டோட்டல் குளோஸ்! 2004 ரிசல்ட்டை ரீ-க்ரியேட் செய்து காட்ட ரெடியாகும் ஸ்டாலின்! தருமபுரியிலும் திமுக!
சென்னை: 2004 லோக்சபா தேர்தல் முடிவுகளை 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-க்ரியேட் செய்து காட்டி இருக்கிறது திமுக. தமிழ்நாட்டில் தருமபுரி தொகுதியில் மட்டும் இழுபறி நிலவி வந்த நிலையில், அதிலும் முன்னிலை பெற்று 40-க்கு 40 என்ற முழு வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது இந்தியா கூட்டணி.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர், 2004 மக்களவைத் தேர்தல் வரலாற்றை இந்தியா கூட்டணி திருப்பிக் காட்டும் எனக் கூறி வந்தனர். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் தலைவர்களின் இந்தக் கூற்று பலிக்கா விட்டாலும், தமிழ்நாட்டில் 2004 லோக்சபா தேர்தலில் பெற்ற முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி.

14து நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்தல் தான் தொகுதி மறுசீரமைப்புக்கு முன் நடந்த கடைசி தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 இடங்களை வென்றது.
திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக இணைந்தன. 1982க்கு பிறகு 22 வருடங்கள் கழித்து திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணியில் இணைந்தது.
தேர்தல் முடிவில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களையும் அலேக்காக அள்ளியது திமுக கூட்டணி. திமுக 16 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாமக 6 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், சிபிஐஎம் 2 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும் என திமுக கூட்டணி நின்ற 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
மறுபுறம், அதிமுக 33 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின. இந்த தேர்தல் தான் கடைசியாக தமிழகத்தில் ஒரு கூட்டணி மொத்தமாக ஒயிட் வாஷ் செய்த தேர்தல். அதன் பிறகு, 2009, 2014, 2019 ஆம் ஆண்டுகளில் திமுகவோ, அதிமுகவோ 40க்கு 40 சீட்களை கைப்பற்றவில்லை. 1991 தான் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி க்ளீன் ஸ்வீப் அடித்திருந்தது.
2009 தேர்தலில் திமுக கூட்டணி 28 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் வென்றது. 2014 தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. திமுக 1 இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜகவும், பாமகவும் தலா ஒரு இடங்களில் வென்றன.
2019 தேர்தலில் திமுக கூட்டணி, தேனி தவிர 39 இடங்களில் வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் 40க்கு 40 சீட்டுகளை நோக்கி முன்னேறி வருகிறது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தருமபுரி மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகளில் மட்டுமே பாமக, அதிமுக வெல்லும் சூழல் இருந்தது. தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, திமுக வேட்பாளர் மணி இடையே குறைந்த வாக்கு வித்தியாசமே நிலவி வருகிறது. இவர்கள் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இந்நிலையில், சௌமியா அன்புமணியை முந்தியுள்ளார் திமுக வேட்பாளர் ஆ.மணி.
அதேபோல, விருதுநகர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே குறைந்த வித்தியாசமே நிலவி வந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். தற்போது மாணிக்கம் தாகூர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தருமபுரி தொகுதியிலும் திமுக கூட்டணி வெல்ல இருக்கும் நிலையில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 2004 லோக்சபா தேர்தல் முடிவை ரீ-கிரீயேட் செய்து காட்டப் போகிறது. அன்றைக்கு கருணாநிதி 40க்கு 40 என சாதித்துக் காட்டிய நிலையில், இன்றைக்கு அதனை ரீ-க்ரியேட் செய்து காட்ட உள்ளார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications