அல்லாடும் நயினார் நாகேந்திரன்.. "லாக்"ஆன நெல்லை பாஜக.. திருநெல்வேலி தேர்தல்.. ஹைகோர்ட் பரபர உத்தரவு
சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க கோரி சென்னை ஹைகோர்ட்டில் தொடுக்கப்பட்டிருந்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரன் தரப்புக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன.. அந்தவகையில், வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படித்தான், கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாருக்கு சொந்தமான ஓட்டல் மேனேஜர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு, நயினாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
பெரும் சிக்கல்: ஆக, ஒருபக்கம் வருமானவரித்துறை + மறுபக்கம் தாம்பரம் போலீசார் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.. இப்போது, நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மனும் அனுப்பியிருக்கிறார்கள்.
"அமைச்சர் துரைமுருகன் தொடர்பான இடத்தில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்தார்களே, காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் இடத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்தார்கேளே, அவர்களுக்கெல்லாம் சம்மன் வழங்கப்படவில்லையே? வாகனத்தில் மட்டும் தினமும் 3 முறை சோதனை போடறாங்க.. நான் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காகவே, 3 அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி வருகிறார் நயினார் நாகேந்திரன்.
சம்மன் ஒப்படைப்பு: எனினும், ஏப்ரல் 22ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நயினார் வீட்டில் இல்லாததால் அவருடைய உறவினரிடம் அந்த சம்மன் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
வன்கொடுமை: "வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.. ஏற்கனவே, நயினாருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இன்றைய தினம் நெல்லையில் போட்டியிடவும் நயினாருக்கு செக் வைக்கப்பட்டுள்ளது, அதற்கு மேல் டென்ஷனை கூட்டியது.
முன்னதாக, கோவரதனின் மகன் கிஷோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, "நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்று வாக்குமூலம் அளித்துள்ளார். விரைவில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கோவரதன் போலீசார் விசாரணைக்கு ஆஜராவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறதாம்.
தள்ளுபடி: இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, "தேர்தல் நடவடிக்கைகள் முடியும் தருவாயில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.. வாக்குப்பதிவை தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேசமயம், மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்தபிறகு, தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தபோது, மனுதாரர் அந்த தொகுதியின் வாக்காளரோ அல்லது வேட்பாளரோ அல்ல என்பதால் தேர்தல் வழக்கை தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டினார்கள்.
இதையடுத்து தேர்தல் முடிந்ததுமே, அவர் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம்" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டினர். வாக்காளராகவோ அல்லது வேட்பாளராகவோ இல்லாத நிலையில் எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அம்மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications