சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

' நம்பவைத்து ஏமாற்றினாரா பிரதமர் மோடி?!' -தேவர் குருபூஜை சர்ச்சை

Google Oneindia Tamil News

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ஆனால், 'பிரதமரின் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை' என அண்ணாமலை கூறியதையடுத்து, கடும் விமர்சனத்துக்கு பாஜக ஆளாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக சார்பில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதனையேற்று அவர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலை பிரதமர் அலுவலக அதிகாரிகளே தெரிவித்ததாக சில செய்தி ஊடகங்கள் தகவலை வெளியிட்டதுதான் ஹைலைட்.

Why PM Narendra Modi is not coming to Pasumpon Thevar Jayanthi anniversary?

மேலும், 'பிரதமரின் நிகழ்ச்சி நிரல்கள் முடிவான பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்' எனவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக, மோடியின் ஆதரவாளராக வலம் வரும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, 'ஜெயலலிதா பாணியை மோடி மேற்கொள்ள இருப்பதாக' சில யூடியூப் சேனல்களுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

அதில், 'தேவர் குருபூஜைக்கு மோடி வந்தால் இமானுவேல் சேகரன் குருபூஜைக்கும் அவர் வரவேண்டுமென தேவேந்திரகுல வேளாளர்கள் கேட்கிறார்கள். முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மோடிக்கு உள்ளது' என்றொரு கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார். அதேபோல, வலதுசாரி ஆதரவாளராகப் பார்க்கப்படும் ஸ்ரீராம் சேஷாத்திரி, 'தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் வருவதாக ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதற்கான அழைப்பிதழை பாஜக கொடுத்திருக்கிறது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பிரதமர் வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்' என்றார்.

Why PM Narendra Modi is not coming to Pasumpon Thevar Jayanthi anniversary?

ஆக, பிரதமரை முன்னிறுத்தி பல கோணங்களில் சர்ச்சைகள் வளர்ந்துகொண்டே இருந்தன. 'அவர் வருவாரா..வரமாட்டாரா?' என்பது குறித்து தமிழக பாஜகவினர் எந்த விளக்கத்தையும் அளிக்காததால், அந்தத் தகவல் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, 'மதுரை விமானநிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை மோடி சூட்ட உள்ளார்' என்ற செய்தியும் தீயாய் பரவியது. அதற்கும் பாஜக தரப்பிடம் இருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

ஒருவழியாக, 'விழாவில் மோடி பங்கேற்கவில்லை' என்ற தகவலை தமிழக பாஜக உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 'அக்டோபர் 30 ஆம் தேதியன்று நடக்கவுள்ள பூஜைக்கு பிரதமர் வருவதாக செய்தி எதுவும் இல்லை. பிரதமரின் வருகை குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை' என்றார்.

அண்ணாமலையின் விளக்கத்தை முன்வைத்து சமூக ஊடகங்களில் பாஜகவினரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Why PM Narendra Modi is not coming to Pasumpon Thevar Jayanthi anniversary?

இதுதொடர்பாக திமுக ஆதரவாளரான மதுரை பாலா சில காணொளிகளை வெளியிட்டுள்ளார். அதில், 'நீங்க என்னவெல்லாம் சொன்னீங்க?' என்று பாஜகவினரை நோக்கி அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அதில், 'தேவர் ஜெயந்தி விழாவில் மோடி கலந்து கொண்டால் அதன்மூலம் முத்துராமலிங்கத் தேவருக்கு தேசியத் தலைவர் என்ற அடையாளம் கிடைத்துவிடும். அதன்பிறகு இந்தியா முழுக்க தெரிந்த தலைவராக முத்துராமலிங்க தேவர் மாறிவிடுவார். சாவர்க்கருக்கும் தேவருக்கும் நட்பு இருந்தது. அந்தக் காலத்திலேயே சாவர்க்கரை தமிழ்நாட்டுக்கு முத்துராமலிங்க தேவர் அழைத்தார் என்று எவ்வளவு கதையை விட்டீர்கள்.

முதல்ல ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். எட்டுமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலில் விழுந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் சாவர்க்கர். தேவர் அப்படியில்லை. அவர் ஒரு சிங்கம். அந்தக் காலத்திலேயே சுபாஷ் சந்திரபோஸுடன் சேர்ந்து வெள்ளைக்காரனை எதிர்த்தவர். அவரையும் மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரையும் ஒப்பிட்டுப் பேசுவதே தவறு' எனக் குறிப்பிட்டார்.

Why PM Narendra Modi is not coming to Pasumpon Thevar Jayanthi anniversary?

தொடர்ந்து அந்த வீடியோவில், ' 1963 ஆம் ஆண்டில் தேவர் மறையும் வரையில் மதுரை ஆதின மடத்திலிருந்து வந்த திருநீரைத்தான் அவர் நெற்றியில் இட்டுக் கொள்வார். அதற்காக ஆதினம் அவருக்கு, 'சன்மார்க்க சண்டமாருதன்' என்ற பட்டத்தையே கொடுத்தது, சன்மார்க்கம் என்பது இந்து மதம் இல்லை. அது அருட்பெருஞ்சோதி வள்ளலார் வழிவந்தது.

தேவரை சாதி சிமிழுக்குள் அடைக்காதீர்கள். அவர் சுபாஷ் சந்திரபோஸின் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக இருந்தவர். அந்தக் கட்சியின் கொள்கை என்ன தெரியுமா? சோஷியலிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் என இரண்டும் கலந்தது. அந்தக் கட்சிக்குத் தலைவராக இருந்தவரைப் போய் சாதி அடையாளத்தில் வைத்துப் பேசுவதா? வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்.

1957 செப்டம்பர் 27 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் முத்துராமலிங்க தேவர் பேசிவிட்டுப் போகும்வழியில் கோரிப்பாளையத்தில் வைத்து அன்றைய காங்கிரஸ் அரசு அவரைக் கைது செய்தது. அந்தக் கைது நடந்த இடத்திலேயே அவருக்கு 1974 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி சிலையை வைத்தார். தொடர்ந்து, பசும்பொன்னில் தேவருக்கு நினைவிடத்தையும் அவர் எழுப்பினார். தேவர் பெயரில் கல்வி நிறுவனத்தையும் கலைஞர் உருவாக்கினார். முத்துராமலிங்க தேவர் மறைந்தபோது நேரில் சென்று மரியாதை செய்தவர், அண்ணா.

காந்தியைக் கொலை செய்துவிட்டு அங்கே போய் கும்பிடு போடுவதுதான் பாஜகவின் வழக்கம். முக்குலத்தோர் சமூகத்தின் கல்வியையும் வேலைவாய்ப்பையும் சட்டம் போட்டுப் பறித்தவர் நரேந்திர மோடி. எனவே, தேவர் குருபூஜைக்கு நாடகம் போடும் வேலையை எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்' என ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, யூட்யூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன், 'மக்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக நினைக்கிறது. இதுவே பாசிசத்தின் கோட்பாடு. 100 வருடங்களாக ராமர் கோயில் கட்டுவதாகச் சொல்லிச் சொல்லியே பாபர் மசூதியை இடித்தார்கள். இப்போது தாஜ்மகாலை இடிக்கப் போகிறோம் என்கிறார்கள். தேவர் குரு பூஜைக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.

மக்களை சாதிரீதியாக பிளவுபடுத்தினால்தான் இந்து மதத்தை நிலைநிறுத்த முடியும் என்று பாஜக நினைக்கிறது. முத்துராமலிங்கத் தேவர் எந்தக் காலத்திலும் சாதி மாநாட்டில் பேசியதில்லை. அவர் மதவாதியும் கிடையாது. இந்தியாவின் மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்கு யார் வேண்டுமானாலும் மரியாதை செலுத்தலாம்.

ஒருகாலத்தில் அண்ணா மீது காரசாரமான விமர்சனத்தை தேவர் முன்வைத்தார். ஆனால், 'முத்துராமலிங்கத் தேவர் இறந்துவிட்டார்' என்ற செய்தி வந்ததும் கண்ணீர்மல்க முதல் ஆளாகப் போய் நின்றவர், அண்ணா. அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் சார்பாக தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒருவராவது தேவருக்கு அஞ்சலி செலுத்தினார்களா?

முத்துராமலிங்கத் தேவருக்கு முதன்முதலாகச் சிலை வைத்த சமூகத்தினர் யார் தெரியுமா? பிள்ளைமார் சமூகத்தினர்தான். இது எத்தனை பேருக்குத் தெரியும்? மோடி வருவதால் தேவர் குலத்துக்கு என்ன நன்மை? விமானநிலையத்துக்கு தேவர் பெயரை வைப்பதால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது? தேவருக்கு மோடி மரியாதை செலுத்துவது பெரிதா? இந்தியாவுக்கு 17 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர் நேரு. அணிசேரா நாடுகளின் தலைவராக இருந்தவர். அவரையே நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டவர் முத்துராமலிங்கத் தேவர். அப்படிப்பட்ட தலைவருக்கு மோடி அஞ்சலி செலுத்தினால் பெருமை ஏறிவிடுமா?

இந்தச் சர்ச்சையை முன்வைத்து 2026 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள தேர்தலில் சில அறுவடைகளைச் செய்வதற்காக பொய் மூட்டையை பாஜக அவிழ்த்துவிடுவதாகவே நான் நம்புகிறேன்' என விமர்சித்துள்ளார். பிரதமரின் தமிழகம் வருகை தொடர்பான செய்தியை முன்வைத்து, பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். அதேநேரம், 'உங்களையும் நம்பவைத்து ஏமாற்றிவிட்டாரா மோடி?' என பாஜகவினரை நோக்கியும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
---

English summary
Why PM Narendra Modi is not coming to Pasumpon Thevar Jayanthi anniversary here is the backround story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X