டெல்லிக்கு போன ரிப்போர்ட்.. வளைக்கப்பட்ட காங்கிரஸ் அழகிரி.. நீக்கப்படுகிறாரா? நோட்டமிடும் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. நேற்று ரூபி மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவரின் சஸ்பெண்ட் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி நேரடியாக தலையிட தொடங்கி உள்ளது.
பிரிக்க முடியாதது எது என்று திருவிளையாடல் படத்தில் சிவாஜி கேட்பார்.. இப்போது அதே கேள்வி கேட்கப்பட்டால்.. அது காங்கிரசும் - கோஷ்டி மோதலும் என்றும் என்று நாகேஷ் முதுகு வளைந்தபடி பதில் சொல்லி இருப்பார். ஆம்.. காங்கிரஸ் கட்சியில் என்ன நடந்தாலும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கே பிரிக்க முடியாத விஷயம் என்றால் அது கோஷ்டி மோதல்தான்.
அந்த நிலையில்தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சம் பெற்றுள்ளது. கடந்த 15ம் தேதி காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் ரூபி மனோகரன் ஆட்களுக்கும், கே.எஸ் அழகிரி ஆட்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

மோதல்
கே.எஸ் அழகிரியை மறித்து ரூபி மனோகரன் ஆட்கள் சில கேள்விகளை கேட்க முயன்ற நிலையில் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் பதவிக்கான ஆயுட்காலம் முடிந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கே.எஸ் அழகிரி தலைவர் பதவியில் நீடிப்பதற்கான திட்டங்களை போட்டு வருகிறார். இது பற்றி விசாரிப்பதற்காக நடந்த விவாதத்தில்தான் இந்த மோதல் ஏற்பட்டது. இதில் மண்டை உடைக்கும் அளவிற்கு சண்டை முற்றியது. காங்கிரஸ் வட்டார தகவல்களின்படி கே.எஸ் அழகிரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. மாறி மாறி தாக்கிக்கொண்டு, தலையில் ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு மோதல் உச்சம் பெற்றது.

உச்சம் பெற்ற மோதல்
இதையடுத்தே கே.எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லியில் புகார் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி சென்றனர். இந்த விவகாரம் டெல்லியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்வப்பெருந்தகை தலைமை தங்கபாலு, இளங்கோவன் மற்றும் அவரின் ஆட்கள் என்று பெரும் படையே டெல்லிக்கு சென்றது. இவர்கள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். இதில் கே.எஸ் அழகிரி குறித்து இவர்கள் சரமாரி புகார்களை வைத்து உள்ளனர். இதில் இப்போது நடவடிக்கை எடுக்க முடியாது. குஜராத் தேர்தல் முடியட்டும் என்று காங்கிரஸ் தலைமை கூறி இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் நியமனங்கள் தவறாக நடக்கின்றன. கட்சியில் தட்டிக்கேட்டால் மோதல் ஏற்படுகிறது. சமீபத்தில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலுக்கு கே. எஸ் அழகிரிதான் காரணம் என்று புகார் வைத்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைமை முடிவு
இந்த நிலையில்தான் மாநில அளவில் நடைபெற்ற விசாரணையில் ரூபி மனோகரன் ஆஜராகவில்லை. மாறாக எழுத்து பூர்வமாக மனு கொடுத்தார். இதை ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகம், ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்தது. கே. எஸ் அழகிரி உத்தரவின் பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த சஸ்பெண்டை செய்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் உட்பட கே. எஸ் அழகிரிக்கு எதிராக இருக்கும் நிர்வாகிகள் எல்லோரும் கொதித்துப்போய் உள்ளனர். இவர்கள் பலர் டெல்லிக்கு போன் செய்தி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தலைவர் கார்கே இருவரிடமும் புகார்களை அடுக்கி இருக்கிறார்கள்.

புகார்களை அடுக்கினர்
இதையடுத்தே. ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறானது. அதனால் இதை நிறுத்தி வைக்கிறோம் என்று தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவசரமாக முடிவு எடுத்துள்ளீர்கள் என்றும் கண்டித்து உள்ளார். இது கே. எஸ் அழகிரிக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அவரின் தலைவர் பதவி விரைவில் பறிக்கப்படுவதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. விரைவில் அவர் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் காங்கிரசில் புதிய தமிழ்நாடு தலைவர் நியமிக்கப்படவில்லை. இது டாப் நிர்வாகிகள் பலர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

திமுக
இந்த நிலையில்தான் காங்கிரஸ் புதிய தலைவர் யார் என்று திமுகதீவிரமாக கவனித்து வருகிறது. தங்களிடம் அனுசரணையாக செல்லும் நபர்தான் தலைவராக வேண்டும் என்று திமுக இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதாம். ஏனென்றால் புதிய தலைவர் கூட்டணியை எப்படி அணுகுகிறார், அதிமுகவுடன் செல்வாரா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. நாடாளுமன்றம் 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக திமுக இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதாம். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் செல்வப்பெருந்தகை இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். ரூபி மனோகரனும் தலைவராக தீவிரமாக முயன்று வருகிறார். சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் பெயர் கூட தலைவர் பதவிக்கான பெயரில் அடிபட்டது. ஜோதிமணி பெயரும் தலைவருக்கான ரேஸில் அடிபட்டது. இந்த ரேஸில் மிக முக்கியமானவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான மாணிக்கம் தாக்கூர் எம்.பி.












Click it and Unblock the Notifications