விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. அலட்சிய அரசியல்வாதிகள்.. அதிரடி தடை வருமா?
சென்னை : தமிழகத்தில் சட்டபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சி தலைவர்களும், அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரம் எந்த அளவிற்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதோ, அதே அளவிற்கு கொரோனா பரவலும் தமிழகத்தில் வேகமெடுத்து வருகிறது.
மக்கள் கொரோனா வழிகாட்டு விதிகளை முறையாக கடைபிடிக்காததே கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.

ஓராண்டாக விடாத கொரோனா
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியது. நோய் பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் 24 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்தும் முடக்கப்பட்டு, மக்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி கிடந்தனர்.

படிப்படியாக தளர்வுகள்
கொரோனா பரவல் குறைய துவங்கியதாலும், நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் கட்டுப்பாடுகளுடன், படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி வந்தது மத்திய அரசு. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பல விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுத்தியது.

காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்
படிப்படியாக கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டவுடன் மக்கள் கொரோனாவை மறந்து, சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டமாக பொது இடங்களில் நடமாட துவங்கினர். படிப்படியாக முகக்கவசம் அணிவதையும் மக்கள் கைவிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் கொரோனா பற்றிய பயம் மக்களிடம் மறைந்து போனது என்றே சொல்லலாம்.

அமுங்கி போன கொரோனா
மற்ற மாநிலங்களை விட தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், தேர்தல் மும்முரத்தில் அனைவரும் கொரோனாவை மறந்தே போயினர். முகக் கவசம் அணிய வேண்டும், கூட்டமாக செல்ல கூடாது என்ற விதிகளை அரசியல் தலைவர்களோ, கட்சி தொண்டர்களோ கண்டு கொள்ளவேயில்லை. தலைவர்களின் பிரசாரங்களில் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். தலைவர்களோ, தொண்டர்களோ பிரசாரத்திற்கு செல்லும் போது முகக்கவசங்கள் அணிவதில்லை.

தீவிரடையும் கொரோனா பரவல்
கோடை காலத்தில் தான் கொரோனா பரவல் தீவிரமடையும் என சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். இந்தியாவில் 19 மாநிலங்களில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 62 சதவீதத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தீவிரமடையும் கொரோனாவால் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தடை விதித்தால் நல்லது
பொறுப்பில்லாமல் தலைவர்கள் பலர் நடந்து கொள்வதால் பாதிக்கப்பட போவது அப்பாவி மக்கள் தான். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என அரசு உத்தரவிட்டாலும் அதை அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை. அரசியல் கூட்டங்களுக்கும், அதிக அளவில் மக்கள் கூடுவதற்கும் தடை விதித்தால் மட்டுமே கொரோனா பரவலில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications