சென்னையில் சுங்கச்சாவடிகளில் இலவசம்.. போலீஸ் போல் கெத்து.. குடிபோதை அண்ணனால் மொத்தமாக காலி
சென்னை: இன்றைக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க நூதனமான வேலைகளை சிலர் கடைபிடிக்கிறார்கள்.பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் படங்களை ஒட்டிக் கொள்கிறார்கள். அரசியல் கட்சி தலைவர்களின் கார்களை போல் மாற்றிக் கொள்கிறார்கள்.. அப்படி செய்தால் கட்டணம் வாங்குவதில்லை என்று நம்புகிறார்கள். அதேபோல் அரசு அதிகாரிகள் என்று பொய் சொல்லி தப்பிக்கவும் சிலர் பார்க்கிறார்கள்.. அப்படி சுங்கச்சாவடியில் பணம் கட்டாமல் இருக்க போலீஸ் போல் நடித்த டிரைவர், அண்ணனின் குடிபோதையால் சிக்கினார்.
சென்னை எண்ணூர் காவல் நிலைய போலீசார் இரவில் ரோந்து சென்று சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் ஏட்டு ரீகன் ஜோஸ் மற்றும் காவலர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள், அப்போது எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் காரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தனர். அங்கிருந்த எர்ணாவூர் நேதாஜி நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம், "காரில் ஏன் மது அருந்துகிறீர்கள்?" என போலீசார் கண்டித்துள்ளனர்.

காவலர்கள் விசாரணை
அதற்கு மதுபோதையில் இருந்த தினேஷ், "எனது தம்பி ரவிக்குமார் (வயது 28) போலீஸ்காரர்தான். அவர், மணலி போக்குவரத்து பிரிவில் பணியாற்றுவதாக" கூறி அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார், அவர் காண்பித்த அடையாள அட்டையை பரிசோதித்தபோது, அது போலியானது என்பதும், அவர்கள் வைத்திருந்த காரின் பதிவு எண்ணும் போலி என்பதும் போலீசுக்கு தெரியவந்தது.
காவல் நிலையத்தில் விசாரணை
இதையடுத்து தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை எண்ணூர் காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்தனர். தினேஷின் தம்பி ரவிக்குமாரையும் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் ரவிக்குமார் டிரைவர் வேலை பார்த்து வருவது தெரிந்தது. ஆனால் அவர், தான் போலீசாக வேலை பார்த்து வருவதாக கூறி எண்ணூர் பகுதியில் பந்தாவாக சுற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் காரை நிதி நிறுவனத்தில் வாங்கி உள்ளார். அதற்கு பணம் கட்டாமல் இருந்தாராம்.
சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை
மேலும் நிதி நிறுவனத்திடம் இருந்து தப்பிக்க கார் பதிவு எண்ணை மாற்றி சுற்றி வந்துள்ளார். சுங்கச்சாவடியில் போலீஸ் என்று கூறி பணம் கட்டாமல் சென்று வந்தாராம். போலீஸ் என்று கூறி பந்தாவாக சுற்றவும், காருக்கு சுங்க கட்டணம் கட்டவேண்டியது இல்லை என்பதால் 'இன்ஸ்டாகிராமில்' இருந்து போலீஸ் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து அதுபோல் போலியாக போலீஸ் என்று அடையாள அட்டையை தயார் செய்து வைத்திருக்கிறாராம் ரவிக்குமார் .
சிக்கியது எப்படி
ஆனால் ரவிக்குமாரின் அண்ணன் தினேஷ் போதையில் இருக்கும் போது, தம்பியின் அடையாள அட்டையை போலீசிடமே கெத்துக்காக காட்டியதால், சிக்கி கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவிக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 3 போலியான அடையாள அட்டைகள் மற்றும் போலி பதிவு எண் கொண்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications