குழப்பிய கூகுள் மேப்.. வீட்டு வாசலில் தூங்கியவர் மீது காரை ஏற்றிய பெண்! அலறிய சென்னை
சென்னை: சென்னையில் கூகுள் மேப் பார்த்துக்கொண்டே காரை ஓட்டிய பெண், வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது காரை ஏற்றி இறக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரியான பாதையை கண்டுபிடிக்கவும், குறுக்கு வழியை தெரிந்து கொள்ளவும், போக்குவரத்து நெரிசல்களை அறியவும் கூகுள் மேப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, காடுகள், நீர் நிலைகள், முக்கியமான இடங்கள், கடைகள், கோயில்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், சார்ஜிங் ஸ்டேஷன் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளவும் கூகுள் மேப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இந்த மேப் தினமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதியதாக இதில் சில அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் மேப்பை வைத்து நிலத்தின் உரிமையாளர்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல கடந்த கால வரைபடத்தையும், தற்போதைய கூகுள் மேப்பையும் வைத்துக்கொண்டு நீர் நிலைகள், காடுகளின் பரப்பளவு எந்த அளவுக்கு சுருங்கியிருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துவிட முடியும்.
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் ஹைலைட்டாக, வாகன ஓட்டிகளுக்குதான் கூகுள் மேப் பெரிதும் பயன்படுகிறது. இதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. சில நேரங்களில் மேப் தவறாக வழிகாட்டிவிடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கூகுள் மேப்பை நம்பி செல்லும் பலர் மோசமான அனுபவத்தை எதிர் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது நடந்திருக்கிறது.
அதாவது, சென்னையில் கூகுள் மேப்பை நம்பி காரை இயக்கியவர், வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி இறக்கியுள்ளார். சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். இரவு வீட்டில் இடப்பற்றாக்குறையால் உறவினர்கள் சிலர் வீட்டின் முன்புள்ள சாலையில் உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு அவ்வழியாக காரில் வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த வைஷாலி என்ற பெண் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, காரை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த சாலை முட்டு சந்து என்று தெரியாததால் காரை நிறுத்திய அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்
கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ள நிலையில், மது போதையில் காரை ஓட்டி வந்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications