அண்ணா சாலை முதல் அண்ணாநகர், மயிலாப்பூர் வரை அசத்தல் பணிகள்.. விரிவடைகிறது சென்னையின் பிரதான சாலைகள்
சென்னை: சென்னையில் டிராபிக் பிரச்சனையை தவிர்க்க, அடுத்தக்கட்ட நடவடிக்கையை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. இது சென்னைவாசிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை, போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.. அதனால்தான், மேம்பாலங்கள் மற்றும் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நெரிசல்: அந்தவகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த முடிவெடுக்கப்பட்டன..
அதன்படி, அண்ணா சாலை உட்பட 7 சாலைகள் விரிவாக்கம் செய்ய முதற்கட்ட பணிகளை மத்திய அரசு ஆரம்பிக்க போவதாகவும், இந்த 7 சாலைகளில் விரிவாக்கத்தை மேற்கொள்ளச் சாத்தியமான மேம்பாடுகளை அடையாளம் காணும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக, அண்ணா சாலை முதல் மத்திய கைலாஷ் வரையிலான 3 கிமீ சர்தார் படேல் சாலை, பாந்தியன் சாலை-கூவம் இடையேயான எத்திராஜ் சாலை (0.72 கிமீ ), கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை முதல் அண்ணாநகர் முதலாவது பிரதான சாலை வரையிலான கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை (1.4 கிமீ), நெல்சன் மாணிக்கம் சாலை- வள்ளுவர் கோட்டம் சாலை டேங்க் பண்ட் சாலை (1.1 கிமீ), அண்ணா சாலை-பாந்தியன் சாலை கிரீம்ஸ் சாலை, (1.3 கிமீ), சர்தார் படேல் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டது.
பிரதான சாலைகள்: அதுமட்டுமல்ல, சாலை விரிவாக்கத்துக்குத் தேவையான இடங்கள் ஆய்வு செய்து, கட்டிடங்களை கையகப்படுத்துவது, அந்த கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவது, விரிவாக்கத்திற்கு எத்தனை மரங்களை அகற்றுவது? என இதுகுறித்த விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பித்தபிறகே, சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படும் என்றும் அப்போது செய்திகள் வெளியாகியின.
இப்போது, சாலை விரிவாக்கம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதன்படி, நெரிசல் மிகுந்த சாலைகளை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியிருக்கிறதாம்.
மயிலாப்பூர்: முதல் கட்டமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருவான்மியூர் லட்டிஸ பாலம் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை 30.5 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, லட்டிஸ் பாலம் சாலையின் அகலம் 30.5 மீட்டராகவும், பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் நியூ ஆவடி சாலை 18 மீட்டராகவும் அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக சாலை ஓரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சில சாலைகளை விரிவுபடுத்துவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விரிவாக்கம்: இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது... முதல் கட்டமாக 4 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மற்ற சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் சாலையின் மேற்பரப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications