வெளிய சொல்ல முடியல.. சீனியர்கள் கடும் அப்செட்.. டெல்லியில் கொட்டிய ‘டாப்’ லீடர்.. கியர் மாறுதா?
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. அண்ணாமலை மீதான சீனியர்களின் அதிருப்தி பற்றிய தகவல்கள், பாஜகவின் அமைப்பு ரீதியான டாப் புள்ளியின் மூலம் டெல்லியின் கவனத்திற்குச் சென்றிருப்பதாகவும், அதன் அடிப்படையில் தேசிய தலைமை சில அதிரடி முடிவுகளை எடுக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு சில எம்.பி சீட்களையாவது ஜெயித்து விட வேண்டும் என பாஜக தேசிய தலைமை உறுதியாக இருக்கிறது.
இந்த நினைப்பில் தான் அண்ணாமலை ஒரு தவுசண்ட் வாலா பட்டாசைத் தூக்கிப்போட்டு பதறவைத்தார். இது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியைக் கிளப்பியுள்ளதாம்.

அப்படி ஒரு பதவியே தேவையில்ல
தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உரிய ஸ்ட்ராட்டஜிகள் என்னிடம் இருக்கின்றன. ஒருவேளை தேசியத் தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி, ஒரு தொண்டனாகவே இருந்துவிட்டுப் போய்விடுவேன். அதிமுக நம்மைவிட்டு விலக வேண்டும் என்று தொடர்ந்து செயலாற்றிவரும் நிலையில், நாம் ஏன் அவர்களுக்கு அடிபணிந்து போக வேண்டும் என அனலாக வெடித்தார் அண்ணாமலை.

சீனியர்கள் அப்செட்
அண்ணாமலையின் இந்தப் பேச்சு அதிமுக மட்டுமல்லாது பாஜகவுக்குள்ளும் பெரிய புயலைக் கிளப்பியது. அண்ணாமலையின் இந்தக் கருத்தை விமர்சித்து பாஜக சீனியர்களே வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அண்ணாமலையின் கருத்தை ஏற்காத வகையில் பேசினர். பாஜகவின் தேசிய தலைமை இந்த முறை தமிழ்நாட்டிலும் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறது. அதற்காக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று கருதுகிறது. இப்படியான சூழலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கக்கூடாது என அண்ணாமலை வீம்பாகப் பேசியிருப்பதால் சீனியர்கள் கடுமையாக அப்செட் ஆகியுள்ளனராம்.

டாப் கியரில் புகார்கள்
அண்ணாமலையின் கூட்டணி தொடர்பான கருத்து பாஜக மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவர்களின் கருத்துகளை, பாஜக மாநில அமைப்பு ரீதியான பதவியில் இருக்கும் டாப் பிரமுகர், டெல்லிக்கு கொண்டு சேர்த்திருக்கிறாராம். குறிப்பாக, அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என அறிவுறுத்திய நிலையிலும், அண்ணாமலை இப்படிப் பேசியிருப்பதாக டெல்லிக்கு தகவலை பாஸ் செய்திருக்கிறாராம். இதனால், பாஜக தேசிய தலைமை அண்ணாமலையை அழைத்து விசாரித்திருக்கிறது. ஏற்கனவே கர்நாடக மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அண்ணாமலை, மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

420 என விமர்சனம்
அண்ணாமலை மீது சீனியர்கள் அப்செட்டாக இருப்பது பற்றி ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "அண்ணாமலை பாஜக மாநில தலைவராக வந்தது முதலே தனக்கென தனி வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதில் தனக்கு தோதான ஆட்களை வைத்துக்கொண்டு பலவிதமான சர்ச்சைக்குரிய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு கட்சியின் மாநிலத் தலைவரை 420 எனச் சொல்லிவிட்டு ஒருவர் வெளியே வருகிறார் என்றால் அவரை எந்த அளவுக்கு அண்ணாமலையின் செயல்பாடுகள் நோகடித்திருக்கும் என்று பார்க்கவேண்டும். இதுவரை இவ்வளவு கேவலமாக விமர்சித்துவிட்டு கட்சியில் இருந்து விலகியவரை பார்த்ததில்லை.

அடுத்து அந்த இடத்திற்கு
அண்ணாமலை, பாஜகவின் மூத்த தலைவர்களை மதிக்காமல் அவர்களைப் பகைத்துக்கொண்டு, தனக்கென தனியாக வார் ரூம் வைத்துக்கொண்டு, தான் மட்டுமே எல்லா விஷயங்களையும் பேசவேண்டும் என்ற நிலை இருப்பது, ஆடியோ வீடியோக்கள் வெளியாகி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவது போன்ற விஷயங்களால் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்ற சீனியர்கள் எல்லாம் ரொம்பவே கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால், கட்சி கட்டுப்பாடு கருதி வெளியில் பேச முடியாத சூழலில் இருக்கிறார்கள். அடுத்து தலைவர் பதவியைக் கைப்பற்ற அண்ணாமலைக்கு எதிராக சிலர் வேலை செய்தும் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலைக்கு எல்லா மட்டத்திலும் எதிர்ப்புகள் இருக்கின்றன." என்கிறார்.












Click it and Unblock the Notifications