விஜயகாந்த் ராசி வொர்க்அவுட் ஆகுமா? 14, 23 ஆ? தேமுதிக கணக்குக்கு திமுகவின் அவுட் ஆப் ஆப்ஷன்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் தேமுதிக கூட்டணிக்காக யாருடன் பேரம் பேசி வருகிறது என்பதை பாருங்கள். அதிலும் அந்த எண்ணிக்கையிலேயே சீட் வேண்டும் என அடம்பிடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போது வரை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு இன்னும் முடிவாகவில்லை.

பாமகவில் தற்போதைய நிலவரப்படி, நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதனால், பாமக இரண்டாகப் பிரிந்து, அன்புமணி பாமக பாஜகவுடனும், ராமதாஸ் பாமக திமுகவுடனும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணிக்கு பாமக வந்தால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்னவாகும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேமுதிகவின் நிலைப்பாடு
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தது. அப்போது தொகுதிப் பங்கீட்டின்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்ததாகவும், அதை அதிமுக மீறியதாகவும் தேமுதிக குற்றம்சாட்டியது. ஆனால், அதிமுக இதனை மறுத்தது. இதனால், அதிமுக மீது தேமுதிகவுக்கு அதிருப்தி நிலவுவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தேமுதிக தங்களது கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், தேமுதிக ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுகவுடன் பேரம் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.
14, 23 சீட்டுகள் மர்மம் என்ன?
தேமுதிக திமுக கூட்டணியில் இணைவதாக இருந்தால் 14 சட்டசபைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும், அதிமுக கூட்டணியில் இணைவதாக இருந்தால் 23 சட்டசபைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என இருபுறமும் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு பேரம் பேசி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 14, 23 என்ற எண்ணிக்கையின் மர்மம் குறித்து தேமுதிக வட்டாரங்களில் விசாரித்தபோது, "விஜயகாந்தின் ராசி எண் 5. எனவேதான் ஆரம்பத்தில் இருந்தே 5 கூட்டுத்தொகை வரும் வகையில் சீட்டுகளைப் பெற்று வருகிறோம்" என்று அவர்கள் கூறினர்.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டபோது, அக்கட்சிக்கு 41 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. (4 + 1 = 5)
அதேபோல், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. (1 + 4 = 5)
கூட்டுத்தொகை 5 வரும்படி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிமுக, திமுகவிடம் கேட்டு வருவதாகவும் தேமுதிக தரப்பு தெரிவித்துள்ளது.
திமுகவின் பதில்
இதுகுறித்து திமுக தரப்பில் கேட்டபோது, "தேமுதிக கூட்டணி பேசி வருவது உண்மைதான். ஆனால், இரட்டை இலக்கத்தில் எல்லாம் எப்படி கொடுப்பது? எங்கள் கூட்டணியில் ஏற்கெனவே பல கட்சிகள் உள்ளன. அவர்களும் தற்போது கூடுதல் சீட்டுகளைக் கேட்க வாய்ப்புள்ளது. அப்படியிருக்கும் நிலையில், விஜயகாந்த் இல்லாத தேமுதிகவுக்கு எந்த நம்பிக்கையில் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளை ஒதுக்குவது? விஜயகாந்தின் ராசி 5 என்றால், 2014-ல் என்னவானது? எனவே, கூட்டுத்தொகை 5 வர வேண்டும் என்றால் வெறும் 5 சீட்டுகளை வேண்டுமானால் ஒதுக்கலாம்" என்று தெரிவித்தனர்.
தேமுதிகவின் இந்த வியூகம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த அளவு பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications