தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான மண்ணெண்ணெய்யை மத்திய அரசு குறைத்தது ஏன்? இப்படி ஒரு காரணமா?
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையைவிட சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களும் பசியாற உண்ண வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த விலையில் உணவு பொருட்களை வழங்குவது, சிலவற்றை இலவசமாக வழங்குவது என அந்தந்த அரசுகள் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அது போல் வட இந்தியாவில் கோதுமை குறைந்த அளவில் கொடுக்கப்படுகிறது. இப்படியாக ரேஷன் பொருட்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதில் குறிப்பாக மண்ணெண்ணெய்யின் பயன்பாட்டை சொல்லலாம். அதாவது தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் இல்லாத கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு லிட்டரின் விலை ரூ 15 க்கு விற்பனையாகிறது.
இதை சிலிண்டர் இல்லாதவர்கள் வாங்கி ஸ்டவ்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு தேவைப்படாத நிலையில் வேறு யாருக்காவது விற்பனை செய்து விடுகிறார்கள். மேலும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைகிறார்கள்.
அடுப்பில் புகையில் கஷ்டப்பட்டு வந்த பெண்கள், கேஸ் சிலிண்டருக்கு மாறியுள்ளார்கள். ஆனால் கேஸ் சிலிண்டரின் விலைதான் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.
அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து மாதந்தோறும் 75 லிட்டர் தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்டது. அது போல் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 45.20 லட்சம் லிட்டராகவும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27.12 லட்சம் லிட்டராகவும் பாதிக்கு பாதி குறைத்துவிட்டது.
இதனால் கார்டுதாரர்களுக்கு தலா 2 முதல் 3 லிட்டர் வரை வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டில் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டது. தமிழகத்தில் 2.24 கடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதே நேரத்தில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.40 கோடியாகும்.
இதை பார்த்தோமேயானால் ரேஷன் கார்டை விட கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அதிகம். மேலும் ஏழை பயனாளிகளுக்கு புதிய கேஸ் சிலிண்டர் இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications