அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..!
சென்னை: முதன்முறையாக 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் ஆட்சிக்காலம் காங்கிரஸ் ஆட்சியை விட எந்தளவு வேறுபட்டிருந்தது என்பதை மிகத் தெளிவாக அறிந்துகொள்வோம்.
அண்ணாவை காங்கிரசார் எதிரியைப் போல் தான் பார்த்தார்கள். திமுக வளர்ந்து வருவதைக் கண்டு வெளிப்படையாகக் கிண்டல் செய்தனர். திமுகவின் கொள்கை தேசிய கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிர் திசையிலிருந்தது. ஆனால், புதிய அரசியல் நாகரிகத்தைத் தமிழக அரசியலில் செயல்படுத்திக் காட்டினார் அண்ணா. தமிழ்நாட்டில் நடைபெற்ற 4ஆவது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். வெற்றி பெற்றதும் அதுவரை எதிரும் புதிருமாக இருந்த பெரியாரைச் சந்தித்து ஆட்சியை அவருக்கு அர்ப்பணித்தார். அதை உடன்பிறப்புகள் பலரும் சொல்வார்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை
அதைவிட வேறு சில முக்கிய மாற்றத்தை அண்ணா செய்து காட்டினார். தனக்கு முன்னதாக பதவியிலிருந்த பக்தவத்சலத்தை நேரில் சென்று வாழ்த்து பெற்றார். டாக்டர் லட்சுமணசாமி முதலியாரைச் சந்தித்தார். கூட்டணிக் கட்சித் தலைவர் ராஜாஜியை இல்லம் தேடிச் சென்று பார்த்தார். அதற்கு மேலாக காமராஜையும் சந்திக்க விரும்பினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவரான காமராஜர் டெல்லியில் இருந்ததால் திட்டம் தள்ளிப் போனது. அவர் சென்னை திரும்பியதும் போய் பார்த்தார். கலந்துரையாடினார், அப்போதுதான் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு" என்று வாசகத்தைச் சொன்னார் அண்ணா.
வழக்கமாகச் சட்டப்பேரவையில் துணைத் தலைவர் பதவி என்பது எதிர்க்கட்சியைச் சார்ந்தவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மரபு. மக்களாட்சித் தத்துவத்தின்படி அதுவே சரி. திமுக எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது காங்கிரஸ் அந்த மரியாதையை அளிக்க முன்வரவில்லை. அண்ணா கேட்டும் மசியவில்லை ஆளும் கட்சி. அவர் 67இல் ஆட்சி மாறியது. நாற்காலி அண்ணா கைக்கு வந்தது. பழைய வஞ்சத்தை வெளிக்காட்டவில்லை அவர். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு' இல்லையா? அண்ணா துணை துணைத் தலைவர் பதவியைக் காங்கிரசுக்கு வழங்க முன்வந்தார். அதை அக்கட்சி ஏற்க மறுத்தது.
அண்ணா ஆட்சிக் காலத்தில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. கழகம் அத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டுக்கொடுக்கத் தயார் என அறிவித்தார் அண்ணா. காமராஜர் மனம் அதற்கு உடன்படவில்லை. காங்கிரஸ்காரர்கள் 'பிச்சை போடுகிறார்களா?' எனச் சுயமரியாதை பேசினர். திமுக போட்டியிட்டது. இடைத்தேர்தலில் பொதுத் தேர்தலில் பெற்ற வாக்கைவிட 25 ஆயிரம் வாக்குகளைக் கூடுதலாக அள்ளியது.
திமுக 1967 தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தின் உள்துறை கணித்துச் சொன்னது. ஆகவே இரவோடு இரவாக திமுக மீது போடப்பட்ட வழக்குகள் அடங்கிய அரசாங்க கோப்புகளைத் தீயிட்டுக் கொளுத்த உத்தரவு பிறப்பித்தார் பக்தவத்சலம். நினைத்த மாதிரியே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரைத் தவிர மீதமுள்ள அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். அதிகாரம் கைக்கு வந்த பின் பக்தவத்சலத்தின் மீது நடவடிக்கை வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரினர். பேரவையில் நடந்த விவாதமே போதும். வேறு நடவடிக்கை தேவையில்லை என நேசக் கரம் நீட்டியவர் அண்ணா.
இவர்தான் அண்ணா
1962 தேர்தலில் அண்ணா காஞ்சியில் தோற்றார். காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியார் வென்றார். அவரது வெற்றியைப் பெரிதாகக் காங்கிரசுக்குத் தெரியவில்லை. அண்ணாவின் தோல்வியில் மகிழ்ந்தனர் காங்கிரசார். ஆகவே, நடேச முதலியாருக்கு மாநிலம் முழுவதும் பாராட்டு விழாக்கள் களைக்கட்டின. தமிழகம் வந்த நேருவிடம், "அண்ணாவைத் தோற்கடித்தவர் இவர்தான்" என்று மேடையேற்றி அறிமுகம் செய்துவைத்தனர். அதே 67இல் காமராஜரைத் தோற்கடித்த சீனிவாசனை அழைத்து அண்ணா மேடை போட்டுப் பாராட்டவில்லை.
'மறப்போம் மன்னிப்போம்' என்றார். அவர் நினைத்திருந்தால் இந்தச் சிறுவன் தான் பெருந்தலைவரைத் தோற்கடித்தார் என உச்சி முகர்ந்திருக்க முடியும். ஆயினும் செய்யவில்லை.
கோயமுத்தூரில் (08.02.68) நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தில் மத்திய துணை அமைச்சர் ராமசாமி மீது கல்வீச்சு நடந்தது. அந்தச் செயலை அண்ணா கண்டித்தார். வருத்தம் தெரிவித்தார். 1968 ஆகஸ்ட் முதல் நாள் மவுண்ட் ரோட்டில் இருந்த அண்ணா சிலை மீது செருப்பு வீச்சு நடந்தது. காங்கிரசார் செய்ததாகப் புகார் எழுந்தது. தேனியில் திமுக கூட்டத்தில் கல்லெறிந்த காங்கிரசார் கைது செய்யப்பட்டு, அவர்களை கை விலங்கிட்டு காவல்துறை வீதியில் அழைத்துச் சென்றது. அதனை அண்ணா ரசிக்கவில்லை. சட்டசபையில் கைவிலங்கு இட்டு அழைத்துச் சென்றமைக்காக வருத்தம் தெரிவித்தார். இரண்டு காவல்துறை அதிகாரிகளை சஸ்பென்ட் செய்தார். கைவிலங்கிட்ட கான்ஸ்டபிளுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது.
அண்ணா ஆட்சியில் மகாமகம்
திமுக 50 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது ராஜாஜி மண்டபத்தின் அருகே ஒதுக்கப்பட்ட அலுவலகம் இடப்பற்றாக்குறையால் திண்டாடியது. கேட்டும் ஆட்சியாளர்கள் வேறு இடம் தரவில்லை. அதே 67இல் காங் இடம் 51 ஆக சுருங்கியது. ஆயினும் பழைய பெரிய அலுவலகத்தையே காங்கிரஸ் பயன்படுத்த அனுமதித்தார் அண்ணா.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது, அவர்களின் இடவசதியை அதிகரிப்பதற்கான கட்டுமான வசதி செலவை அரசே ஏற்பதுதான் நடைமுறை. பக்தவத்சலம், ஜோதி அம்மாள் ஆகியோரின் வீட்டு விஸ்தரிப்பு செலவை திமுக அரசே ஏற்றது. அதே தனது அரசு பணத்தை தன் சொந்த கட்சி அமைச்சர்களின் வசதிக்குப் பயன்படுத்துவதை அவர் மறுத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பாதுகாப்பு கெட்டுவிடும் எனப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் திமுகவின் முதல் ஆட்சியில்தான் 15 லட்சம் மக்கள் கலந்துகொண்ட கும்பகோணம் மகாமகம் சிறப்பாக நடந்தது. 5 லட்சம் செலவில் அதற்காக புது சாலைகள் போடப்பட்டன. நகர சபைக்கு 2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அண்ணா ஆண்டது வெறும் 1 வருடம் 11 மாதங்கள்தான். இந்தக் குறுகிய காலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு அவர் தமிழ்நாட்டில் இறுதியுரை எழுதியிருந்தார்.
- எழுதியவர் கடற்கரய்












Click it and Unblock the Notifications