நிர்மலா சீதாராமனை சந்தித்த எஸ்பி வேலுமணி! என்ன காரணம் தெரியுமா? பின்னணி இதுதான்! அண்ணாமலை விளக்கம்
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதாக தகவல் பரவும் நிலையில் இன்று திடீரென சென்னை விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்தித்து பேசினார். இது பல யூகங்களை கிளப்பிய நிலையில் இந்த சந்திப்பில் நடந்தது என்ன? என்பது பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. சமீபகாலமாக இந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது, ‛‛தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டனாக செயல்படுவேன்'' என பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அதிமுகவினரும் பதில் கருத்து கூறினர்.

கருத்து மோதலுக்கு பின் தீர்வு
இதன் காரணமாக இருகட்சியினர் இடையே கருத்து மோதல் உருவானது. இதனால் தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக இடையேயான கூட்டணி நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக கூறினார். அதற்கு அடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக-பாஜக கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் கூட்டணி குழப்பத்துக்கு தீர்வு ஏற்பட்டது.

மத்திய அமைச்சரை சந்தித்த எஸ்பி வேலுமணி
இந்நிலையில் தான் சென்னை விமான நிலையத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்தித்து பேசினார். அதிமுக கூட்டணியில் நிலவிய குழப்பம் நீங்கியதாக கருதப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இவர்கள் 2 பேரும் சந்தித்து ஏன்? அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசினார்களா? என பல்வேறு கேள்விகள் எழுந்தன.

அண்ணாமலையும் திடீர் சந்திப்பு
அதேபோல் நிர்மலா சீதாராமனை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிர்மலா சீதாராமன் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்தித்தது பற்றி விளக்கம் குறித்தார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:

சந்திப்பில் எப்படி நடந்தது?
நிர்மலா சீதாராமனை, எஸ்பி வேலுமணி சந்தித்தது சம்பிரதாயமான சந்திப்பு. நிர்மலா சீதாராமன்-எஸ்பி வேலுமணி சந்திப்பில் கூட்டணி குறித்து பேசவில்லை. டெல்லி செல்வதற்காக நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையம் வந்தார். பெங்களூரில் இருந்து நானும் அங்கு வந்திருந்தேன். மதுரை செல்வதற்காக எஸ்பி வேலுமணி வந்திருந்தார். இந்த வேளையில் மரியாதை நிமித்தமாக நிர்மலா சீதாராமனை எஸ்பி வேலுமணி சந்தித்தார்'' என விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications