வெட்ட வெளிச்சமான சீக்ரெட்! எல்லா சாலையும் "ரோமை" நோக்கி.. எடப்பாடியும் சைலண்ட்.. அப்போ அதிமுக?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு எதிராக வந்தால் தமிழ்நாடு அரசியலில் முக்கியமான சில மாற்றங்கள் ஏற்படும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஓ பன்னீர்செல்வம் தொடுத்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது,
தற்போது இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.

என்ன சொன்னார்?
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில்.. பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது. அதோடு அவைத் தலைவரை நிரந்தரமாக தேர்வு செய்ததை ஒருங்கிணைப்பாளர் அங்கீகரிக்கவில்லை. அவர் அங்கிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார். அதனால் இவர் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தது செல்லாது. அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது தவறு. ஏனென்றால் அந்த பொதுக்குழுவில் அப்படி ஒரு தீர்மானமே கொண்டு வரப்படவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது.

எடப்பாடி வாதம்
எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில், ஜூலை 23ம் தேதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதனால் அந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் இரண்டாவது பொதுக்குழு நடத்தப்பட்டது. மெஜாரிட்டி உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையால் பொதுக்குழு நடத்தப்பட்டது. அதிமுகவில் எல்லாம் ஜனநாயக முறைப்படி நடக்கும், என்று வாதம் வைக்கப்பட்டது.

என்ன நடக்கும்
இந்த வழக்கில் தீர்ப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வந்தால் அதிமுகவில் ஜூலை 11ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே மீண்டும் நாட்டப்படும். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக மட்டும் தீர்ப்பு வந்தால், அவரின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும். அவர் மேல்முறையீடு செய்வார் என்றாலும்.. அரசியல் ரீதியாக அவருக்கு இது பின்னடைவுகளை ஏற்படுத்தும். இந்த நிலையில் தீர்ப்பு எதிராக வரும் பட்சத்தில் ஓ பன்னீர்செல்வத்திடம் வேறு சில பிளான்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

பிளான் என்ன?
அதன்படி தீர்ப்பு எதிராக வரும் பட்சத்தில் கண்டிப்பாக ஓ பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் சேருவார் என்று கூறப்படுகிறது. இப்போது அதிமுகவில் வழக்கு நடப்பதால் அவர் சசிகலாவை சந்திக்கவில்லை. வழக்கு மட்டும் எதிராக திரும்பினால் இவர்கள் கண்டிப்பாக கைகோர்ப்பார்கள். ஆங்கிலத்தில் எல்லா சாலையும் ரோமை நோக்கி என்று ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழிக்கு ஏற்ப தற்போது அதிமுகவில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் இதைத்தான் காட்டுகிறது.

டிடிவி தினகரன்
சமீபத்தில் டிடிவி தினகரன் கூட பல்வேறு ஊடகங்களில் நான் எதிர்காலத்தில் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். ஓ பன்னீர்செல்வத்தை விமர்சித்து வந்த டிடிவி முதல்முறையாக இறங்கி வந்துள்ளார். அதேபோல் சசிகலாவும்.. அதிமுகவில் வெளியே இருப்பவர்கள் ஒன்று சேரும் காலம் வந்துவிட்டது. இவர்கள் எல்லோரும் அதிமுகவில் கண்டிப்பாக ஒன்றாக இணைவார்கள். இது நிச்சயமாக நடக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.

வெளிச்சம்
இதனால் ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி எடப்பாடி இது வரை வாய் திறக்கவே இல்லை. மூன்று பேரும் இணைவது பற்றி எடப்பாடி கமெண்ட் எதுவும் அடிக்கவில்லை. ஜெயக்குமார் மட்டும் 3 பேரும் இணைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இவர்கள் அதிமுகவிற்கு வெளியே இணைவார்கள். அதிமுக உள்ளே இவர்கள் இணைய வாய்ப்பு குறைவு. அது மட்டும் நடக்காது கண்ணா என்று குறிப்பிட்டார்.

அதிமுக நிலைமை
ஒருவேளை ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் கண்டிப்பாக சசிகலா உடன் இணைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி சேரும் பட்சத்தில் அது முக்குலத்தோர் வாக்குகளை ஒன்று சேர்க்கும். இதனால் அதிமுகவிற்கு இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் சரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் ஒன்றாக இணைந்தால் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications