3 விரல்களை இழந்த விஜயகாந்த்.. சிறிது சிறிதாக கேப்டனை சிதைத்த சர்க்கரை நோய்! நிற்க கூட முடியலயே
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கடந்த ஆண்டு 3 கால் விரல்கள் அகற்றப்பட்டது ஏன்? அப்படி அவரது உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என விரிவாக பார்ப்போம்.
சினிமா, அரசியல் என ஓய்வின்றி பம்பரமாய் சுழன்றுகொண்டு இருந்தவர் விஜயகாந்த். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பின்னர் உடல்நிலை மோசமானது. சினிமாவில் முழுமையாக ஓய்வு நிலைக்கு சென்று அரசியலிலும் அதிகளவில் தலைகாட்டாமல் மருத்துவமனை, சிகிச்சை, வீடு என்று இருந்தார். அவரது பேச்சு குளறல், நிற்பது, நடப்பதில் தடுமாற்றம் அவரது அணு அணுவாக ரசித்து வந்த தொண்டர்களை கலங்க வைத்தாலும் கடந்த ஆண்டு அவருக்கு செய்த அறுவை சிகிச்சை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு வந்த விஜயகாந்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். விஜயகாந்த் உடல் நிலையை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ரத்த ஓட்டம் சீராக இல்லை என தெரிவித்தனர். இதன் காரணமாக அவரது வலது காலில் உள்ள 3 விரல்களை அகற்ற வேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்கள்.
மருத்துவர்களின் ஆலோசனையை தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினர் அவரது கால் விரலை அகற்ற ஒப்புதல் தெரிவித்தனர். இதனை அடுத்து கடந்த 2022 ஜூன் மாதம் 20 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு விஜயகாந்தின் காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்தது.
அதில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்." என்று குறிப்பிட்டு இருந்தது.
கால் விரல்கள் அகற்றப்பட்ட செய்தி அறிந்து விஜயகாந்த் உடல்நலம் பெற அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் முக ஸ்டாலினும் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், "எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications