ரியல் எஸ்டேட் உலகில் மாற்றம்.. சென்னையில் சர்ரென உயரும் வீட்டு விலைகள்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: சென்னையில் மெட்ரோ பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் வீடுகளின் விலை, ரியல் எஸ்டேட் மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.

மெட்ரோ விரிவாக்கம்: இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 116 கிமீ இரண்டாம் கட்ட திட்டம் ₹61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ஒப்பந்தம்: சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 4 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.
மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (OCC) அமைப்பதற்கான ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் கட்டிட வேலை, கட்டிடக்கலை உட்பட, இயந்திரம், மின் மற்றும் பிளம்பிங் (MEP), காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) மற்றும் அனைத்து தொடர்புடைய பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

விலை ஏற்றம்: சென்னையில் மெட்ரோ பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் வீடுகளின் விலை, ரியல் எஸ்டேட் மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் சந்தையை கண்காணித்து வருபவர்கள் கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் பாதையில் கட்டுமானம் மற்றும் பயணம் தொடங்கியதில் இருந்தே சொத்துகளின் விலை உயர்ந்துள்ளது.
நிலத்தின் விலைகள் சராசரியாக 20% முதல் 35% வரை உயர்ந்துள்ளது (இடம், தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை பொறுத்து). இன்னொரு பக்கம் கட்டிய வீடு சொத்து விலைகள் 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளன. வரவிருக்கும் மெட்ரோ பாதைகள் முழுவதும் உள்ள இடங்கள் ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து புதிய விலைக்கு ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.
அதன்படி கிண்டி கடந்த பத்தாண்டுகளில் சராசரி சொத்து விலையில் 35% அதிகபட்ச விலை உயர்வைக் கண்டுள்ளது. கிண்டியில் 2013 இல் ஒரு சதுர அடிக்கு ₹10,000 முதல் 2023 இல் கிட்டத்தட்ட ₹13,500 வரை உயர்ந்துள்ளது. வடபழனியில், 2013 இன் சராசரி விலைகள் ஒரு சதுர அடி ₹7,900 ஆக இருந்தது, தற்போது ஒரு சதுர அடி ₹10,000 ஆக உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டையில் ஒரு சதுர அடிக்கு ₹9,500 ஆக இருந்தது, தற்போது அது 25% அதிகரித்து ₹11,900 ஆக உள்ளது.
மாதவரம் மற்றும் அதன் புறப் பகுதிகள், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகள் , பூந்தமல்லி முதல் போரூர் வரை 20% முதல் 40% வரை அதிகரித்துள்ளன என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications