'அரசு கடுக்காய் கொடுக்காமல் இருக்கும்’ எம்எல்ஏ கேள்விக்கு தங்கம் தென்னரசின் பதில்..அவையில் சிரிப்பலை
சென்னை: திமுக எம்.எல்.ஏ உதய சூரியன் எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலும் தமிழ்நாடு சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதல்நாளில் கூட்டத்தின் முதல் நாளிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையால் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின.
இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான இரங்கல் குறிப்பை படித்தார். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

சட்ட சபையில் கலகலப்பு
இதையடுத்து இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர். பரபரப்பாக அவையின் அலுவல்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக எம்.எல்.ஏ உதய சூரியன் எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் தெங்கம் தன்னரசு அளித்த பதிலும் சட்ட சபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காய்
திமுக எம்.ல்.ஏ உதய சூரியன் எழுந்து கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். உறுப்பினர் உதய சூரியன் பேசியதாவது: - ஒரு பழமொழி சொல்வார்கள்.. காலையில் இஞ்சி.. நண்பகல் சுக்கு .. மாலையில் கடுக்காய் உண்பேல்.. காலை வீசி கோலை வீசி குலுங்கி நடப்பேல் என்று சொல்வார்கள். கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காய் நடப்பார்கள் என்று சொல்வார்கள். எங்கள் கல்வராயன் மலையிலும் சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கல்வராயன் மலையிலும் அதிகமாக கடுக்காய் விளைகிறது.

பதிலைக் கேட்டதும் சிரிப்பலை
சிறிய தரகர்களால் அந்த பழங்குடியின மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது. ஆகவே சாயம் தயாரிப்பதற்கும் மருத்துவ குணமும் கொண்டுள்ள கடுக்காய் தொழிற்சாலையை எங்கள் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தொகுதி கல்வராயன் மலையில் உருவாக்கி தருவதற்கு அமைச்சர் முன்வருவாரா என்று அறிய விரும்புகிறேன்" என்று கூறினார். எம்.எல்.ஏ உதய சூரியன் கேள்விக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காமல் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிலளித்தார். நகைச்சுவை உணர்வுடன் அமைச்சர் அளித்த பதிலைக் கேட்டதும் அவையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர்.

நேரத்தை வீணடிக்க வேண்டாம்
முன்னதாக கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி. உதயகுமார், பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தார். தனது பேச்சை துவங்கியதும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதனால் டென்ஷனான சபாநாயகர் அப்பாவு புகழ்பாடி நேரத்தை வீணடிக்க வேண்டாம், என்ன கேள்வியோ அதை கேளுங்க என அறிவுறுத்தினார். மேலும் நீங்க புகழ் புராணம் பாடும் நேரத்தில் மற்றவர்கள் இருவருக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பை தரலாம் என நேரத்தின் அவசியம் குறித்து விளக்கினார். இதனால், ஆர்வமாக பேசிய உதயகுமார் சற்று வாடிய முகத்துடன் நேரடியாக தனது கேள்விக்கு வந்தார்.


Click it and Unblock the Notifications
