ஓபிஎஸ் இன்றும் சட்டசபையில் ஆப்சென்ட்.. பட்டு வேட்டி சட்டை சரசரக்க எங்க போனார்னு தெரியுமா?
சென்னை: சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் சீட் மாற்றப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அவர் சட்டசபைக்கு வரவில்லை. தற்போது ஓபிஎஸ் எங்கே இருக்கிறார்?
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக தேர்வானது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்தனர். அதன்பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் எதிர் எதிர் அணிகளாகப் பிரிந்தனர்.

எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டார். அதே பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து, அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓபிஎஸ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் இருக்கை மாற்றம்: இதையடுத்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு அருகில் உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக சார்பில் நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால், சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணை தலைவர் என்பதே சட்டசபை விதியில் இல்லை, இருக்கை விவகாரம் என் முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவித்து வந்தார்.
ஓபிஎஸ் இருக்கையை மாற்றாமலேயே தொடர்ந்து வந்தார் அப்பாவு. இதுதொடர்பாக ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தொடரின் போதும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரச்சனை செய்யும். எனினும், ஓபிஎஸ் சீட் மாற்றப்படவே இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே ஓபிஎஸ் சீட் இருந்து வந்தது. இந்த சூழலில், கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "பேரவை தலைவர் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார். இதைத் தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான பகுதியின் முதல் வரிசையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே ஓபிஎஸ் இருந்த இருக்கையில், துணை தலைவராக தேர்வான ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
சீட் காலி: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் இருக்கைக்கு பின்னால் 2-வது வரிசையில், முதல் சீட் ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இருந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும், ஓபிஎஸ் இருக்கைக்கு பின்புறம் ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த 3-வது வரிசையில் மனோஜ் பாண்டியனுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஒன்றரை ஆண்டுகளாக அதிமுகவினர் முன்வைத்த கோரிக்கை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டதால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தார் ஓபிஎஸ். ஆனால், பாஜகவுடன் சேர்ந்துவிட்டதால் இனி அவருக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்க வேண்டாம் என திமுக தரப்பு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் ஓபிஎஸ் சட்டசபைக்கு வரவில்லை. இதன் காரணமாக ஓபிஎஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய இருக்கை 2 நாட்களாக காலியாகவே உள்ளது.
குல தெய்வம் கோவிலில் ஓபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனது சொந்த ஊரான தேனியில் இருந்து வருகிறார். இன்று அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று இரவு ராஜபாளையம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த ஓபிஎஸ், இன்று காலையில் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, செண்பகத்தோப்பு அடிவார பகுதியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்றார் ஓபிஎஸ். எந்த ஒரு அரசியல் நடவடிக்கைக்கு முன்பாகவும், தனது குல தெய்வ கோவிலுக்குச் செல்வார் ஓபிஎஸ். லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் ஓபிஎஸ் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ள நிலையில், குல தெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
சொந்த ஊரில் இருப்பதன் காரணமாகவே ஓபிஎஸ், சட்டசபைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ஆம் தேதி வரை நடைபெற இருப்பதால், அதற்கு சென்னை வந்து சட்டப்பேரவை நிகழ்வில் ஓபிஎஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications