அக்னி பரீட்சை.. அடுத்த 1 மாதம் ரொம்ப சுதானமா இருக்கணும் பாஸ்.. விஜய்யின் 'யுத்த காலம்' தொடக்கம்!
சென்னை: "என் நெஞ்சில் குடியிருக்கும்..." என்று மேடைதோறும் முழங்கிய விஜய்க்கு, நிஜமான அரசியல் போர்க்களம் இப்போதுதான் வாசல் தெளித்துக் கோலமிட்டிருக்கிறது. இன்று மாலை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதுவரை 'சைலன்ட் மோடு'ல் இருந்த தமிழக அரசியல் களம் இனி 'வைபரேஷன் மோடு'க்கு மாறப்போகிறது. விஜய் ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் அடுத்த ஒரு மாதம் என்பது வெறும் நாட்குறிப்பு அல்ல; அதுதான் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் அக்னி பரீட்சை!

கூட்டணி குழப்பமா? 'தனி'ப் பாதையா?
திராவிடக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் தராசுத் தட்டுகளைத் தூக்கிக்கொண்டு அலைந்துகொண்டிருக்க, விஜய் இன்னும் தனது 'கூட்டணி' அட்டையைத் திறக்கவில்லை. சமீபத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், "234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி" என்கிற முழக்கம் பலமாக ஒலித்தாலும், எதார்த்த அரசியல் வேறு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஒரு தொகுதியில் போட்டியிட ஒரு வேட்பாளருக்குப் பல கோடி ரூபாய் செலவாகும் என்கிற எதார்த்தம் ஒருபுறம், "நாம ஏன் யாருடனும் ஒட்டணும்?" என்கிற லட்சியவாதம் மறுபுறம். இந்த இரண்டிற்கும் இடையே விஜய் எடுக்கப்போகும் 'மாஸ்டர் ஸ்டிரோக்' என்ன என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
தரைமட்ட வேலைகள் (Ground Work): பூத் கமிட்டி டூ வார்டு மெம்பர்!
விஜய்க்கு இருக்கும் மாபெரும் பலம் அவரது ரசிகர் படை. ஆனால், 'ரசிகன்' என்பவன் வேறு, 'தொண்டன்' என்பவன் வேறு.
வார்டு வாரியாக வேலையா? கிளைக் கழகங்கள் எந்தளவுக்கு வலுவாக இருக்கின்றன?
மக்களைச் சந்தித்தல்: திரையில் பார்த்த விஜய்யை, தெருமுனையில் மக்கள் பார்க்கத் துடிக்கிறார்கள். வெறும் ட்வீட்டுகளும், அறிக்கைகளும் மட்டும் போதாது. அடுத்த 30 நாட்களில் விஜய் எத்தனை கிராமங்களுக்குச் செல்கிறார், எத்தனை பேரின் கைகளைப் பிடித்து வாக்குச் சேகரிக்கிறார் என்பதுதான் அவரது வாக்கு சதவீதத்தை (Vote Share) நிர்ணயிக்கும்.
வியூகமா? வெறும் விளம்பரமா?
பழைய பாணி அரசியலில் திமுக மற்றும் அதிமுக கில்லாடிகள். பூத் சிலிப் விநியோகிப்பதில் தொடங்கி, கடைசி நேர 'கவனிப்புகள்' வரை அவர்கள் தேர்ந்த ஆட்டக்காரர்கள். அவர்களுக்குப் போட்டியாக விஜய் களம் இறக்கியிருக்கும் 10 பேர் கொண்ட தேர்தல் குழுவும், 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவும் எந்தளவுக்கு 'கிரவுண்ட் ரியாலிட்டி'யைப் புரிந்து வைத்துள்ளனர்?
"படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி வர்ற ஹைப் வேற, படம் ரிலீஸ் ஆன அப்புறம் வர்ற ரிப்போர்ட் வேற. விஜய்க்கு இதுதான் முதல் தேர்தல் படம். இதில் ரீ-டேக் எடுக்க முடியாது!" - இது கோட்டை வட்டாரத்தில் கேட்கும் ஒரு மெல்லிய கமெண்ட்.
தொண்டர்களின் துடிப்பு!
கடந்த சில நாட்களாக ஈரோடு முதல் வேலூர் வரை தவெக நிர்வாகிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் ஓரளவுக்குக் கூட்டத்தை ஈர்க்கின்றன. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் 'மாடல் கோட் ஆஃப் காண்டக்ட்' அமலுக்கு வரும். அதன் பிறகு காவல்துறை கெடுபிடி, தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு எனப் பல தடைகளைத் தாண்டி தொண்டர்கள் மக்களிடம் செல்ல வேண்டும்.
விஜய் இப்போது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்:
1. ஒற்றை மனிதராகப் போராடுவதா?
2. ஒத்த கருத்துடையவர்களைச் சேர்த்துக்கொண்டு 'கிங் மேக்கர்' ஆவதா?
அடுத்த ஒரு மாதம் என்பது விஜய்யின் உழைப்புக்குக் கிடைக்கும் மதிப்பெண் அட்டை அல்ல; அவர் அரசியலில் நீடிக்கத் தகுதியானவரா என்பதை மக்கள் தீர்மானிக்கும் நுழைவுத் தேர்வு. இன்று மாலை ஒலிக்கப்போகும் அந்த தேர்தல் சைரன், விஜய்யின் அரசியல் வாழ்வின் புதிய அத்தியாயத்தை எழுதப்போகிறது. வாட்ச் பண்ணுவோம்... என்ன நடக்குதுன்னு!












Click it and Unblock the Notifications