விஜயகாந்த்துக்கு ஷாக் தந்த திமுக.. தொடர் தள்ளாட்டத்தில் தேமுதிக.. என்ன நடக்கிறது களத்தில்..?
விஜயகாந்த் கட்சி நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: வரப்போகும் தேர்தலில் தேமுதிக எப்படி தன்னை நிலைநிறுத்தி கொள்ள போகிறது? எப்படி தேறி மேலெழுந்து வரப்போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் உயர்ந்து பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தார் விஜயகாந்த்.. ஆனால் 2011-க்கு பிறகு எல்லாமே சறுக்கலாகிவிட்டது.
அதற்கு பிறகு எந்த தேர்தலிலும் அக்கட்சியால் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை. இதற்கு அக்கட்சி எடுத்த தவறான முடிவுகள் மட்டுமே காரணம்.

கூட்டணி
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலாவது விட்டதை விஜயகாந்த் பிடிப்பார் என்று நம்பப்பட்டது.. ஆனால்,இட பிரச்சினையில் கூட்டணியை முறித்துக் கொண்டு கோபத்துடன் வெளியேறியது. அத்துடன் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. பிறகு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் மண்ணைக் கவ்வியது.

சிக்கல்
இப்போது சிக்கல் என்னவென்றால், கட்சிக்கான அங்கீகாரத்தை இந்த முறையாவது நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.. ஆனால், அதைவிட பெரிய சிக்கலாக, கட்சி தாவல்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.. திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் எஸ்ஆர்கே பாலு தலைமையில் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து விஜயகாந்துக்கு ஷாக் தந்துள்ளனர். முக்கிய நிர்வாகிகள் இனியும் தேமுதிகவில் இருந்தால் எதிர்காலம் இருக்காது என்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளில் அவர்கள் இணைந்து வருகின்றனர்.

ஸ்டாலின்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற சமயம், பலரும் தேமுதிகவில் இருந்து திமுக பக்கம் தாவுவதற்கு தயாராக இருந்தார்கள்.. தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக, அந்தந்த மாவட்ட செயலாளர்கள், திமுக தலைமையிடம் வலியுறுத்தினார்கள்.. ஆனால், முதல்வர் ஸ்டாலின்தான் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.. விஜயகாந்த் மீது தனி பிரியத்தை ஸ்டாலின் எப்போதுமே வைத்துள்ளார்.. அதனால்தான், "விஜயகாந்த் மனம் நோகும்படி எதையும் செய்யாதீர்கள்' என்று மா.செ.க்களிடம் வாய்மொழி உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

தேமுதிக
இப்போதும் முதல்வர் சொன்னதில் மாற்றமில்லை என்றாலும், ஆங்காங்கே ஒருசிலர் திமுக பக்கம் தாவ ஆரம்பித்துள்ளனர்.. போதாக்குறைக்கு "தேமுதிகவுக்கு கூட்டம் வரலைன்னு சொன்னா செவிட்டுல விடுங்க" என்று விஜய பிரபாகரன் பேசிய பேச்சு, நீண்ட நாள் கழித்து மறுபடியும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.. கட்சிக்கான நிதி, செலவுகளில் ஏற்கனவே முக்கிய நிர்வாகிகள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த பிரச்சனைகள் தேமுதிகவுக்குள் வெடித்து கிளம்பி வருகிறது.

விஜயகாந்த்
இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவினர் எந்தவித உற்சாகமின்றியும் காணப்படுகிறார்களாம்.. கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதால் பல இடங்களில் அக்கட்சியினர் போட்டியிடாமலேயே விலகியுமுள்ளனர்.. அதேபோல, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து இடங்களிலுமே அந்தக் கட்சி போட்டியிடவில்லை... ஆட்கள் இல்லாததுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். மற்றொருபுறம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நாங்கள் களமிறங்கியுள்ளோம் என்று நம்பிக்கையாகவும் சொல்கிறார்கள்.

வாய்ப்பு
எனினும், தொடர் தோல்வியை சந்தித்து வரும் தேமுதிக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.. எனினும், மற்ற கட்சிகளைப் போன்று போட்டியிட வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது களமிறங்கியுள்ளது.. ஒருவேளை இந்த தேர்தலிலும் தேமுதிக மண்ணை கவ்வினால், வருங்கால வளர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.. கட்சியின் சின்னத்தையும் எத்தனை காலத்துக்கு தக்க வைத்து கொள்ளும் என்பதும் விளங்கவில்லை.. எனினும் தன்னை நிலைநிறுத்தி கொள்ள அக்கட்சி, முழுவீச்சில் போராடி கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications