நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து ஜாலியாக இருக்க வற்புறுத்துகிறார்.. கணவர் மீது ஆசிரியை புகார்
சென்னை: சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் காவல் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் புகார் அளிக்க வந்த ஆசிரியை ஒருவர், நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வரும் தனது கணவர் அவர்களுடன் ஜாலியாக இருக்க வற்புறுத்துவதாக பரபரப்பு புகார் ஒன்றை கூறினார். திடுக்கிட வைக்கும் இந்த புகார் குறித்த விவரத்தை பார்க்கலாம்.
சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பல்வேறு இடங்களில் காவல்துறை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சென்னை பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் உள்பட 12 காவல் மாவட்டங்களில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்றது.

கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு செய்தார். இந்த குறை தீர்ப்பு முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார்களை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில், கீழ்ப்பாக்கம் துணை காவல் ஆணையர அலுவலகத்தில் நடந்த போலீஸ் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆசிரியை ஒருவர் புகார் அளிக்க வந்தார். அவருடன் அந்த ஆசிரியையின் சகோதரரும் குவிந்து இருந்தனர்.
புகார் அளிக்க வந்த பெண்ணும், சகோதரரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க தொடங்கினர். அதில் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் திடுக்கிட வைக்கும் விதமாக அமைந்தது. அந்த ஆசிரியை கூறுகையில், "ஆசிரியராக பணியாற்றும் எனது கணவர் ஆபாச படங்களை பார்த்து பாலியல் கொடுமை அளித்தார். கேரளாவில் மனைவிகளை தங்கள் நண்பர்களுக்கு விருந்தாக்கும் சம்பவம் நடைபெற்றதை போன்று எனது கணவரும் என்னை வற்புறுத்துகிறார்.
அதாவது, அவரது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வரும் எனது கணவர் அவர்களுடன் என்னை ஜாலியாக இருக்க கட்டாயப்படுத்துகிறார். நான் ஏற்கனவே இது குறித்து காவல்துறையில் புகார் அளித்த போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கூறினார். அந்த பெண் பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போதே அங்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை அழைத்து புகாரை பெற்றுக் கொண்டனர்.
பகீர் புகாரை அளித்த பெண்ணின் கணவர் அரசு ஆசிரியர் என்றும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. புகார் அளித்த பெண்ணை அவரது கணவர் விவாரத்து செய்யும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவர் மீது பெண் அளித்த இந்த திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை கொடுத்தது.
காவல் குறை தீர்ப்பு முகாமில்,மேலும் பலரும் பல்வேறு விதமான புகார்களை அளித்து இருந்தனர். கணவர் மீது ஆசிரியை அளித்த புகார் உள்பட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். கேரளாவில் இதே போன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனைவியை தங்களுக்குள் மாற்றி உல்லாசமாக இருந்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் திடுக்கிட வைத்தது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 24 குழுக்கள் இதே போன்று செயல்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் இந்த விவகாரம் அதிரவைத்தது. தற்போது அதேபோன்ற பாணியில் தனது கணவர் அவருடைய நண்பர்களுக்கு தன்னை விருந்தாக்க வற்புறுத்துவதாக ஆசிரியை அளித்த புகார் அதிரவைத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications