காஞ்சிபுரத்தில் கணவனின் தவறு.. தாலியை அடகு வைத்து வாகனத்தை ஏலத்தில் மீட்ட மனைவி.. கண்ணீருடன் நன்றி
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ், மதுவிலக்கு குற்ற சம்பவ வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. அப்போது மது விலக்கு வழக்கில் கணவர் பறிகொடுத்த பைக்கை தாலியை அடகு வைத்து வாங்கியுள்ளார் மனைவி.. ஏலம் கேட்க வந்தவர்களிடம் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு தங்களின் நிலையை விளக்கி சொல்லி ஏலம் கேட்காமல் செய்ததால், தங்களது பைக்கை அவர் மீட்டார்.
குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை போலீசார் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்வார்கள்.. அதேபோல் மதுபானங்களை கடத்தி வருவதற்கு பயன்படுத்தும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்வார்கள்.. அப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை அபராதம் கட்டி அவர்கள் மீட்க வேண்டும்.. அப்படி மீட்கப்படாத வாகனங்களை போலீசார் ஏலம் விடுவது வழக்கம். குறிப்பாக சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால் சிக்கும் வாகனங்களை போலீசார் ஏலம் விடுவார்கள்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ், மதுவிலக்கு குற்ற சம்பவ வழக்குகளில் சிக்கிய 11 இரு சக்கர வாகனங்கள், பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் நிலைய அலுவலக வளாகத்தில் நேற்று பொதுமக்கள் மத்தியில் பொது ஏலம் விடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலா், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் பொது ஏலம் நடந்தது. அப்போது நடைபெற்ற ஏலத்தில் இருசக்கர வாகனங்களை வாங்கி செல்ல ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அங்கு பறிமுதல் செய்யப்பட்ட 11 இருசக்கர வாகனங்களும் வரியுடன் சோ்ந்து ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.
அங்கு கணவர் செய்த தவறால் பைக் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு நேற்று ஏலத்தில் விடப்படுவதை அறிந்த மனைவி கணவருடன் ஏலத்தில் கலந்து கொண்டார். அவர் ஏலம் எடுக்க வந்த நபர்களிடம் தனது தாலியை அடகு வைத்த பணத்தில் ஏலத்துக்கு வந்து பைக்கை வாங்குவதாக கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டார். மேலும் தங்களின் நிலையை விளக்கி சொல்லி ஏலம் கேட்க வேண்டாம் என்றார். அவரது கோரிக்கையை ஏற்று யாரும் ஏலம் கேட்கவில்லை..
தொடர்ந்து போலீசாரின் அனுமதியுடன் ரூ.27 ஆயிரத்து 500-க்கு கேட்கப்பட்ட ஏலத்தொகையுடன் கூடுதலாக ரூ.500 செலுத்தி பைக்கை பெற்று கொண்டார். மேலும் இனி தனது கணவர் இதுபோன்ற தவறு செய்ய மாட்டார் என்ற உத்தரவாதம் அளித்தவர், கண்ணீர் மல்க பைக்குடன் விடைபெற்றுச் சென்றார்.












Click it and Unblock the Notifications