சென்னை வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்.. ஆண் குழந்தை பிறந்த பின் அலேக்காக தூக்கிய அதிகாரிகள்
சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே மனைவிக்கு வீட்டில் வைத்தே மரபுவழியில் கணவர் பிரசவம் பார்த்தார். இதில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் பெண்ணின் கணவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பெயர் சுகன்யா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இப்போது மனோகரன் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னை குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் சுகன்யா 3வது முறையாக கர்ப்பம் ஆனார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் தான் இன்று சுகன்யாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது வீட்டில் இருந்த மனோகரன், சுகன்யாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக வீட்டிலேயே வைத்து அவர் பிரசவம் பார்த்துள்ளார். மரபு வழிமுறையில் மனோகரன் தனது மனைவி சுகன்யாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3வது குழந்தைக்கு இருவரும் பெற்றோர் ஆகி உள்ளனர்.
இதனால் மனைவி சுகன்யாவுக்கு, மனோகரன் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பெற்றெடுத்த தகவல் வேகமாக பரவியது. அப்படியே சுகாதாரத்துறைக்கும் இந்த தகவல் பறந்தது. இதையடுத்து உடனடியாக சுகாதாரத்துறையினர் மனோகரன் வீட்டுக்கு வந்தனர்.
குழந்தை பெற்றெடுத்த சுகன்யா மற்றும் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசில் புகார் செய்தனர். மனோகரன் மீது புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் மனோகரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது ஆபத்தானது. மாறாக வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும்போது பெண்ணின் உயிருக்கும், குழந்தைக்கும் ஆபத்து என்பது ஏற்படும். பல சந்தர்ப்பங்களில் இத்தகைய ரிஸ்க்கை எடுக்கும்போது தாய், சேய் இறப்பு கூட ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரசவத்தின்போது பெண்ணை மருத்துவமனையில் அனுமதிப்பது தான் சிறந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அறிவுரைகளையும், விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகிறது. ஆனால் அதையும் மீறி மனோகரன் தனது மனைவி சுகன்யாவுக்கு வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications