கன்னியாகுமரி டூ சென்னைக்கு ஒரு ரூபாய் செலவில்லாமல்.. விடியல் அரசு பஸ்களில் பயணம் செய்து வந்த பெண்கள்
சென்னை: 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், 2021 மே மாதம் மகளிருக்கு டவுன் பேருந்துகளில் கட்டணமில்லை என்று அறிவிக்கப்பட்டது. சாதாரண நகர கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் தமிழ்நாடு முழுவதும் வசூலிக்கப்படுவது இல்லை.. இந்நிலையில் வேலூரை சார்ந்த கலைவாணி மற்றும் ஆற்காட்டை சேர்ந்த பானுமதி ஆகிய 2 பெண்கள் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை 6 நாட்களாக மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது, மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் விடியல் பயணத்திட்டம். இந்த திட்டம் எப்படி என்றால், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண் பயணிகள் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 7,705 மகளிர் விடியல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடியல் பயணம் தொடங்கப்பட்டதில் இருந்து 57.81 லட்சம் பெண்கள் தினசரி பேருந்துகளில் பயணம் செய்வதாக போக்குவரத்து துறை கூறியிருக்கிறது.. நகரங்களைவிட கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் எல்லாம் விடியல் பேருந்துகளாகவே உள்ளது. அதேபோல் சிறு நகரங்கள் மற்றும் ஓரளவு பெரிய நகரங்களிலும் விடியல் பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 1,711 பேருந்துகள் விடியல் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் பெண்களுக்கான பிரத்யேக கட்டணமில்லா பிங்க் பஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையின் படி மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் ஒரு பயனாளி மாதம் ஒன்றுக்கு சராசரியாக குறைந்தபட்சம் ரூ.888 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரை சேமிப்பதாக கூறப்படுகிறது. .
இந்தத்திட்டத்தின்படி பலர் தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றி பயணிக்க முடிகிறது. இந்நிலையில், மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வேலூரை சார்ந்த கலைவாணி மற்றும் ஆற்காட்டை சேர்ந்த பானுமதி ஆகிய 2 பெண்கள் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை 6 நாட்களாக மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இது குறித்து அவர்கள் பேசுகையில், "இந்தியாவில் முதன்மையாக திகழும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மகளிர் விடியல் பயணம் பேருந்து திட்டத்தில் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்று மக்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிப்ரவரி 1ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் என ஒவ்வொரு ஊர்களிலும் மகளிர் விடியல் பேருந்தில் பயணம் செய்து 6ம் தேதி மாலை சென்னைக்கு மகளிர் விடியல் பேருந்து மூலம் பயணம் செய்து வந்துள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புகள் உள்ளது என்பதற்காக விழிப்புணர்வு பயணமாக இதை செய்துஇருக்கிறோம். எல்லா நேரமும் பெண்களிடம் பணம் இருக்காது. அந்த நேரங்களில் இந்த இலவச பேருந்து பயணங்கள் பெண்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெண்கள் இவ்வளவு தூரம் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதற்கு சான்றாக எங்கள் பயணம் இருந்தது' என்றார்கள்.












Click it and Unblock the Notifications