"ஆபத்தானது" என 23 நாய் இனங்களுக்கு.. விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் வாபஸ்! என்ன காரணம்! பின்னணி என்ன
சென்னை: தமிழ்நாடு அரசு 23 நாய் இனங்களுக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றுள்ள நிலையில், இதற்கான காரணத்தை நாம் இப்போது பார்க்கலாம்.
இந்த காலத்தில் பலரும் ஆர்வமாகச் செல்ல பிராணிகளாக நாய்களை வாங்கி வளர்க்கிறார்கள். இருப்பினும், நாய்களை வாங்கும் போது இருக்கும் ஆர்வம் அதை வளர்க்கும் போது பலருக்கும் இருப்பதே இல்லை. இதன் காரணமாகவே நாய்கள் ஆக்ரோஷமாகவும் ஆபத்தானதாகவும் மாறுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்படி தான் முறையாக வளர்க்கப்படாத ராட்வைலர் இன நாய்கள் 5 வயது சிறுமியைக் கடித்துக் குதறியது. இதில் அந்த சிறுமி மிக மோசமாகக் காயமடைந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருந்தது.
தடை: இதற்கிடையே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ராட்வைலர் உட்பட மொத்தம் 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களை இறக்குமதி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை ஏற்கனவே தடை செய்யப்பட்ட நாய் இனத்தை வைத்திருந்தால் அவற்றுக்கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இனப்பெருக்கம் செய்வதைத் தவிர்க்கவே கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த வகைகள்: பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சவுத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வைலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் ஆகிய வகைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வகை நாய்கள் பொதுவாக ஆக்ரோஷமானவை.. இவற்றை முறையாகப் பயிற்சி கொடுக்கவில்லை என்றால் பொதுமக்களுக்கு ஆபத்தானதாக மாறும். அதற்குச் சென்னையில் நடந்த சம்பவமே உதாரணம். இதன் காரணமாகவே இந்த வகை நாய்களுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே நாய்க் கடி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
வாபஸ்: இந்தச் சூழலில் 23 வகையான நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை வாபஸ் பெற்றுள்ளது.. தடை விதித்து மறுநாளே அதை வாபஸ் பெறுவது ஏன் என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே இதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.
என்ன காரணம்: அதாவது மத்திய அரசு ஏற்கனவே இந்த குறிப்பிட்ட வகை நாய்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அந்த அறிவிப்பாணையை வைத்தே தமிழக அரசு, இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இருப்பினும், மத்திய அரசின் நாய் தடை அறிவிப்பிற்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மேலும், பல நீதிமன்றங்கள் அந்த அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடையும் விதித்து இருந்தது.
இதன் காரணமாகவே தமிழக அரசும் நேற்று பிறபித்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தில் உரிய ஆலோசனைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தமிழக அரசு கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications