ஜெயிச்சதோட சரி.. ஆளையே காணோம்.. ஆனால் 6 சீட் வேணுமாம்.. நமட்டு சிரிப்பு சிரிக்கும் அறிவாலயம்!
பாரிவேந்தர் மீண்டும் திமுக கூட்டணியிலேயே நீடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: திமுகவுக்கு இந்திய ஜனநாயக கட்சி செக் வைத்துள்ளது.. 6 சீட் வேண்டும்.. அல்லது தனித்து போட்டி என்று சொல்லியுள்ளதாம். ஆனால் 1 சீட்டு மிஞ்சிப் போனால் 2 சீட்டுக்கு மேல் கண்டிப்பாக திமுக தராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த எம்பி தேர்தலின்போது, கமலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அறிவாலயம் சென்று கூட்டணி வைத்தவர் பாரிவேந்தர்.. பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆனார் பாரிவேந்தர்... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவானது. அபார வெற்றியும் பெற்றார். அத்தோடு சரி ஆளையே காணோம்.
கூட்டணி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் இவர் பெரும்பாலும் காணப்படவில்லை.. வரவே இல்லை. திருமாவளவன், வைகோ போன்றோர்களே திமுக நடத்திய கூட்டங்களில் அதிகமாக இடம் பெற்று வந்தனரே தவிர, பாரிவேந்தரை அவ்வளவாக காணோம். பதவியைப் பெற்றதோடு காணாமல் போய் விட்டார்.

பாரிவேந்தர்
இந்நிலையில் கடந்த 10 மாதத்திற்குள் 2 சம்பவங்கள் நடந்தன.. ஒன்று, முதல்வரை பாரிவேந்தர் சந்தித்து பேசியிருந்தது.. பெரம்பலூர் தொகுதியின் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து 6 கோரிக்கைகளை வைப்பதற்காக முதல்வரை சந்தித்தேன் என்று பாரிவேந்தர் அப்போது காரணம் சொன்னாலும், பல்வேறு யூகங்களை கிளப்பியது..

தொகுதி பிரச்சனை
தொகுதி பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில்தானே பேச வேண்டும்.. இப்படித்தானே பல எம்பிக்களும் பேசுவார்கள்.. ஆனால் இவர் மட்டும் திடீரென முதல்வரை சந்தித்து மனு அளித்திருப்பதன் உண்மை காரணம் என்னவென்று தெரியாததால்தான் அதில் சந்தேகமும் எழுந்தது. ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் பாரிவேந்தரின் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமோ என்ற சந்தேகமும் கிளம்பியது.

எல்.முருகன்
பிறகு, கடந்த நவம்பர் மாதம் ஒருநாள் திடீரென பாஜக தலைவரையும் பாரிவேந்தர் சந்தித்தார்.. வளசரவாக்கம் வீட்டில் இந்த சந்திப்பு நடந்ததுமே திமுக தரப்பு டென்ஷன் ஆகிவிட்டது.. அப்படியென்றால் மறுபடியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறாரா என்ற இன்னொரு சந்தேகமும் கிளம்பியது.. இதற்கு காரணம், பல்வேறு முக்கிய புள்ளிகளை தங்கள் கட்சி பக்கம் முருகன் இழுத்து வந்து கொண்டிருப்பதால், இது யூகமும் உண்மையோ என்று கருதப்பட்டது.

பேச்சுவார்த்தைகள்
இந்நிலையில்தான் தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளன.. கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக கூட்டணியிடம் கேட்டுள்ளதாகவும், அவ்வாறு ஒதுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்... ஆனால் திமுக தரப்பில் இதைக் கேட்டு கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையவில்லையாம். பாரிவேந்தரின் செல்வாக்கு அவருக்கே நன்றாகத் தெரியும் என்பதால் திமுகவினர் நமட்டுச் சிரிப்புடன் உள்ளனராம்.

வைகோ, திருமா
வைகோ, திருமா போன்றோர்களே வாய்விட்டு தங்கள் கட்சி பிரச்சனைகளை சொல்லியும், அதற்கு சாதகமான பதிலை திமுக தலைமை இன்னமும் தெரிவிக்கவில்லை.. இதற்கு நடுவில் பாரிவேந்தருக்கு இத்தனை சீட்டுகளை திமுக தருமா என்பதும் கேள்விக்குறியே. மிஞ்சிப் போனால் 2 சீட் தரலாம். அது கூட உதயசூரியன் சின்னத்தில்தான் கொடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. தனித்து போட்டி என்றும் பாரிவேந்தர் சொல்லி உள்ளார்.. அதிமுக, திமுக, பாஜக என கூட்டணி அமைத்து போட்டியிட்டவர், தனித்து போட்டியிட முடியுமா? என்பதும் சந்தேகமே.. அல்லது சீட் பேரத்துக்கான மறைமுக மிரட்டலா இது என்றும் தெரியவில்லை.

மறைமுக மிரட்டலா?
ஒருவேளை பாஜகவுடனேயே கூட்டணி அமைப்பாரா? ஏற்கனவே அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தபோது, தமிழகம் சார்ந்த கூட்டணி கட்சியினரின் செலவுகளை மொத்தமாகவே கவனித்து கொண்டது பாரிவேந்தர்தான் என்றார்கள்.. ஆனால், பாஜகவின் செயல்பாடுகள் பிடிக்காததால்தான், மரியாதை கிடைக்கவில்லை என்பதால்தான் அந்த கட்சியில் இருந்து விலகி வந்தேன் என்று ஒருமுறை பகிரங்கமாக பேட்டியும் தந்தார்.. அப்படி இருக்கும்போது மறுபடியும் பாஜகவுடனேயே கூட்டணி வைப்பாரா என்பதும் கேள்விக்குறியே.

டவுட்தான்
எப்படி பார்த்தாலும் சரி, பெரம்பலூருக்கு எத்தனையோ உதவிகளை பாரிவேந்தர் செய்திருக்கிறார்.. அந்த தொகுதியில் இலவச மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.. மக்களுக்காக அவர் முன்னெடுத்த காரியங்கள் நிச்சயம் அவரை கைவிடாது, எந்த கட்சியில் சேர்ந்தாலும் அவருக்கு சாதகம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால் திமுக வேறு கணக்கில் உள்ளதாக சொல்கிறார்கள்.. பார்க்கலாம் போகப் போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications