"ச்சோ.. ஏமாந்துட்டேனே, ரொம்ப நம்பனேனே.. "அங்கேயே" புலம்பிய பன்னீர்.. எடப்பாடி வேற.. விரைவில் சுபம்?
சென்னை: பிரதமர் மோடி வரும் 8ம் தேதி சென்னைக்கு வருவது உறுதியானால், சில முக்கிய நிகழ்வுகள் அதிமுகவுக்குள் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. இது மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் கூட்டி வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி இடையே சலசலப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. அதிலும், இரு கட்சி தலைமைகளிடம் அதிருப்திகள் நிலவுவதாக தெரிகிறது.
அதனால்தான், அதிமுகவுடனான கூட்டணி தேவையற்றது... தமிழகத்தில் நாம் வளர வேண்டுமெனில் பாஜக தனித்து நிற்க வேண்டுமென சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார்..

அண்ணாமலை
அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன் என்றும் கூறியிருந்தார்.. இதையடுத்து, டெல்லி சென்று மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை.. ஆனால், அவரது கருத்தை டெல்லி மேலிடம் ஏற்றுக்கொள்ளாமல் அண்ணாமலையைச் சமாதானப்படுத்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.. இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லியில் ஒரு தனியார் டிவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தந்திருந்த பேட்டி, மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்திவிட்டு போனது.

அமித்ஷா
அதில், "தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்புகள் வலுவின்றி உள்ளது அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எங்கெல்லாம் பாஜக வலுக்குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி கைகொடுக்கும் என்பதால் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்கிறோம்" என்று தெரிவித்திருந்தார் அமித்ஷா.... இதனிடையே அமித்ஷா குறித்து, செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார்கள்.. அதற்கு அவர், "இதைதானே ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

ஓட்டு வங்கி
இந்த இரு தலைவர்களின் அடுத்தடுத்த பேட்டிகளையடுத்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது.. அதுமட்டுமல்ல, விரைவில் கர்நாடக தேர்தல் வரப்போகிறது.. தென் மாநிலங்களிலேயே, பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும்தான்... அதே கர்நாடகாவில்தான், திமுகவை போலவே, அதிமுகவுக்கும் ஓட்டு வங்கி உள்ளது.. இந்த ஓட்டு வங்கி என்பது பாஜகவுக்கு இன்றைய சூழலில் தேவையாகவும் இருக்கிறது.. அதனால், எடப்பாடியின் ஆதரவை பெற அமித்ஷா அவ்வாறு சொன்னாலும்கூட, இதனால், ஓபிஎஸ் தரப்பு அப்போதே அப்செட் ஆகிவிட்டது.

டெண்டரா தொண்டரா
ஏற்கனவே, இடைத்தேர்தலில் தங்களை பாரா முகம்போல நடத்தியதாக பாஜக மீது வருத்தத்தில் இருந்த ஓபிஎஸ் தரப்பு, கூட்டணியை உறுதிசெய்துவிட்டதே என்று அதிர்ச்சி அடைந்துவிட்டதாம். அதனால்தான், அமித்ஷா பேட்டி தந்த மறுநாளே, ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், "தெளிவுதேவை. அமித்ஷா சொல்கிற அதிமுக. கூட்டணி.. அபகரிப்பு பழனிச்சாமியின் டெண்டர் அண்ணா திமுகவா..? இல்லை எங்கள் ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர் அண்ணா திமுகவா? என்பதை தெளிவுபடுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை அங்கீகரிப்பதும், அபகரிப்பு எடப்பாடியை ஆதரிப்பதும் ஒன்றுதான் என்பதை தேசபக்தி பேசும் கட்சி உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியிலும், அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் அந்த ட்வீட் பார்க்கப்பட்டது.

அதிரும் கூடாரம்
தொடர்ந்து சட்டப்போராட்டங்களில் சறுக்கலை கண்டுவரும் ஓபிஎஸ் தரப்பு, கூட்டணி உறுதி செய்யப்பட்டதால் மேலும் நொந்து போயுள்ளதாக தெரிகிறது.. இதனிடையே, வரும் 8ம் தேதி சென்னைக்கு பிரதமர் வரஉள்ளநிலையில், விமான நிலையம் அல்லது சென்னை சென்ட்ரல் நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் அவரை சந்திக்க எடப்பாடியும், ஓபிஎஸ் தரப்பும் தனித்தனியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே டெல்லிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்... மோடியின் சென்னை பயணம் உறுதி செய்யப்பட்டால், அநேகமாக, அதிமுக தலைவர்களை விமான நிலைய நிகழ்வில் மோடி சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

கைவிட்டுட்டாங்களே
ஆனால், அதிமுகவை கைப்பற்றுவதில் நீதிமன்றத்தின் மூலம் எடப்பாடி வெற்றியை பெற்று வருவது ஓபிஎஸ்சை, கவலையடைய வைத்திருக்கிறதாம்.. தனது கவலையை வெளிப்படுத்தும் முகமாக, "டெல்லியை (பாஜக) நம்பி ஏமாந்துவிட்டேன். என்னை அவர்கள் கைவிட்டு விட்டனர்" என்று சசிகலா, தினகரன் தரப்பினரிடம் புலம்பித் தீர்த்தாராம்.. அதுபோலவே, அண்ணாமலையிடம் கூட இதனை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் ஓபிஎஸ்.. ஓபிஎஸ்ஸின் இந்த புலம்பல், டெல்லிக்கும் எடுத்து சொல்லப்பட்டிருக்கிறதாம்..

கிரேட் அட்வைஸ்
இப்படிப்பட்ட சூழலில்தான், "அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்" என்று அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமயும் உறுதி செய்துவிடவும், இதனால் ஓபிஎஸ் மேலும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டாராம்.. எனவே, சென்னைக்கு மோடி வரும்போது நிச்சயம் ஓபிஎஸ்ஸை அழைத்து சமாதானப்படுத்துவார், அவரது வருத்தத்தை போக்கி நம்பிக்கை வார்த்தைகளை தருவார் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல எடப்பாடிக்கும் சில அட்வைஸ்களை பிரதமர் தரப்போகிறாராம்.. இதனை செய்வதற்காகவாவது, இருவரையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ அவர்களை சந்திப்பார் என்றும் நம்பிக்கையாக சொல்லப்படுகிறது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications