அப்படி என்ன செய்துவிட்டார்? ஏன் சினிமா உலகம் விஜயகாந்தை இப்படி கொண்டாடுகிறது?
சென்னை: அப்படி என்ன செய்துவிட்டார்? ஏன் சினிமா உலகம் விஜயகாந்தை இப்படி கொண்டாடுகிறது என்ற கேள்வி எழும்.. அதற்கான விடையை ரசிகர் ஒருவர் வெளியிட்ட இந்த பதிவில் இப்போது பார்ப்போம்..
இன்பா என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜயகாந்த் குறித்து வெளியிட்ட பதிவினை இப்போது பார்ப்போம். "படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டிய சமபந்தி சமத்துவம். அதுநாள் வரை நடிகர்களுக்கு ஒரு உணவு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு உணவு. சாதாரண தொழிலாளர்களுக்கு ஒரு உணவு என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அசைவம் கிடைக்கும் வகையில் விஜயகாந்த் செய்த சமபந்தி என்பது அன்றைய காலத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்க செய்தது விஜயகாந்தின் நல்ல மனது. இந்த மனதை தான் கொண்டாடி தீர்க்கிறது தமிழ் சினிமா.

விஜயகாந்த் வீட்டில் வழங்கப்படும் உணவு என்பது விருகம்பாக்கம் பக்கத்தில் வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குனர்கள் பலருக்கும் கிடைத்த வர பிரசாதம் இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக இருக்கும் இயக்குனர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டில் உணவு உண்டவர்கள் என்பது விஜயகாந்த் புகழ் தமிழ் சினிமாவில் இன்னும் நிலைத்திருக்கும் முக்கிய காரணம்.
டிஎப்டி படித்துவிட்டு திரைப்படங்கள் இயக்கும் கனவோடு இருக்கும் கோடம்பாக்கத்தில் திரிந்த பல இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்த ஒரு கனவு பட்டறை காவலனாக திகழ்ந்த ஒரே நடிகர் விஜயகாந்த். வெற்றி பெற்ற இயக்குனர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர்கள் பலரையும் உருவாக்கியதில் விஜயகாந்தின் பங்கு அளப்பரியது.
நடிகர் ரஜினிகாந்த் கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றி பெறாது என்ற சென்டிமென்ட் தொடர்ந்த போது தனது நூறாவது படமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கி மிரட்டியது விஜயகாந்தின் ரசிகர் படை
விஜயகாந்தின் சாதனைகளை பேசும் பொழுது அனைவரும் தவறாமல் குறிப்பிடுவது நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்ட கதை. ஒரு பாகுபலி கதை போல விஜயகாந்தின் இந்த கதையை சொல்ல பல காரணங்கள் இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்டு சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்டு வந்த நடிகர் சங்கம் கடனில் மூழ்கி இடம் திவால் ஆகும் பொழுது ஹபிபுல்லா ரோட்டில் இருக்கும் இவ்வளவு பெரிய இடம் கடனில் முழுகுவதா என களத்தில் இறங்கி கலை நிகழ்ச்சி நடத்தி கடனை அடைத்து சங்கத்திற்கு நிதியை செய்தது விஜயகாந்தால் மட்டுமே அந்த காலகட்டத்தில் செய்ய முடிந்த சாதனை.
திரை நட்சத்திரங்களில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த ரஜினி கமல் உள்ளிட்ட ஒரு பெரும் படையை மலேசியா, சிங்கப்பூர் அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலமாக வசூல் செய்த விஜயகாந்தின் சரித்திர சாதனையை தமிழ் சினிமா இருக்கும் வரை பேசிக் கொண்டே இருக்கும். இருக்கும் அளவிற்கு நடிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விட்டார் விஜயகாந்த். 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே..
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி, இதுதான் நடிகர் விஜயகாந்தின் இயற்பெயர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தவர். நடிப்பதற்காக சென்னை வந்த பிறகு தனது பெயரை "விஜயகாந்த்" என மாற்றிக்கொண்டார். இந்த பெயரை இவருக்கு சூட்டியது டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகர்.
சினிமா வாய்ப்பு இவருக்கு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது. அவரது முதல் படம், 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான 'இனிக்கும் இளமை'. அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார். 'புலன் விசாரணை', 'சேதுபதி ஐபிஎஸ்', 'சத்ரியன்', கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் விஜயகாந்த்.
54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர்: "தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்"
"சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறினார் தயாரிப்பாளர் டி. சிவா.
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்தவர்; பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் உடனான இவரது கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் எனும் திரைப்படத்தில், அப்போதைய நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கிய டி.எஸ்.பி தீனதயாளன் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் திரையில் தோன்றினார் நடிகர் விஜயகாந்த்.
தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், சற்று வயதான வேடத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து திரைப்பட கல்லூரியிலிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உழவன் மகன், செந்தூரப் பூவே, காவியத் தலைவன் போன்ற திரைப்படங்களைக் கொடுத்தார்.
அப்படி என்ன செய்துவிட்டார்? ஏன் சினிமா உலகம் விஜயகாந்தை இப்படி கொண்டாடுகிறது..?
— ☆ 𝐈𝐧𝐛𝐚 ☆ (for news and knowledge) (@im_inba1) December 28, 2023
படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டிய சமபந்தி சமத்துவம். அதுநாள் வரை நடிகர்களுக்கு ஒரு உணவு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு உணவு, pic.twitter.com/mLJfe3ni7r
சண்டைக் காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்தவர். நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது சண்டைக்காட்சிகளே. பல திரைப்படங்களில் தனக்கு டூப் வேண்டாம் என மறுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த். இதற்கு பின்னால் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 'நாளை உனது நாள்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், அவருக்கு டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, இனிமேல் எனக்கான சண்டைக்காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாமென முடிவெடுத்துள்ளார். இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். தனது பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்ததால், பலமுறை இவருக்கு தோள்பட்டை இறக்கம் ஏற்பட்டுள்ளது.
கமல்- ரஜினி அலையில் தனித்து தெரிந்தவர்; 1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் விஜயகாந்த் நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகின. மிக சில நடிகர்களுக்கு இந்த சாதனை உள்ளது.
கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற தலைமுறை உருவான போது, அதற்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த். தனது பல படங்களில் நீண்ட உணர்ச்சிபூர்வமான வசனங்களை, தன்னுடைய பாணியில் ஒரே டேக்கில் பேசி முடிப்பவர் விஜயகாந்த். கிராமங்களில் இவரது படங்கள் வெளியாகும் தினத்தன்று திருவிழாவுக்கு செல்வது போல கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்கச் செல்வோம்", என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ரசிகர் அறிவுமணி." இவ்வாறு அந்த பதிவில் இன்பா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications