"இதுவரை அரசு வேலை தராமல் இழுத்தடிக்கிறார்கள்!" கொரோனா சமயத்தில் உயிரிழந்த மருத்துவரின் மனைவி வேதனை
சென்னை: கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் இரண்டு ஆண்டுகளாக அரசு வேலையும் நிவாரணமும் தரப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்க மறுப்பதாகத் தெரிவித்துள்ள சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் அரசு மருத்துவர் விவேகானந்தன் என்பவர் பணியாற்றிய நிலையில், அப்போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், இதுவரை அவரது மனைவிக்கு அரசு வேலை தரப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா மற்றும் அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
உயிரிழந்த அரசு மருத்துவர்
டாக்டர் எஸ் பெருமாள் பிள்ளை செய்தியாளர்களிடம் பேசுகையில், "நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றும் போது மருத்துவர் விவேகானந்தர் உயிரிழந்தார். அவரது மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை தரப்பட வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி உயிரிழந்தோருக்கு திமுக அரசு இதுவரை எந்தவொரு நிவாரண தொகையையும் தரவில்லை. கடந்த 2019ல் மருத்துவர்கள் போராட்டத்தின் போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்கள் ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் எனப் போராட்ட களத்தில் நேரில் வந்து உறுதி அளித்தார். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
குறைவான ஊதியம்
மற்ற மாநிலங்களில் இருக்கும் மருத்துவர்களை விடத் தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் மிகச் சிறப்பான மருத்துவர்கள் ஆவார்கள். மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவர்களை விடத் தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியம்தான் தரப்படுகிறது. தமிழக மருத்துவர்களுக்குத் தொடர்ந்த அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தின் போது பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தரின் மனைவி அரசு வலை கேட்டு குழந்தைகளுடன் சுகாதாரத் துறை அமைச்சரை மூன்று முறை நேரில் சந்தித்தார். மேலும் இது தொடர்பான வழக்கில் மருத்துவர் விவேகானந்தர் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசு உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை.
அங்கீகரிக்க மறுக்கும் மாநிலம்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனா உச்சத்தில் இருந்தபோது அசாதாரண சூழ்நிலை நிலவியது.. அந்த நேரத்தில் அரசுக்கு உறுதுணையாகவும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய மக்களைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களை முதலமைச்சர் நிச்சயமாக மறக்க மாட்டார் என்று நம்புகிறேன். இருப்பினும் கொரோனாவுக்கு பிறகும் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்க மறுக்கும் ஒரே மாநிலமாகத் தமிழகம் உள்ளது என்பதுதான் வேதனையாக உள்ளது.
நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் அரசு மருத்துவர்களுக்குத் தரப்பட வேண்டுமெனத் தேசிய மருத்துவ ஆணையும் அறிவுறுத்திய பிறகும் அதைத் தமிழக அரசு செயல்படுத்த மறுக்கிறது. வரும் மார்ச் 18ஆம் தேதி தமிழக முதல்வருக்கும், தேசிய ஆணையத்திற்கும் இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பவுள்ளோம் மார்ச் 19ஆம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி இயக்க அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார்.
மருத்துவரின் மனைவி கோரிக்கை
தொடர்ந்து விவேகானந்தன் மனைவி திவ்யா பேசுகையில், "என்னுடைய கணவர் கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த போது மரணமடைந்தார். என்னுடைய கணவர் மரணமடைந்த பிறகு அரசு துணை நிற்கும் என்று நான் நம்பினேன். இதுவரை திமுக அரசு எந்த நிவாரண நிதியும் எங்களுடைய குடும்பத்திற்குத் தரவில்லை. எனக்கு அரசு வேலை தருவார்கள் என எதிர்பார்த்தேன்.. ஆனால் அரசு வேலையும் எனக்கு இதுவரை தரவில்லை.
அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினோம்.. அப்போது அரசு வேலையும் நிவாரணமும் தருகிறோம் என்று உறுதியளித்தார்கள். ஆனால் இதுவரை எதுவும் எங்களுக்குத் தரப்படவில்லை. இதன் பிறகாவது அரசு எங்களுக்கு அரசு வேலையும் மற்றும் நிவாரண நிதியும் வழங்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications