ஆவின் கிரீன் பாலில் என்ன பிரச்சினை?... அமைச்சர் தந்த சில எச்சரிக்கைகள்.. அவசியம் படிங்க!
சென்னை: இனிமேல் ஆவின் கிரீன் மேஜிக் பால் கிடைக்குமா? கிடைக்காதா? இதுதான் தமிழ்நாட்டில் இன்று பொதுமக்கள் மத்தியில் நிலவும் முக்கியமான கேள்வி.
கிரீன் மேஜிக் பாலை உற்பத்தி செய்வதால் ஆவின் நிர்வாகத்திற்கு நஷ்டம் வருகிறது. ஆகவே அதை நிறுத்த முயற்சிகள் நடக்கின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஆனால், ஆவின் க்ரீன் பாலில் கொழுப்புச் சத்து கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல; ஆகவே மாற்றம் தேவை என்கிறது நிர்வாகம். எது உண்மை? பால் போலப் பொங்கும் இந்தப் பிரச்சினை பற்றி தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் என்ன சொல்கிறார்?
பல சந்தேகங்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்டோம்.
"அறிவியல் உலகம் மாற்றத்தை ஏற்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாத தத்துவம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆக, ஒரு நிறுவனமானது புதிய மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அது ஆரோக்கியமாக இயங்கும். அந்த அறிவியல் தரும் அறிவுரைப்படி சில மாற்றங்களை ஆவின் நிர்வாகம் எடுத்துள்ளது. உடனே அதை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.

முன்பு பாலின் தரத்தை அளவிட முறையான கருவிகள் இல்லாமல் பால் கொள்முதல் நடந்தது. பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா என்று சோதிக்க ஒரு கருவியைப் பயன்படுத்தி வந்தார்கள்.
ஆனால், இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பால் கொள்முதல் செய்ய முறையான கருவி வழங்கப்பட்டு உள்ளது. இது ஒரு மாபெரும் புரட்சி. பாலின் தரத்தை அளவிட்டு, அதன்படி விவசாயிகளின் பாலுக்கு விலை நிர்ணயம் செய்கிறோம்.
முன்பு ஒரு அம்மா, 26 ரூபாய்க்குப் பாலை ஆவின் நிர்வாகத்திற்கு வழங்கி வந்தார். அவர் பாலுக்கு என்ன விலையோ அதை விலையைப் பலரும் பெற்றுவந்தனர். ஆனால், இந்தக் கருவி வந்து பிறகு அதே பாலை 36 ரூபாய்க்கு விற்று வருகிறார். அவருக்கு அதிக லாபம் கிடைத்திருக்கிறது.

ஏனென்றால், அந்தப் பால் மற்றவர்களின் தரத்தைவிடக் கூடுதலாக உள்ளது. ஆகவே அவருக்கு எல்லோரையும் போல விலை நிர்ணயம் செய்யாமல் அதிகவிலைக்குக் கொள்முதல் செய்கிறோம்.
இது எவ்வளவு பெரிய மாற்றம். பாலின் தரத்தை உறுதி செய்வதுடன் ஒரு விவசாயி தரமான பாலை தரும்போது கூடுதல் லாபத்தையும் பெற வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். இந்த மாற்றம் தேவையானதா? தேவை இல்லாததா? வெறும் அரசியலுக்காகப் பேசுபவர்களை நான் கேட்கிறேன்.
ஆவின் தயாரிப்பில் கிரீன் மேஜிக் என்று ஒரு பால் பாக்கெட் விற்பனை செய்கிறோம். இது பல ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது. அது குறித்து சிலர் சர்ச்சையாகக் கருத்தைப் பரப்பி வருகின்றனர். இந்தக் குறிப்பிட்ட தயாரிப்பில் என்ன மாற்றம் தேவை என்பதற்கு ஒரு அறிவியல்பூர்வமான விளக்கத்தைத் தர விரும்புகிறேன்.

ஒன்றிய அரசாங்கத்தின் நிறுவமான fssai ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறது. இதுதான் உணவு தரத்தைப் பற்றிச் சரியான கொள்கைகளை வகுக்கும் நிறுவனம். அதன்படிதான் எல்லா நிறுவனங்களும் தங்களின் தயாரிப்பின் அளவை நிர்ணயம் செய்கிறார்கள்.
இந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள பாலின் தரத்தைச் சோதித்துவிட்டு, ஒரு அளவை நிர்ணயம் செய்துள்ளது. அதாவது 3.2% கொழுப்புச்சத்தும், 8.3% புரதம் உள்ளிட்ட மற்ற சத்துகள் இருக்கவேண்டும் என்று ஒரு அளவு இருக்கவேண்டும் நிர்ணயம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் பால்களின் தரத்தின் அளவு 3க்கும் 4க்கும் இடையில்தான் உள்ளது. ஆக, அதற்கு இடையிலான ஒரு அளவை நாம் நிர்ணயம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதன்படி 3.5 என்ற அளவை சராசரியாக நாம் நிர்ணயித்தால் கொள்முதல் செய்யும் பாலினை அப்படியே தரப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். ஆகவே அந்த முடிவை எடுக்கின்றோம். இதன் மூலம் எந்தக் கூட்டலோ, கழித்தலோ இல்லாமல் பால் அப்படியே தரம் குறைக்காமல் வழங்க ஆவின் நிர்வாகம் ஒரு முடிவை மேற்கொண்டது.
இதற்குத்தான் ஆவின் delite என்ற பெயரில் வாடிக்கையாளருக்கு வழங்கினோம். அப்படி என்றால் கிரீன் மேஜிக் பாலுக்கும் டிலைட் பாலுக்கும் என்ன வேறுபாடு என்று நீங்கள் கேட்கலாம்.
நாங்கள் ஆவின் நிறுவனம் மூலம் பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறோம். அதில் 3.5% கொழுப்பு இருக்கிறது என்று உதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள், அதில் நாங்கள் கூடுதலாக 1% கொழுப்பைச் சேர்த்து விற்பனை செய்வோம். அதுதான் ஆவின் கிரீன்.

ஆனால், இன்றைய மருத்துவ உலகம் என்ன அறிவுறுத்துகிறது என்றால், இந்தக் கூடுதல் கொழுப்புச்சத்து சேர்ப்பது என்பது தேவையற்றது என்கிறது. நாம் கொள்முதல் செய்து இயற்கையாக உள்ள கொழுப்புச் சத்தான 3.5% அப்படியே வாடிக்கையாளருக்குத் தருகிறோம். அது பாலில் உள்ள இயற்கையான சத்து. கூடுதலாக நாம் எதையும் சேர்க்காமல் விற்கிறோம். அதுதான் டிலைட். அதற்கு வாடிக்கையாளர் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதை டிலைட் பால் மூலம் மட்டுமே வழங்க முடியும். ஆனால், தரப்படுத்தப்பட்டு விற்கப்படும் எந்தப் பாலாக இருந்தாலும் அதில் செயற்கையாகக் கூடுதல் கொழுப்புச் சத்தை கட்டாயம் சேர்க்கவேண்டும். அப்படித்தான் கிரீன் பாலில் சேர்த்துத் தருகிறோம்.
இப்படிக் கொழுப்பைக் கூடுதலாகச் சேர்த்து விற்பதற்கும் சில எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இயற்கையான பாலில் ஆவின் கூடுதலாகச் செயற்கைக் கொழுப்பைச் சேர்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதையும் நாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. அவர்கள் சொல்வதைப் போல 4.5% கொழுப்புச் சத்து தேவையற்றது என்று மருத்துவ உலகமும் சொல்கிறது.

சிலருக்குக் கொழுப்புச் சத்து கூடுதலாகத் தேவை என்றால் 6% அளவுக்குக் கொழுப்புள்ள ஆரஞ்சு நிற பாலை ஆவின் ஏற்கெனவே விற்றுவருகிறது. அதைத் தேவையானவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை.
ஆக, நிறை கொழுப்புச் சத்துள்ள பால், குறைவான கொழுப்புச் சத்துள்ள பால், இறுதியாக எந்த மாற்றம் செய்யாமல் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பால் என மூன்று விதமாகப் பிரித்து விற்பனை செய்ய நாங்கள் முடிவு செய்கிறோம். இதைச் செய்ய ஆவின் நிர்வாகத்திற்கு உரிமை இல்லையா?" என எதிர்க்கேள்வியை முன்வைத்த அமைச்சரிடம், பலரும் க்ரீன் மேஜிக் பாலையே விரும்பி வாங்குகிறார்கள். அதை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்களே என்றோம்.
"அதற்காகத்தான் நான் முன்பே அறிவியல்பூர்வமான உதாரணங்களைச் சொன்னேன். இந்த க்ரீன் மேஜிக் பாலை வாங்கி வரும் வாடிக்கையாளர்கள் எத்தனைப் பேருக்கு, அந்தப் பாலில் 1% கொழுப்பு செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது என்ற செய்தி தெரியும் சொல்லுங்கள்?

ஒன்றிய உணவுக்கட்டுப்பாட்டு நிறுவனம் சில விதிமுறைகளை வகுக்கிறது. அதன்படி நாங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறோம். அப்படிச் செய்தால் மக்களின் உடல்நலத்திற்கு நல்லது என்பதற்காக அதைச் செய்கிறோம். ஆவின் அரசு நிறுவனம். லாப நோக்கத்திற்காக இயங்கும் நிறுவனம் அல்ல. மக்கள் நலன் சார்ந்து இயங்கும் நிறுவனம்.
அதனால்தான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் நாம் பாலை விற்பனை செய்து வருகிறோம். இந்தக் கொழுப்பைக் குறைப்பதால் அரசுக்கு லாபம் என்பது வேடிக்கை. மக்களின் ஆரோக்கியத்திற்குத்தான் அது நல்லது. ஆவின் இலாபத்தை விரும்பினால் விலையை அதிகம் வைத்து விற்கலாமே? நாங்கள் அதைச் செய்யவில்லையே?

அதனால்தான் முதல்வராகப் பதவியேற்ற உடன் 3 ரூபாய் விலையைக் குறைத்தார். அதேநேரத்தில் கொள்முதல் விலையைக் கூட்டினார். வேறு மாநிலங்களில் இதைப் போன்று யாராவது செய்திருக்கிறார்களா?" என்கிறார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.












Click it and Unblock the Notifications