தமிழ்நாடு அரசின் திட்டம் சிறப்புப் பெறுகிறது.
ஏனெனில் இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நம் மாநிலத்தின் உயர்வுக்காக உழைக்கிறார்கள். எனவே அவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு புரட்சிகரமானது.
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வைத்து என்னென்ன வதந்திகள் எல்லாம் கிளப்பினார்கள். அவர்களின் வாயை அடைக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு மனிதாபிமானத்தோடு இத்திட்டத்திற்குள் அவர்களைக் கொண்டுவந்துள்ளது" என்கிறார்
ஆக அமலோற்பவநாதன் சொல்வதைப் போல, இனி திராவிட மாடல் ஆட்சியில் வடமாநில தொழிலாளிகளும் பயன்பெற உள்ளனர் என்பது தரமான தகவல்.












Click it and Unblock the Notifications