"டார்கெட் கொங்கு".. நேரடியாக களத்திற்கே வந்த உதயநிதி.. 17 வருடத்திற்கு பின்.. இப்படி ஒரு சம்பவமா!
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய மாநாட்டை நடத்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை பணிகளுக்கு இடையில் அரசியல் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி லோக்சபா தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி சார்பாக மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2007ல் முதல்வர் ஸ்டாலின்.. அப்போதைய திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்தார். இளைஞரணி வெள்ளிவிழா மாநாட்டை பிரம்மாண்டமாக ஸ்டாலின் நடத்தினார். அதேபோல் பிரம்மாண்டமாக திமுக சார்பாக அதன்பின் இளைஞரணி மாநாடு நடத்தப்படவில்லை.

இந்த நிலையில்தான் அதேபோல் பிரம்மாண்ட இளைஞரணி மாநாட்டை 17 ஆண்டுகளுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக இடம் தேர்வு செய்ய பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருக்கிறதாம். அதாவது கொங்கு மண்டலமா, மத்திய தமிழ்நாட்டிலா எங்கு மாநாட்டை நடத்துவது என்று ஆலோசனை செய்யப்பட்டதாம்.
கடைசியில் கொங்கு மண்டலத்தில் மாநாட்டை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். இதில் கோவை, தருமபுரி, நாமக்கல் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு கடைசியில் சேலம் இறுதி செய்யப்பட்டு உள்ளதாம். அதன்படி வரும் நவம்பர் இறுதியில் சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவின் இளைஞரணி மாநாடு நடத்தப்படும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக இளைஞரணி தலைகள் சிலர் இந்த லோக்சபா தேர்தலில் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்களுக்கு வாய்ப்புகளுக்கு கொடுக்கும் விதமாக அவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் அதற்கு முன்னோட்டமாக இந்த மாநாடு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கொங்கில் திமுகவின் முகமாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் வருகை திமுகவிற்கு வலு சேர்க்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.
செந்தில் பாலாஜி இல்லாத காரணத்தால் கொங்கு மண்டல திமுகவினர் அப்செட் ஆகி உள்ளனர். அவர்கள் பெரிய ஆர்வம் இன்றி உள்ளனர். அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக உதயநிதி இங்கே களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை பணிகள்: தற்போது சென்னையில் நடக்கும் ஹாக்கி ஆசிய கோப்பை தொடருக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார். ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் பெரிய வெற்றிபெற்றது போலவே இந்த தொடரையும் உலக நாடுகள் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறைக்கு வந்த பின், அவர் தலைமையில் நடக்கும் முதல் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இதனால் இதை மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக உலக நாடுகள் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஹாக்கி தீமில் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக துறை ரீதியான அதிகாரிகளுக்கும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இவர் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக மைதானத்தை சுற்றி உள்ள இடங்களை சுத்தப்படுத்த வேண்டும், அலங்காரம் செய்ய வேண்டும் என்று உத்தரவுகளை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சென்னை மாநகர மேயர் ப்ரியா மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாக களமிறங்கி இதற்கான பணிகளை செய்து வருகின்றனர். மைதானத்திற்கு உள்ளே ஏற்பாடுகளை நேரடியாக கண்காணிக்க தொடங்கி உள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன். இன்னொரு பக்கம் சென்னை மாநகர மேயர் ப்ரியா சுற்றுவட்டார பகுதிகளில் அடிப்படை வசதிகள், அலங்கார அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இது முடிந்த பின் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications