என்னது அந்த ஜாதியா? ஆஹா பாஜகவிற்கு வசமாக சிக்கிய சம்பவம்! ராஜகண்ணப்பன் சர்ச்சை!சாமியும் வரப்போறாரா?
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வைக்கப்பட்டு இருக்கும் ஜாதி ரீதியான புகார் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் குறிப்பிட்ட ஒரு ஜாதி சம்பந்தப்பட்டு இருப்பதால் பாஜக இந்த விஷயத்தை வரும் நாட்களில் பெரிதுபடுத்தும் வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒன்றிய நிர்வாகி ஒருவரை ஜாதி ரீதியாக திட்டியதாக எழுந்த புகாரை அடுத்து ராஜகண்ணப்பன் இப்படி மாற்றப்பட்டு இருக்கிறார். இதில் குறிப்பிட்ட சில ஜாதிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் வரும் நாட்களில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கும் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தன்னை எஸ்சி என்று கூறி பல முறை திட்டியதாகவும், வீட்டிற்கு சாப்பிட வாங்க என்று கூறி வாசலில் நிற்க வைத்து மோசமாக திட்டி அவமானப்படுத்தியதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்தே ராஜகண்ணப்பன் தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

வழக்கு
தன்னை மட்டும் இன்றி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அன்பு கண்ணன் என்பவரையும் அமைச்சர் திட்டியதாக ராஜேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். இதில் அன்புக்கண்ணன் எஸ்சி பிரிவை சேர்ந்தவர் கிடையாது. இவர் மறவர் பிரிவை சேர்ந்தவர். ராஜேந்திரன் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அன்பு கண்ணன் சாட்சியாக மாறும்பட்சத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய முடியும். ஏனென்றால் இந்த சட்டப்படி பட்டியலின பிரிவை அல்லாத ஒருவர் சாட்சியாக இருக்க வேண்டும். ஆனால் அன்பு கண்ணன் இதுவரை அமைச்சருக்கு எதிராக புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவகாரம் போரட்டம்
ஆனால் இந்த விவகாரத்தை தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள் வரும் நாட்களில் பெரிதாக்க போவதாக தகவல்கள் வருகின்றன. நேற்று முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள். வரும் நாட்களில் அமைச்சரை மொத்தமாக பதவியில் இருந்து நீக்கும்படி கோரிக்கை விடுத்து தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் ராஜேந்திரன் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் உட்பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக
இந்த விவகாரத்தை பாஜகவும் கையில் எடுக்க போவதாக தகவல்கள் வருகிறது. ஏற்கனவே தேவேந்திர குல வேளாளர் பிரிவினர் இடையே பாஜகவிற்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்கிறது. தேவேந்திர குலவேளாளர் என்ற பொதுப் பெயரை வழங்கிடும் மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதோடு பிரதமர் மோடியும் கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் இதை பற்றி வெளிப்படையாக பேசினார். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தார்.

என்ன பிரிவுகள்
தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார், பண்ணாடி, குடும்பர், கடையர்,காலாடி ஆகிய பிரிவுகள் பற்றி பிரதமர் மோடி இப்படி பேசியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. ஆனால் தேர்தலில் இது பாஜகவிற்கு இப்படியே வாக்காக மாறவில்லை. இந்த நிலையில் தற்போதைய விவகாரத்தில் தேவேந்திர குல வேளாளர் அமைப்புகள் கோபத்தில் இருப்பதை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி பாஜக அண்ணாமலை வைத்துள்ள விமர்சனத்தில், நேற்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் BDO ஆக பணியாற்றி வரும் ராஜேந்திரன் அவர்கள் தன்னை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சமுதாய ரீதியாக திட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்

அண்ணாமலை விமர்சனம்
இன்று ராஜ கண்ணப்பன் அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி அரசு அறிவித்துள்ளது! சாமானிய மக்களுக்கும் இதே சட்டம் பொருந்துமா? வழக்குப் பதிவு செய்யாமல் துறை மாற்றுதல் எந்த மாதிரியான முடிவு? அமைச்சர் மேல் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, உண்மையான நியாயம் கிடைக்க வேண்டும் என்று இந்த அரசு விரும்பினால் ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

மருத்துவர் கிருஷ்ணசாமி
அதேபோல் இந்த விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியும் விரைவில் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் அமைப்புகள் நடத்த இருக்கும் போராட்டங்களில் பாஜக தலைவர்கள், புதிய தமிழகம் தலைவர்கள் கலந்து கொண்டு போராட்டங்களை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்கும் வகையில் ஆளும் திமுக தரப்பு முக்கிய அறிவிப்புகளை அல்லது நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications